"பஜக-வல சறபனம மககள சததரவதகக ஆளககபபடகறரகள" - சஞச மஸதன படட

கள்ளச்சாராய சர்ச்சை, எதிர்கட்சியினரின் கண்டனங்கள், தம்பியின் கட்சிப்பதவி பறிப்பு என தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

"தி.மு.க-வைச் சேர்ந்த சாராய வியாபாரி மரூர் ராஜா கைது செய்யப்பட்டதை தொடந்து, செஞ்சி பகுதியிலும் தி.மு.க-வைச் சேர்ந்த 5 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல் உள்ளதே?’’

"அவர்கள் கள்ளச்சாராய வியாபாரிகள் அல்ல. அரசாங்க பார்களில் நேரம் கடந்து விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகள்தான் அவர்கள்மீது இருக்கிறது. ஆனால் எந்த அளவிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றுதான் பார்க்க வேண்டும். 'நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம். நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று சொன்னால் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் சொல்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான பேர் வழக்கில் இருக்கிறார்கள். அதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓரிருவரும் உள்ளனர் என தெரியும்போது, அது செய்தியாகிவிடுகிறது. மற்றபடி, யார் யார் எந்தெந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று அநாகரிகமாக பட்டியலிட விரும்பவில்லை. நேரம் காலம் தேவைப்பட்டால், காலத்தின் கட்டாயமானால் சாராய விற்பனை பற்றி நீண்ட பட்டியலை கொடுப்பேன்."

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"உங்களுக்கு அடுத்த முகமாக, மாவட்டத்தில் மருமகன் ரிஸ்வான் அட்ராசிட்டி செய்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்புகிறார்களே..?"

"இது எல்லா இடத்திலும் சொல்வது. நான் வீராப்பு பேசும் ஆளில்லை. 'தலையை சீவிவிடுவேன், இதை சீவி விடுவேன்' என்று சொல்வதற்கு. எனக்கு கட்சிதான் முக்கியம். அவருடைய உழைப்பு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். கட்சிக்கு யார் பாதகமாக இருந்தாலும், அவர்களை நான் தள்ளி வைத்துவிடுவேன்."

"உங்கள் தி.மு.க-வில், சிறுபான்மையினர்களான நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு, அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பதவிப்பறிப்பு, இப்போது உங்களை சுற்றியும் சர்ச்சை வளையம் எழுந்திருக்கிறது. இது சிறுபான்மையினர் பிரதிநிதிகளுக்கு போதாத காலமா..?"

"எல்லா காலமும் நல்ல காலம்தான். எதையும் தாங்கும் இதயம் தி.மு.க., 'தேடிய அறிவையும், கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும்' என்பதுதான் கலைஞரின் வாக்கு. சோதனைகளை தாங்கி செல்வதுதான் எங்கள் இயக்கத்துக்கானது. அதேநேரம், பாதகமான செயலில் ஒருவர் நம்மீது ஈடுபட்டால், அதை சாதகமாக்க சிந்திப்பதுதான் தி.மு.க-வின் லட்சியம். கலைஞரின் தொண்டன் நான். தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக் கொள்பவனாக என்றென்றைக்கும் இருப்பேன் என்பது உறுதி."

அமைச்சர் மஸ்தான்

"இரண்டு ஆண்டுகால ஆட்சியில், பல்வேறு சாதனைகளை செய்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். உங்கள் துறையில் நீங்கள் செய்த முக்கிய சாதனைகள் என்னென்ன?"

"ஒரு முதலமைச்சர் இதுவரை 12 முறை அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்றால்... நாட்டின் மீதும், மக்களின் மீதும் அவருக்குள்ள அக்கறையில்தான். குறிப்பாக என்னுடைய துறையை பொருத்தவரையில், சிறுபான்மை மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களுக்கான இட ஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா எனவும் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். இது மட்டுமின்றி, சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க வங்கி கடன் மற்றும் அம்மக்களின் வாழ்வாதாரம் உயர வங்கி கடன் வழங்கப்படுகிறது. இந்த ஓராண்டில் மட்டும் தமிழக முழுவதும் 6800 சிறுபான்மையினர்களுக்கான (கிறிஸ்துவர், முஸ்லிம்) மகளிர் உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் தங்களுடைய பங்களிப்புடன் மகளிர் பெரும் கடன்களுக்கு, ஆண்டுதோறும் மானியமும் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுடைய வழிபாட்டு தலங்களை பராமரிப்பதற்கும், அடக்க ஸ்தலங்களை பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதோடு... அடக்க ஸ்தலங்களுக்கு இட வசதியும் செய்து தந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். அயலக தமிழர்களுக்கு பாதுகாப்பான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாம்களில் தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது. இப்படியாக இன்னும் இருக்கிறது..."

‘‘ஆனால், பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் முஸ்லீம் சமூகத்தினரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக கிடப்பிலேயே கிடக்கிறதே?’’

"மாண்புமிகு முதலமைச்சரால், ஒரு வழக்கறிஞர் குழுவை அதற்காக நியமனம் செய்து, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் கட்சி நடத்திய மாநாட்டிலும், முதல்வர் அதைப்பற்றி சொல்லியிருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலும் நாங்கள் முதலமைச்சரிடம் அதைப்பற்றி சொன்னோம். அவற்றை கருத்தில் கொண்டு, "சட்டரீதியாக பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும்" என்று சட்டமன்றத்திலே முதலமைச்சர் பதிவு செய்திருக்கிறார்கள். என்றென்றைக்கும் இந்திய சட்டத்தை மதிக்கின்ற இயக்கம் தி.மு.க. வன்முறையை தவிர்த்து, வறுமையை வெல்வோம் என்பதுதான் எங்களுடைய நோக்கம்."

முதலமைச்சர் ஸ்டாலினுடன், அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினர்.

"தமிழகத்தில் எதிர்க்கட்சி நாங்கள்தான், தங்களின் கட்சி வளர்ந்துவிட்டது என பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார். நீங்கள் அந்த கட்சி வளர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?”

"இது ஜனநாயக நாடு, அண்ணாமலை சொல்வதில் ஆச்சரியம் இல்லை. பல்வேறு அரசியல் கட்சியை துவங்குபவர்கள், 'அடுத்த முதலமைச்சர் நான்தான்' என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தொண்டர்களை ஊக்குவிக்கவும் சிலர் அப்படி சொல்வதுண்டு. அண்ணாமலை எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருப்பது அ.தி.மு.க தான். அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து... அண்ணாமலை, "நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி" என்று சொன்னால் அவர்கள் உண்மையான எதிர்க்கட்சியா, பொய்யான எதிர்க்கட்சியா என்ற சரியான விடை தெரியும்."

"கர்நாடக தேர்தலின் போது இஸ்லாமிய மக்களுக்கான 4% தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றது பா.ஜ.க. இது போன்ற பா.ஜ.க-வின் செயல்பாடு தமிழக இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடையே எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?"

"பா.ஜ.க என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தோடு செயல்படுகின்ற கட்சி. அவர்களுடைய நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. சிறுபான்மையினர் நலன் சார்ந்து செயல்படுகின்ற எந்த மாநிலம், அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களை சங்கடப்படுத்துவதில் குறிக்கோளாக இருப்பதுதான் பா.ஜ.க. அதனால்தான் கல்விக்கு வழங்கிய உதவித்தொகை கூட நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறது. என்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாவலாக இருப்பது தி.மு.க அரசுதான். ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிந்தனையில் தான் பா.ஜ.க அரசு உள்ளது என்பதற்கு உதாரணமாக, எல்லா மாநிலத்திலும் அந்த பிரச்னைகள் நடைபெறுகிறது. சிறுபான்மை மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், பல்வேறு காலகட்டங்களில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், பல சிரமங்களை அம்மக்கள் மீது அவர்கள் புகுத்துகிறார்கள் என்பதுதான் நாடறிந்த உண்மை."

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்

"அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அ.தி.மு.க என்றீர்கள். எதிர்க்கட்சியாக அக்கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?"

"முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தான் பதவியேற்ற கொரோனா காலகட்டத்தை சரியாக சமாளித்து, கொரோனா நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கினார். ஆனால், பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போது, 'மக்களுக்கு கொரோனா காலகட்டத்தில் 5000 ரூபாய் கொடுங்கள்' என்று நாங்கள் சொன்னோம். அப்போது, "ஏது பணம்" என்று கூறி, 1000 ரூபாய் கொடுத்துவிட்டு முடியாது என்றார். ஆனால் இப்போது அவர், 'இதையெல்லாம் செய்யுங்கள்' என்ன சொல்கிறார். எதிர்க்கட்சியாக இருந்து சொல்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஆளுங்கட்சி நல்லதை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கிறார் என்றுதான் அதை எடுத்துக்கொள்கிறோம்."



from Latest news https://ift.tt/7RXuj2x

Post a Comment

0 Comments