Doctor Vikatan: தரததககணட நறகம மனவரச பறகள... இனவசபள களப உதவம?

Doctor Vikatan: என் மகளுக்கு வயது 13. அவளுக்கு முன்வரிசைப் பற்கள் சற்று துருத்திக்கொண்டு இருக்கின்றன. க்ளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். அவளோ அது வெளியே தெரியும் என்பதால் தயங்குகிறாள். வெளியே தெரியாதபடி இன்விசிபிள் க்ளிப் வந்துள்ளதாகவும் அதைப் பொருத்திவிடச் சொல்லியும் கேட்கிறாள். அது உண்மைதானா... இந்த வயதில் அதை உபயோகிக்கலாமா... செலவு அதிகமாகுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்

பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை

பற்கள் சீரான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தால், முன்பெல்லாம் கம்பிவைத்து நேராக்குவதும், உலோகத்தால் ஆன பிரேசஸ் பொருத்துவதும் (சின்னச்சின்ன உலோக கியூப்களை பற்களோடு பொருத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஒயருடன் இணைத்து கம்பியால் பற்களை இழுத்துச் சீரமைக்கும் முறை) வழக்கத்தில் இருந்தது. இதன் மூலம் சீரற்ற பற்களை ஒழுங்குபடுத்துவதும், மேலும் கீழுமாக உள்ள பற்களை சீராக்குவதும் செய்யப்பட்டது.

பார்ப்பதற்கு உறுத்தலாகத் தெரிவது, சிரிக்கும்போது சங்கடத்தை ஏற்படுத்துவது, சுத்தப்படுத்துவதில் சிரமம் என உலோக பிரேசஸ் பொருத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன. உணவுத்துகள்கள் உள்ளே சிக்கிக் கொள்ளும். எல்லா உணவுகளையும் சாப்பிடுவதிலும் அசௌகர்யம் இருந்தது. மெட்டல் கிளிப்பும் ஒயரும் குத்தி வாயில் புண்கள் வரும்.

இதற்கு மாற்றாக செராமிக் பிரேசஸ் வந்தன. பார்ப்பதற்கு பற்கள் போலவே இருக்கும். ஒவ்வொரு பல்லுடனும் பொருத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஒயருடன் இணைத்து எலாஸ்டிக் பேண்டு மூலம் இழுத்துப் பொருத்துவார்கள். இதிலும் பற்களில் நிற மாற்றம், எலாஸ்டிக் பேண்டு பிய்ந்து போவது, ஒயர் குத்துவது போன் பிரச்னைகள் இருந்தன.

இதற்கடுத்து வந்தவைதான் இன்விசிபிள் பிரேசஸ். இவற்றை இன்விசிபிள் அலைனர்ஸ் என்று சொல்வோம். பற்களின் வடிவிலேயே, டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கும். உயர்தர பிளாஸ்டிக்கால் செய்யப்படுவது.

கழற்றி மாட்டும் க்ளிப்

இப்போது இவற்றிலேயே இன்னும் உயர்தர தயாரிப்புகள் வந்துவிட்டன. உபயோகிக்கவும் எளிதாக இருக்கும்படி தயாரிக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பற்களின் மேல் டிரெஸ் போடுவது போன்றது இது.

குழந்தையின் 6 வயதில்தான் முதல் நிரந்தரப் பல் முளைக்கத் தொடங்கும். அந்த வயதிலேயே குழந்தையை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்வது அவசியம். அவர் உங்கள் குழந்தையின் பற்களின் அமைப்பைப் பரிசோதித்து, நிரந்தரப் பற்களின் வளர்ச்சி, அவற்றின் தன்மை என சகலத்தையும் பார்த்துவிட்டு பற்கள் சீரமைப்பு குறித்து அறிவுறுத்துவார்.

இன்விசிபிள் பிரேசஸை எந்த வயதினரும் உபயோகிக்கலாம். பற்கள், ஈறு மற்றும் எலும்புகள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சொத்தையோ, எலும்புத்தேய்வோ, ஈறு பிரச்னையோ இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுடைய தேவை என்ன, பற்களின் ஆரோக்கியம் பார்க்கப்பட்டு, தேவைப்படும் எக்ஸ் ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பற்களின் அமைப்பில் பிரச்னையா அல்லது தாடையிலா என்பதைப் பார்த்துவிட்டு டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யப்படும். அதைப் பொறுத்து எந்த மாதிரி பிரேசஸ் தேவை என்பது முடிவு செய்யப்படும்.

இன்விசிபிள் பிரேசஸை பயன்படுத்துவதும் சுத்தப்படுத்துவதும் மிக எளிது. கழண்டு வராது. சாப்பிடும்போது கழற்றி வைத்துவிட்டு, சாப்பிட்ட பிறகு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதைப் பராமரிக்கவென மருத்துவர் சொல்லும் டிப்ஸை சரியாகப் பின்பற்ற வேண்டும். இதன் விலை சற்றே அதிகம்தான்.

பல் கிளிப்

வாய் சுகாதாரமும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் நேரத்துக்கு இதை உபயோகிக்க வேண்டும். பிரேசஸை அகற்றியதும் ரீட்டெயினர்ஸ் என்ற ஒன்றை மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்கச் சொல்வார். அதையும் உபயோகித்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் முழுமையாகக் கிடைக்கும். எனவே உங்கள் மகளை பல் மருத்துவரிடம் நேரடி ஆலோசனைக்கு அழைத்துச் சென்று அவரது பரிந்துரையின் பேரில் முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/reBmJAD

Post a Comment

0 Comments