மடயன அமரககப பயணம: நவன ஆயதஙகள வஙகம இநதய... ஆததரததல சன!

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்த நாட்டுடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறார். இது நமது அண்டை நாடான சீனாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன ஒப்பந்தங்கள்? சீனா ஏன் பதற்றம் அடைகிறது? அலசுவோம்.

மோடி - பைடன்

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதேபோல பரஸ்பரம் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம், யோக தின விழா, வெள்ளை மாளிகை பிரம்மாண்ட உணவு விருந்து, நாடாளுமன்ற உரை என மோடி - பைடனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலக நாடுகளால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த பயணத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தாகியிருக்கும் ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சீனாவின் கண்களை கடுமையாக உறுத்தியிருக்கின்றன.

மோடி வருகையும் பென்டகன் அறிவிப்பும்:

மோடியின் அமெரிக்க வருகை உறுதிசெய்யப்பட்டதுமே, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் துணை செயலாளர் இலே ரேட்னர், `` பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை இந்திய-அமெரிக்க உறவில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும். இரு நாடுகளின் உறவுகளில் புதிய அத்தியாயங்கள் தொடங்கப்படும். இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு தொடர்பாக விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும். முக்கியமாக, இரு நாடுகளும் இணைந்து போர் விமானங்களுக்கான இன்ஜினை தயாரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பயணத்தில் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்!" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன்

கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்கள்:

இந்தநிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். குறிப்பாக, அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சக்திவாய்ந்த எம்கியூ-9 ப்ரிடேட்டர் (MQ-9 Reaper Predator Drones) வகையின் 30 ஆளில்லா ட்ரோன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த எம்கியூ-9 ப்ரிடேட்டர் வகை ட்ரோன்கள் 48 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறனுடையது. சுமார் 50,000 அடி உயரத்தும் மேலே வரை செல்லும். இடைவிடாமல் 6,000 கி.மீ. வரை தொடர்ச்சியாகப் பறக்கும் சக்திவாய்ந்தது. இந்த எம்கியூ-9 ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏவுகணைகள் மூலம் வானிலிருந்தபடி, நிலத்தில் இருக்கும் பீரங்கிகள், படைகள் மற்றும் கடலில் இருக்கும் போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் போன்ற இலக்குகளை குறிபார்த்து தாக்கி அழிக்கலாம். மேலும், இதில் லேசர் வெடிகுண்டுகளைப் பொருத்தி எதிரிகளின்மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் வல்லமையும் இந்த ட்ரோன்களுக்கு உண்டு.

எம்கியூ-9 ப்ரிடேட்டர்

ஏற்கெனவே கடந்த வாரம், இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன எம்க்யூ- 9 ப்ரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அமெரிக்காவில் உள்ள ஜி.இ.ஏரோஸ்பேஸ் (GE Aerospace) என்ற விண்வெளி நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. முன்னதாக, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்தபடியே, இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (HAL) தயாரித்து வந்த தேஜஸ் ரக விமானங்களுக்கு வேண்டிய எப்-414 ரக இன்ஜின்களை தயாரித்து அனுப்பி வைத்துவந்தது. இந்தநிலையில், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம், போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் முதல்கட்டமாக எஃப்-414 ரகத்தை சேர்ந்த 99 இன்ஜின்கள் இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.

மோடி பைடன்

இதுதவிர, இருநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான இஸ்ரோவும் நாசாவும் இணைந்து செயல்படும் வகையில், ஆர்டிமிஸ் திட்ட ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. மேலும், சீனா சொந்தம் கொண்டாடிவரும் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் குழு பரிசீலிக்க முடிவு செய்திருக்கிறது.

இந்தியா - சீனா மோதல்

சினத்தின் உச்சத்தில் சீனா:

இந்தநிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் ராணுவப் பாதுகாப்பு ரீதியில் நட்பு பாராட்டுவது, இருநாடுகளுக்கும் பரம எதிரிகளாக சித்தரிக்கப்படும் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் உலக அரசியல் நோக்கர்கள், ``சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பனிப்போரை அமெரிக்கா கூர்தீட்டுவதாக சீனா கருதுகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என விமர்சித்திருக்கிறார். இதற்கு சீனா, `ஜோ பைடனின் கருத்து சீனாவின் அரசியல் கண்ணியத்தை மீறிய, முற்றிலும் அபத்தமானது உண்மைக்கு எதிரான பேச்சு! அப்பட்டமான அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி!' என கண்டித்திருக்கிறது. இது வார்த்தைப் போருடன் நிற்காமல் சீனாவும் பதிலுக்கு ஆயுதக் குவிப்பிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட வாய்ப்பிருக்கிறது!" என எச்சரிக்கிறார்கள்.



from Latest news https://ift.tt/oR8HaED

Post a Comment

0 Comments