முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக் கூறி வருகிறார். நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியை அப்படியே வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், கட்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது.
அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் செல்லும் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் செல்லாது என பல்வேறு குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக நீதிமன்ற உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வர, அவர் தலைமையில் கட்சி இயங்கிவருகிறது.
ஒரு சிலரைத் தவிர கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உட்பட 95 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஜக்கையன், முன்னாள் எம்.பி-யும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலைராஜ், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது ஆதரவாளர்களைக் கட்சியின் புதிய நிர்வாகிகள் என அடுத்தடுத்து நியமிக்கத் தொடங்கினார். சொந்த மாவட்டத்தில் இருந்த நிர்வாகிகளும் எடப்பாடி அணிக்கு சென்றுவிட்டதால், சில புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார். இந்த நிலையில், தன் ஆதரவாளர்களை அதிகப்படுத்த, மாவட்டத்தில் தி.மு.க., அ.ம.மு.க-போல கட்சியை வலுப்படுத்த வடக்கு, தெற்கு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி, இரண்டு நாள்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் போடியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து மாவட்ட பிரிப்புக்காக வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறார். இந்த வாக்கெடுப்பில் 120 பேர் வரை மாவட்ட பிரிப்புக்கு ஓகே சொல்லியிருக்கின்றனர்.
ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக சையதுகான் இருக்கிறார். தற்போது மற்றொரு மாவட்டச் செயலாளரைத் தேர்வுசெய்ய வேண்டும். அதற்கும் வாக்கெடுப்பு நடத்தலாம் என ஓ.பி.எஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால், கட்சி நிர்வாகிகளோ `அதற்கு வாக்கெடுப்பு தேவையில்லை நீங்களே முடிவு செய்யுங்கள்' எனத் தீர்மானமாகக் கூறியதாகத் தகவல் வெளியானது.
இதில் தற்போதைய மாவட்டச் செயலாளர் சையதுகான் கலந்துகொள்ளவில்லை. அவரும் விரைவில் அணி தாவ இருப்பதாகத் தகவல் வெளிவந்திருக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ``கட்சியை வளர்க்கத்தான் மாவட்டத்தைப் பிரிக்க வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. இனிமேல்தான் பிரிக்கப்படுமா மற்றொரு மாவட்டச் செயலாளர் தேர்வுசெய்யப்படுவாரா என்பது தெரியவரும்” எனக் கூறி மேற்கொண்டு எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, `ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் மாவட்ட பொறுப்புக்கு வர வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருந்தது. தேனியில் தற்போது ஓ.பி.எஸ், அவரின் மூத்த மகன் ரவீந்திரநாத் ஆகியோரை விட எல்லோரும் எளிதில் அணுகும் மனிதராகவும், கட்சிக்காரர்களை டீல் செய்வதில் சிறந்தவராகவும் ஜெயபிரதீப் இருக்கிறார். அவர் மாவட்டச் செயலாளராக வந்தால்தான் தேனியில் ஓ.பி.எஸ் பெயர் நிலைக்கும். தற்போது எங்கள் பக்கம் இருந்தவர்கள் எடப்பாடி அணிக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். அதனால் இந்த இக்கட்டான நிலையில் ஜெயபிரதீப் கட்சி செயல்பாட்டுக்கு நேரடியாக வந்தால்தான் சரியாக இருக்கும். அதற்காகத்தான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. விரைவில் ஜெயபிரதீப் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்படலாம்’ என்றனர்.
from Latest news https://ift.tt/zvXpe9R
0 Comments