மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமான நேற்று காலை வந்தது. வழக்கம்போல பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் இருவரின் லக்கேஜை சோதனை செய்தபோது, அதில் சந்தேகப்படும் வகையில் ஏதோ பொருட்கள் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, அந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த சூட்கேஸினுள் சிறிய பெட்டிகளுக்குள் ஆமைக் குஞ்சுகளை அடைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
அந்தவகையில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கிட்டத்தட்ட 5 டிரே அளவுள்ள சிறிய அளவிலான 6,850 உயிருள்ள ஆமைக் குஞ்சுகளை, விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மதுரையைச் சேர்ந்த முகமது அசன், ராமநாதபுரத்தை சேர்ந்த அபீப் நாசர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரிடமும் விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தி வரப்பட்ட இந்த ஆமைக் குஞ்சுகள் அனைத்தும் சிகப்பு காது சிலைடர் வகை ஆமை ரகத்தைச் சேர்ந்தவை. இவை தென்கிழக்கு அமெரிக்க மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டது. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆமைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு இனங்கள் தடை செய்யப்படவில்லை. அந்தவகையில், இவ்வகை சிகப்பு காதுகள் கொண்ட சிலைடர் ஆமைகள் இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. அந்த நோக்கத்தில் தான் இந்த கடத்தல் சம்பவமும் நடந்திருக்கிறது.
கைப்பற்றப்பட்ட இந்த ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததற்கான முறையான எந்த ஆவணங்களும், கடத்தி வந்த நபர்களிடம் இல்லை. எனவே, கைப்பற்றப்பட்ட இந்த ஆமைகள் அனைத்தும் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உலக அளவில் கண்டறியப்பட்டுள்ள 356 ஆமை வகையில் 29 நன்னீர் ஆமைகள் மற்றும் ஆமை இனங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 80 சதவீதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/qTu4Ltl
0 Comments