``நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டிருக்கிறார்” - கனிமொழி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நேற்று வந்திருந்த தி.மு.க துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யிமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், "தமிழக ஆளுநர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமானது" என்றார்.

பின்னர் தி.மு.க அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு கனிமொழி பேசுகையில், "தலைவர் கலைஞர் பிறந்த நாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க மற்றும் அரசு சார்பில் நடத்த நம் முதல்வர் பணித்திருக்கிறார். சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, `நாம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற அன்பு கட்டளையை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய தேர்தல் இது என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

நாகர்கோவில் தி..மு.க அலுவலகத்தில் கனிமொழி

மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்ற அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். சிலபேர் இந்த பகுதியில் நாம் வெற்றிபெற்றுவிடலாம் என கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இங்கு மீண்டும் தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றிப்பெற்றுவிடக்கூடாது. அதற்காக இங்கு ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதில் கலந்துகொண்ட அத்தனைபேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியில் அதிகமானோரை இணைத்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். மற்ற அணிகளிலும் இளைஞர்கள், இளம் பெண்களை ஈடுபடுத்த வேண்டும். மகளிர் அணியில் பெண்கள் வர வர கட்சியின் வெற்றி நிலைத்து நிற்பதாக மாறும். இன்னும் அதிகமாக பெண்களை நம் இயக்கத்தில் இணைத்து, அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க-வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சுயமரியாதையை ஏற்படுத்தியது தி.மு.க.

நிர்வாகிகள்.கூட்டத்தில் பேசிய கனிமொழி

இன்று இந்தியா முழுவதும் உள்ள இயக்கங்களை இணைத்து, நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்கு உறுதுணையாக நிற்பவர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தி.மு.க உயிர் மூச்சு என செயல் பட வேண்டும். எந்த மாச்சர்யங்கள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பாதிக்காது என ஒற்றுமையுடன் நாம் செயல்பட வேண்டும். இன்றிலிருந்து நம் வேலையை தொடங்க வேண்டும். தேர்தல் தொடங்கிய பிறகு பணியை தொடங்கக்கூடியவர்கள் நாம் அல்ல. கழகத்தில் உள்ளவர்களை செயல்பட தூண்ட வேண்டும்.

கலைஞர் புகழைப்பாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. தி.மு.க தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்லும் வாய்ப்பு கலைஞர் நூற்றாண்டு மூலம் கிடைத்திருக்கிறது. இன்று தமிழ்நாடு இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் அதற்கு கலைஞரும் தி.மு.க-வும் காரணம். எதிரணியினர் வாட்ஸ்அப்பில் பொய் செய்திகளை பரப்புகிறார்கள். அதை முறியடிக்கும் வகையில் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்து கூற வேண்டும். கலைஞர் நம்முடன் உறுதுணையாக நிற்கக்கூடியவர். இன்றிலிருந்து நாம் வேலை செய்து மிகப் பெரிய வெற்றியை தரவேண்டும்" என்றார்.



from Latest news https://ift.tt/0UDJQ3M

Post a Comment

0 Comments