புதுக்கோட்டை: `இரவு வரை நடந்த சோசதனை’ - ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி

தர்மபுரி மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவருமான மலர்விழி, தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய 2018-20 கால கட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளுக்கு, சொத்துவரி ரசீது, குடிநீர் கட்டணம் வசூல் ரசீது, தொழில் வரி ரசீது புத்தகங்கள் உட்பட இதர கட்டண புத்தகங்கள் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு மாறாக தன்னிச்சையாக கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புத்தகங்கள் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படாமல் அதிகபட்ச விலைக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து அவர் கொள்முதல் செய்துள்ளார். இதில், ரூ.1கோடியே 37லட்சம் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பதாக, தர்மபுரி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட இரண்டு ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அ.தி.மு.கவைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல். புதுக்கோட்டையில் உள்ள இவரது வீடு, கடுக்காகாடு கிராமத்தில் இருக்கும் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு ஒப்பந்ததாரரான தாகீர் உசேனின், புதுக்கோட்டை பொன்நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மாலை வரையிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

அரசு ஒப்பந்ததாரரான பழனிவேல், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அரசு ஒப்பந்தப் பணிகளில் ஊழல் செய்ததாக பழனிவேல், அவரின் சகோதரர் முருகானந்தம் ஆகிய இருவரின் வீடு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக விவரம் அறிந்த சிலரிடம் விசாரித்தோம். "கடந்த சில ஆண்டுகளிலே பழனிவேல், முருகானந்தம் சகோதரர்கள் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.

பழனிவேல் அ.தி.மு.கவில் இருந்தாலும் தி.மு.க ஆட்சியிலும், தனது செல்வாக்கை பயன்படுத்தி பல ஒப்பந்தங்களை பெற்று விடுகிறார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான எல்இடி லைட் பொருத்துதல், சாலையில் ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்துதல், கொரோனா காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை சப்ளை செய்ததில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரின் பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரெய்டு நடத்தினாங்க. தற்போது, மீண்டும் நேற்று போலீஸ் ரெய்டு நடைபெற்றிருக்கிறது" என்றனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் ஒரே நேரத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது.



from Latest news https://ift.tt/1r2fqxV

Post a Comment

0 Comments