‘ஸ்டார் ரேட்டிங்’ என்பது வாஷிங் மெஷினில் ஆரம்பித்து, சினிமா ஸ்டார்கள் முதல் பயணிகள் கார்கள் வரை மிக மிக முக்கியம்! கார்களைப் பொருத்தவரை இப்போது குளோபல் என்கேப் எனும் க்ராஷ் டெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டு, அதில் கொடுக்கப்படும் ஸ்டார் ரேட்டிங்தான் இப்போது இந்திய அளவில்… இல்லை உலகளவில் பிரசித்தம். ஜெர்மனியில் 2011–ல் குளோபலாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தனியார் சாரிட்டியான இந்த குளோபல் என்கேப் (Global NCAP)–ன் சோதனையில் ஒரு கார் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கினால், அந்த கார் நாட்டின் பாதுகாப்பான காராகக் கருதப்படுகிறது.

அப்படி GNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய நம் ஊர் கார்கள், டாடா அல்ட்ராஸ், டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி 700, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ், ஸ்கோடா ஸ்லாவியா – இப்படி சில கார்கள் உலவி வருகின்றன. அப்படி என்ன இதில் ஒரு சிறப்பு – இங்கே நிஜமான ஒரு காரை 64 கிமீ வேகத்தில் ஓடவிட்டு, மோதவிட்டுச் சோதனை நடத்துவார்கள். பெரிய பேரிகேடு அல்லது இரும்பிலோ அல்லது வேறு வாகனங்களை விட்டோ பக்கவாட்டில்... நேரில்... பின் பக்கத்தில் என்று பல ஏரியாக்களில் மோதவிட்டுச் சோதனை செய்வார்கள். அதில் ஏற்படும் சேதாரங்களை வைத்து ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்படும்.
க்ராஷ் டெஸ்ட்டைப் பொருத்தவரை ஜப்பான் NCAP, ஈரோ NCAP, சீனா NCAP, ஆஸ்திரேலியா NCAP, ஏசியன் NCAP, கொரியன் NCAP என்று பல NCAP–கள் உண்டு. இருந்தாலும் சினிமாவின் ஆஸ்கார் போல, இந்த குளோபல் என்கேப்தான் ஆட்டோமொபைலின் ஆஸ்கார் எனும் அளவுக்குப் பெயர் பெறும் அளவுக்கு உச்சம். ‘ஏன் இந்தியாவில் இந்த க்ராஷ் டெஸ்ட்… அதாவது NCAP வரவில்லையா’ எனும் கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே BNCAP, ARAI, ICAT என்று சில அரசாங்க ஏஜென்ஸிகள் இருந்தாலும், ஸ்டார் ரேட்டிங் இல்லாமல் இருந்தது.
இப்போது BNCAP எனும் பெயரில் இந்தியாவுக்கென சொந்தமான ஒரு கார் அசெஸ்மென்ட் புரோக்ராமை அமல்படுத்தி, வாகனங்களுக்கு ஸ்டார் ரேட்டிங் தர நம் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. NCAP என்றால், New Car Assessment Programme என்று அர்த்தம். நம் நாட்டுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் BNCAP–ன் ஒரு முக்கியமான 5 விஷயங்கள் இதோ!
-
குளோபல் என்கேப்பைப் போலவே, நம் BNCAP–லும் கார்களுக்கான பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டு, ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்படும். அதன் முடிவுகள் அரசாங்க BNCAP வலைதளத்தில் வெளியாகும். மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட Apex Committee–ன் ஒப்புதல்படி - இதில் 1 முதல் 5 ஸ்டார் ரேட்டிங் வரை கார்களின் பாதுகாப்பைப் பொருத்து ஸ்டார் ரேட்டிங் வழங்குவார்கள். சிங்கிள் ஸ்டார் ரேட்டிங் என்றால், பாதுகாப்பே இல்லாத கார் என்று அர்த்தம்.
-
இந்த ரேட்டிங் சோதனை வாலன்ட்டீயராக நடக்கும். இந்த டெஸ்ட்டுக்கு நிஜ கார்கள் வேண்டுமே! அந்த கார்களை, அந்தந்த கார் தயாரிக்கும் OEM நிறுவனங்களே (Original Equipment Manufacturers) BNCAP–க்கு வழங்கலாம். அல்லது, BNCAP அதிகாரிகள் டீலர்ஷிப்பில் இருந்து Random ஆக கார்களைத் தேர்ந்தெடுத்து சோதனைகளுக்கு உட்படுத்துவார்களாம்.
-
அரசாங்க ரிலீஸின்படி கார்களின் பாதுகாப்புச் சோதனை கீழ்க்கண்ட பாராமீட்டர்களின்படி ரேட்டிங் தரப்படும். கார்களின் அமைப்பு – அதாவது கட்டுமானத் தரம் (Structural Safety), பெரியவர்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அந்த காரில் எந்தளவு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது மற்றும் அந்த கார்களில் பாதுகாப்பு வசதிகள் எந்தளவு இருக்கின்றன? இந்த அளவுகோல்களின்படி ஸ்டார் ரேட்டிங் தரப்படும்.
-
PTI ஏஜென்ஸியின் செய்திப்படி, அந்த கார்கள் M1 கேட்டகிரியில் (பயணிகள் கராஜ் காராக, 3.5 டன் எடைக்குட்பட்ட, 8 பேர் வரை அமரும் இடவசதி கொண்ட காராக) உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அல்லது இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
BNCAP என்றால் ஒரு மரியாதை வேண்டும் இல்லையா… அதற்காக குளோபல் NCAP டெஸ்ட் புரோட்டோகால்களுடனும், கொள்கைகளுடனும் இது அலைன் செய்யப்பட்டு, அந்த நடைமுறைகளின்படி BNCAP சோதனைகள் நடக்குமாம்.
இப்போதைக்கு நம் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஒரு காரைப் பாதுகாப்புச் சோதனைக்குட்படுத்த வேண்டும் என்றால், தங்கள் தயாரிப்பு சாம்பிள்களை இதுவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இதில் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும். இந்த BNCAP அந்தச் செலவினங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், BNCAP டெஸ்ட்படி ஸ்டார் ரேட்டிங் கொடுப்பது நம் இந்தியாவுக்கும் பெருமைதானே!

இந்த BNCAP புரோக்ராம், வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. எல்லாம் ஓகே! இந்த ஏரியாவில் பணம் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் BNCAP–க்கு மக்களிடம் நல்ல ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும்!
from Latest news https://ift.tt/d8QvLJ3
0 Comments