பல ஐடி நிறுவனங்கள், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அறிமுகப்படுத்திய ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை மூன்று வருடங்களாகவே கடைப்பிடித்து வந்தன. இப்போது மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு அந்நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. ஆனால், பல ஊழியர்கள் இதற்கு சம்மதிக்காமல் பல மாதங்களாகவே வீட்டில் இருந்து வேலை செய்துவருகின்றனர். இப்போது, அலுவலகம் வராத ஊழியர்கள், பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், சில ஊழியர்கள் அவர்களாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்வதாகவும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ராஜினாமா செய்வதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக டி.சி.எஸ் வெளியிட்ட செய்தியில், இவ்வாண்டு பெண்கள் அதிகமாக ராஜினாமா செய்ய முக்கிய காரணம், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நீக்கியதுதான் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விரிவாகப் பேச, Ecoinfinity எனும் பொருளாதார ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும் ஐ.டி துறையில் பணிபுரிந்துவருபவருமான மஞ்சரியிடம் பேசினேன். “பொதுவாகவே, பெண்கள் அதிகம் ஐ.டி நிறுவனங்களில்தான் வேலை செய்கிறார்கள். அதற்கு காரணம், ஐ.டி நிறுவனங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் நெகிழ்வுத்தன்மையும் வசதிகளும்தான். பொதுவாகவே நம் சமூகத்திலும் சரி, குடும்பங்களிலும் சரி, வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஆணுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அதே வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்ணிற்குக் கொடுக்கப்படுவதில்லை. நம் குடும்பங்களில் பெண்களின் வேலையும் வருமானமும் என்றுமே இரண்டாம் பட்சம்தான். இதனால், பெண்கள் திருமணம் முடித்து, கணவர் எங்கு பணிபுரிகிறாரோ அந்த இடத்திற்கு மாற்றலாகிப் போகிறார்கள். அதனால் பல இளம் பெண்கள் கல்லூரி முடித்து இரண்டு/மூன்று ஆண்டுகள் வேலை செய்ததும் பணியை ராஜினாமா செய்கிறார்கள்.
ஐ.டி நிறுவனங்களிலிருந்து 30-40 வயதுப் பெண்களே அதிகம் ராஜினாமா செய்வதாகத் தரவுகள் கூறுகின்றன. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் பெண்களின் மகப்பேறு. மகப்பேற்றுக்காக விடுமுறையில் செல்லும் பெண்களுக்கு மீண்டும் தேவையான பயிற்சியும், அவர்கள் பணியில் முழுமையாக ஈடுபட தேவையான கால அவகாசத்தையும் நிறுவனங்கள் கொடுப்பதில்லை. பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு அவர்கள் மீதே இருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, குழந்தையைப் பார்த்துக்கொண்டு, அலுவலக வேலையும் செய்ய முடிவதால், அவர்கள் வீட்டிலிருந்தே வேலையைத் தொடர விரும்புகிறார்கள். மேலும், சில ஐ.டி நிறுவனங்களில் இருப்பது போல வாரம் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டும் அலுவலகம் வரும் வேலைச் சூழலை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
நேராக அலுவலகம் வந்தால்தான் வேலை செய்ய முடியும் என்ற சூழலில், பெரு நிறுவனங்கள் பெண்களின் இந்தச் சிக்கலைப் போக்க, தங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையத்தை உருவாக்கலாம். இது பெண் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஆண் ஊழியர்களுக்குக்கூட உதவியாக இருக்கும். சிறு நிறுவனங்கள் குழந்தைகளை க்ரெச்சில் (Crèche) விட்டு வர ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் வேலை பார்க்கும் பெண்களில் பலரும் சிவகங்கை, பொள்ளாச்சி, தென்காசி, மையிலாடுதுறை போன்ற 2 & 3-ம் அடுக்கு நகரங்களில் இருந்துதான் வேலைக்கு வருகிறார்கள். கொரோனா சமயத்தில் சொந்த ஊருக்குச் சென்ற அவர்களை மீண்டும் வீட்டு வாடகைச் சுமை, சென்னையின் நெரிசலுடன் வேலைக்குத் திரும்பி வருமாறு கூறும்போது, ஊழியர்கள் அதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. ஐ.டி நிறுவனங்கள், மெட்ரோ நகரங்களிலிருந்து 2 & 3-ம் அடுக்கு நகரங்களில் கிளை அலுவலகத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே இந்த மாற்றங்கள் கூறுகின்றன. பல ஐ.டி நிறுவனங்கள் ஏற்கெனவே சென்னையிலிருந்து கிளை அலுவலகங்களை உருவாக்கிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது" என்கிறார்.
2022-ல் LinkedIn நடத்திய ஆய்வில், பத்தில் எட்டுப் பெண்கள் அதாவது, 83% வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் வேலையில் நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் அதிகமான வேலை அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள், சம்பளம் கொடுப்பதில் பாகுபாடு, சமமான வாய்ப்பு அளிப்பதில் பாகுபாடு காட்டும் நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என்றும், அதனால் 70% பெண்கள் ஏற்கெனவே அதுபோன்ற நிறுவனங்களிலிருந்து வேலையை ராஜினாமா செய்வதாகவும், அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
வேலை இடத்திலும், வேலையிலும் நெகிழ்வுத்தன்மை இருக்கும் போது, அது தங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், குடும்பத்துடன் கொஞ்ச நேரம் செலவு செய்யவும் உதவியாய் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். மேலும், அவர்களின் மன அழுத்தம் குறைந்து வேலையில் கூடுதலாக கவனம் செலுத்த முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுபோன்ற வேலையில் நெகிழ்வுத்தன்மையை ஊழியரிடம் கேட்கும் பெண்களுக்கு, அதன் விளைவாக பதவி உயர்வு, போனஸ் போன்றவை மறுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
சில தனிப்பட்ட வேலைக்காகவும், உடல்நிலை முன்னேற்றத்திற்காக வேலையில் இருந்து சில மாதங்கள் இடைவெளி எடுப்பதையும் நிறுவனங்கள் ஊழியர்களின் பின்னடைவாகப் பார்ப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்காத நிறுவனங்களிலிருந்து பெண்கள் அதிக அளவில் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இது வெறும் பெண்களின் பிரச்னையாகப் பார்க்காமல், நிறுவனங்களின் கொள்கையில் இருக்கும் சிக்கலாகவே அணுக வேண்டும். வேலையில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் குறிப்பாக இளைஞர்களும் கேட்கிறார்கள்.
ஏற்கெனவே உலகளவில் இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். உலக வங்கியின் தரவுகள்படி, இந்தியாவில் வெறும் 24% பெண்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். அதே சமயம் சீனாவில் 61% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி பெண்களாக இருக்கும்போது, அவர்களில் வெறும் 21% சதவிகிதத்தினர் மட்டுமே வருமானம் ஈட்டக்கூடிய பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உலகளவில் இந்தியாவின் பொருளாதாரச் சூழலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மக்கள் விரும்ப முக்கிய காரணம்:
-
பொதுவாக அலுவலகங்கள் எல்லாமே மெட்ரோ நகரங்களில் அமைந்திருப்பதால், சுற்றியுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் வேலைக்காக மெட்ரோ நகரங்களுக்குக் குடிபெயர வேண்டியுள்ளது. இதனால் ஊழியர் மட்டுமல்லாமல் அவருடைய மொத்தக் குடும்பமும் சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு வெளியேறுகின்றனர்.
-
நகரத்தில் வீட்டு வாடகையில் தொடங்கி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், உணவு, போக்குவரத்து என மக்களுக்கான செலவு மிகவும் அதிகமாகிறது.
-
குடும்பத்தினரால் நகரத்திற்குக் குடிபெயர முடியாதபோது, வேலைக்காகத் தனியாக குடும்பத்தை விட்டு வசிப்பதும், ஊழியர்களின் மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
-
மேலும் நகரங்களில் வசிப்பவர்கள், அதிக வாடகையைக் கொடுக்க முடியாமல் நகரத்திற்கு வெளியே வசித்து 20-30 கிலோமீட்டர் பயணித்து அலுவலகத்திற்கு வருகிறார்கள். அது தரும் அலைச்சலும் செலவும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
-
அலுவலகத்தில் செய்யும் அதே வேலையை, வீட்டில் முடித்துக் கொடுத்து, போக்குவரத்து நேரம், வீட்டு வாடகைச் செலவு போன்றவற்றைக் குறைத்து, குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிகிறது.
-
வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முடிவதில்லை.
இதுபோன்ற முக்கிய வசதிகளை ஊழியர்கள் இனி விட்டுக்கொடுக்கத் தயாராய் இல்லை. தங்கள் அலுவலகப் பணியுடன் சேர்ந்து தங்கள் தனிப்பட்ட கடமைகளையும், வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தும் வேலையில் இருக்கவே இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
from Latest news https://ift.tt/KWsXuE6
0 Comments