`மத்தியில் தட்டிக் கேட்கும் தைரியம் முதல்வருக்கு இல்லை' என்ற எடப்பாடியின் கருத்து சரியா? - ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க

``கண்ணாடியைப் பார்த்து, தனக்குத் தானே துப்பியிருக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஏதாவது ஒரு விவகாரத்தில் ஒன்றிய அரசைப் பார்த்து ஒரு கேள்வியாவது எழுப்பியது உண்டா... அவ்வளவு ஏன், நாடே எதிர்த்து போராடும் மணிப்பூர் விவகாரம் குறித்து இன்றுவரை ஏதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா... பிழைப்புக்காகக் கட்சி நடத்தும் பழனிசாமி, தங்கள் ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்று முதல் ஆளாக பா.ஜ.க-வுடன் கைகோத்திருக்கிறார். என்றுமே அவர் ஒன்றிய பா.ஜ.க அரசின் அடிமையாகத்தான் இருந்திருக்கிறார், இருக்கிறார். அன்றும் இன்றும் பா.ஜ.க-வின் கட்டளைப்படிதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அதன் பிரதிபலனாகத்தான் இன்றுவரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் தொடங்கி பல முன்னாள் அமைச்சர்கள் வரை யார்மீதும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு பாதுகாத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, ஆட்சிப் பொறுப்பேற்று இந்த இரண்டு ஆண்டுகள் வரையிலும் சரி... ஒன்றிய பா.ஜ.க அரசு விடுத்த எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், அடிபணியாமல் தொடர்ந்து தைரியமாக எதிர்த்து நின்றுவருகிறார் முதல்வர் ஸ்டாலின். முதுகெலும்பு தேய்ந்த பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினருக்கு, தி.மு.க குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை.’’

இராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள் என்ற தவறான குற்றச்சாட்டை தி.மு.க-வினர் முன்வைத்தனர். ஆனால், அதே காலகட்டத்தில்தான் தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்து போராடி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெளியானது. அதேபோல, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கையை உறுதிசெய்தது... எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில்தான். ஆனால், தி.மு.க ஆட்சியில், மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் போராடிப் பெற்ற ஏதாவது ஒரு திட்டம் உண்டா... மாறாக, சொத்து வரியை உயர்த்திவிட்டு, `மத்திய அரசு சொன்னதால் செய்தோம்’ என்றார்கள். மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, `மத்திய அரசு சொன்னது செய்தோம்’ என்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘கோ பேக் மோடி’ கோஷமிட்டவர்கள், ஆட்சிக்கு வந்ததும் பிரதமருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்தானே... தி.மு.க அரசின் அவலங்களை திசைதிருப்ப மணிப்பூர் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். என்றுமே மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத் தட்டாமல் செய்துகொடுக்கும் கட்சியாகவே தி.மு.க இருந்திருக்கிறது. அவர்களின் வரலாறு அப்படி. ஆனால், அ.தி.மு.க மத்தியில் கூட்டணியிலிருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாநில உரிமைகளுக்காகவே போராடிவந்திருக்கிறோம்.’’



from Latest news https://ift.tt/ShpbDAB

Post a Comment

0 Comments