நீலகிரி: முடிவுக்கு வராத சாதிச் சான்று விவகாரம்; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைச்சரிவு பகுதியில் பல கிராமங்கள் இருக்கின்றன. ஏக்குனி, பன்னிமரா ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களை `மலைவேடன்' என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் போராடிவருகின்றனர்.

பள்ளியை முற்றுகையிட்ட‌ பெற்றோர்

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று தொடங்கிய நிலையில், தங்களுக்கு மலைவேடன் சாதிச் சான்று வழங்கவில்லையென்றால், பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கக் கோரி ஏக்குனி உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கிராம மக்கள், "தமிழகத்தின் பழனி உள்ளிட்ட பகுதிகளில் மலைவேடன் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். நீலகிரியைப் பொறுத்தவரை இந்த இரண்டு கிராமங்களில் மட்டுமே பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்துவருகிறோம். எங்கள் முன்னோர்களுக்கு `இந்து மலைவேடன்' என்று பழங்குடி சாதிச் சான்றிதழை அரசு வழங்கியிருக்கிறது.

நீலகிரியில் மலைவேடன் பழங்குடிகள் கிடையாது என 2000-ம் ஆண்டிலிருந்து சாதிச் சான்றிதழ் வழங்குவதை அரசு தடைசெய்திருக்கிறது. இதனால், உயர்கல்வி, அரசுப் பணிகளில் சேரவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கவைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. `உடனடியாக எங்களுக்கு மலைவேடன் சாதிச் சான்றிதழ் வழங்கவில்லையென்றால், எங்கள் குழந்தைகளின் டி.சி-யைக் கொடுத்துவிடுங்கள். மீண்டும் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொள்கிறோம்' என அரசிடம் முறையிட்டிருக்கிறோம்" என்றனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்த விவகாரம் குறித்து நீலகிரி வருவாய்த்துறை அதிகாரிகள், ``இந்த மக்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்றிருக்கிறோம். இந்தப் பிரச்னையின் உண்மைத்தன்மையை விசாரித்துவருகிறோம். அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உயரதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைக்கு முற்றுகையை கைவிட்டு கலைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்" என்றனர்.



from Latest news https://ift.tt/93OY4Nr

Post a Comment

0 Comments