விகடனின் Doubt of Common Man பகுதியில் கும்பகோணத்தைச் சேர்ந்த செல்வி என்ற வாசகி "மழை பெய்யும் அளவை மில்லி மீட்டர், சென்டி மீட்டர் என்ற அளவுகளில் அளவிடுகிறார்களே… எப்படி?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே ...
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-08/cf77affe-1143-410e-b968-d809eecac18e/Doubt_of_common_man.jpg)
கடல் மற்றும் பூமியிலுள்ள பிற நீர்நிலைகளில் இருந்தும், சூரியனின் வெப்பத்தால் ஆவியாதல் எனும் செயல்முறையின் மூலம், நீரானது நீராவியாகி மேலெழுந்து செல்கிறது. மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து, ஒடுக்கமடைந்து சிறு நீர்மத்துளிகள் உருவாகின்றன. அவை, ஒரு தொங்கல் நிலையில் மேகங்களை உருவாக்குகின்றன. அம்மேகங்கள் குளிர்வடையும் போது, மேலும் ஒடுக்கமடைந்து பெரும் நீர்த்துளிகளாக மாறுகின்றன.
அவற்றின் எடை அதிகரிக்கையில் புவியீர்ப்பு விசை காரணமாக மேகங்களில் இருந்து நீரானது துளிகளாகி பூமியின் மேற்பரப்பில் மழையாக வந்து விழுகிறது. மழை விழும் போது, மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற அதிக வெப்பப் பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகி விடுவதுண்டு.
மழையை அளவிடுவதற்கு மழை அளவி (Rain Gauge) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதை மழைமானி என்றும் அழைக்கின்றனர். மழை அளவிகளில், நிலையான மழை அளவி (Standard Rain Gauge), சாய் வாளி மழை அளவி (Tipping Bucket Rain Gauge), ஒளியியல் மழை அளவி (Optical Rain Gauge), ஒலி தொடர்பான மழை அளவி (Acoustic Rain Gauge) என்று நான்கு வகையான மழை அளவிகள் அதிகமான பயன்பாட்டில் இருக்கின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/6191ca6b-0aa7-428a-a41d-b9989ec30e55/meteorology_rain_gauge_garden_rain_against_background_vineyard_meteorology_rain_gauge_garden_1930262.jpg)
1. நிலையான மழை அளவி - இது மிகவும் பொதுவான மழை அளவி ஆகும், இதில் மழைநீரைச் சேகரிக்கும் புனல் வடிவ சேகரிப்பான் மற்றும் சேகரிக்கப்பட்ட நீரை அளவிட ஒரு அளவிடும் உருளை உள்ளது.
2. சாய் வாளி மழை அளவி – மழை நீரைச் சேகரிக்கும் புனல் வடிவச் சேகரிப்பான் மற்றும் மழையின் அளவை அளவிட முன்னும் பின்னுமாக ஒரு சாதனம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
3. ஒளியியல் மழை அளவி - இந்த வகை மழை அளவியானது, மழையின் அளவை மதிப்பிடுவதற்கு, மழைத்துளிகளின் அளவையும் எண்ணிக்கையையும் கண்டறிய லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்துகிறது.
4. ஒலி தொடர்பான மழை அளவி - மழையின் அளவை மதிப்பிடுவதற்கு மழைத்துளிகளின் அளவையும், எண்ணிக்கையையும் கண்டறிய இந்த வகை மழை அளவியானது மீயொலி எனும் ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது.
பொதுவாக, மழை அல்லது பனியைச் சாதாரண மழைமானி எனும் நிலையான மழை அளவிக் கருவியைக் கொண்டு அளவிடலாம். இம்மழை அளவியானது 100 மி.மீ (4 அங்குலம் – பிளாஸ்டிக்) அல்லது 200 மி.மீ (8 அங்குலம் - உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை அளவி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டிருக்கும். உட்புற உருளையில் 0 மி.மீ முதல் 25 மி.மீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீர் அந்த உருளைக்குள் செல்லும்படி அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்த பின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-08/24846f00-a50b-4ffe-9728-a676fb09333c/Doubt_of_common_man.jpg)
மழை பெய்யும் நேரத்தில், ஒரு பொதுவான, இடர்பாடுகள் எதுவும் இல்லாத இடத்தில் மழை அளவியைத் திறந்து வைத்து, அப்போதைய நேரத்தைக் குறித்துக் கொள்கின்றனர். பொதுவாக, மழை அளவிடப்படும் நடைமுறை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் என்று கடைப்பிடிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்குப் பிறகு மழை அளவியில் சேர்ந்துள்ள நீரின் அளவை மில்லி லிட்டர் எனும் அளவில் எடுத்துக் கணக்கிடுகின்றனர். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லிட்டர் எனும் பன்னாட்டு அளவிடும் அலகிலேயே (International System of Units – SI) மழை அளவிடப்படுகிறது.
ஒரு மில்லி மீட்டர் மழை அளவு என்பது, ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு லிட்டர் மழை நீர் (லிட்டர் / சதுர மீட்டர்) வீழ்ந்திருக்கிறது என்று கொள்ளலாம். இவ்வழிமுறையினைக் கொண்டே மழை பெய்த அளவு கணக்கீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, மழை அளவியில் சேர்ந்த மழை நீரின் அளவு 10 மி.மீ என்று இருப்பதாகக் கொண்டால், அதை, ஒரு சதுர மீட்டருக்கு 10 லிட்டர் எனும் அளவில் (10 லிட்டர் / சதுர மீட்டர்) மழை பெய்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/b904b5a7-587d-48bd-be9d-d4a2f0ef118a/Rain.jpg)
இதனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது? என்று கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, தேனி நகராட்சியின் பரப்பளவு 22.23 சதுர கிலோமீட்டர் (22.23 x 10,00,000 சதுர மீட்டர்) என்பதால், தேனியில் 1 மி.மீ மழை என்பது 22,23,00,000 லிட்டர் மழை பெய்ததாகக் கொள்ளலாம்.
மழையின் அளவு 10 மி.மீ.க்கு அதிகரிக்கும் போது, செ.மீ எனும் அளவில் மழையின் அளவு குறிப்பிடப்படுகிறது.
மழையை அளவிடுவதற்கு முன்பாக, கீழ்க்காணும் சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்வார்கள்.
* மழையை அளவிடுவதற்கு முன், அருகிலுள்ள மரங்கள் அல்லது குழாய்களில் இருந்து விலகி, திறந்த வெளியில் மழை அளவி நிலை நிறுத்தப்பட வேண்டும்.
* அளவீட்டின் அனைத்துப் பக்கங்களும் வானிலைக்கு வெளிப்பட வேண்டும்,
* அளவீட்டின் உட்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் அளவீட்டைத் தினமும் காலி செய்ய வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/7948911d-5f88-427a-b3c2-790ea3876b01/cyclone2_1670557091.jpg)
* மழை அளவீடுகளின் பயன்பாடு அதன் எச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, ஒரு சூறாவளியின் போது பலத்த காற்று வீசினால், பெய்த மழையின் சரியான அளவைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
* வழக்கமான வடிவமைப்பைக் கொண்ட மழை அளவி, அதைச் சுற்றியுள்ளக் காற்றைச் சீர்குலைத்து, காற்றோட்ட வேகத்தை அதிகரிக்கும். இது புனலின் நுனியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, அளவிடும் கருவியால் சேகரிக்கப்படும் மழைப்பொழிவின் அளவு குறைகிறது.
இதேபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை இங்கே பதிவிடுங்கள்!
from Latest news https://ift.tt/Bcjrzd5
0 Comments