`அரிசிக்கொம்பனை மூணாறுக்கு கொண்டு வர வேண்டும்' - பழங்குடியினர் போராட்டம்!

மூணாறு, சின்னக்கானல் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற யானை அரிசிக்காக குடியிருப்புகளை சேதப்படுத்துவதாகவும், உயிர்பலி வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, ஏப்ரல் 29 ஆம் தேதி யானையை பிடித்த கேரள வனத்துறை, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிசிக்கொம்பன் யானை, மேகமலையில் தஞ்சமடைந்து, 25 நாள்களுக்கு பிறகு மீண்டும் மேகமலையில் இருந்து தனது வாழ்விடமான மூணாறு நோக்கி புறப்பட்டது.

அரிசிக்கொம்பனுக்காக போராட்டம்

இடையே, குமுளியில் மக்கள் யானையை லோயர்கேம்ப் பள்ளத்தாக்கு பகுதிக்குள் அடித்து விரட்டினர். லோயர்கேம்ப் வந்த அரிசிக்கொம்பன் திசை தெரியாமல் கம்பம் நகருக்குள் புகுந்தது. கடந்த 7 நாள்களாக கம்பம் அருகே வனத்தை ஒட்டிய பகுதிகளில் உணவுக்காக சுற்றித்திரிந்த யானையை, 3 கும்கிகளின் உதவியோடு பிடித்து களக்காடு முண்டந்துறை புலி காப்பக பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

இந்நிலையில், மூணாறு சின்னக்கானல் பகுதி பழங்குடியினர் உள்ளிட்ட மக்கள், அரிசிக்கொம்பனை எங்கள் பகுதிக்கு திரும்ப கொண்டு வாருங்கள் என்ற கோரிக்கையுடன் போராடத் தொடங்கியுள்ளனர்.

நேற்று இரவு போராட்டத்தில் இறங்கிய பழங்குடி மக்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அவர்கள், `மூணாறில் இருந்து யானையை பிடித்து சென்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் வாழ்வியலில் இணைந்திருந்த யானையை பிரித்து சென்றதை தாங்கி கொள்ள முடியவில்லை.

பழங்குடியினர்

மேலும், இங்கிருந்து சென்ற யானை தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அந்த யானையால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இருந்தது இல்லை. தன் வாழ்விடத்திற்கு யானை போராடி கொண்டிருகிறது. எனவே அரிசிக்கொம்பனை மீண்டும் எங்கள் பகுதிக்கு கொண்டுவர வேண்டும். இல்லையெனில் வரும் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவெடுத்துள்ளோம்' எனக் கூறியுள்ளனர்.



from Latest news https://ift.tt/dSQGNWe

Post a Comment

0 Comments