Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு இரவில் நைட் லேம்ப் இருந்தால்தான் தூக்கம் வரும். இன்னொரு குழந்தைக்கு அது பிடிப்பதில்லை. இரவில் வெளிச்சத்தில் தூங்குவது, இருட்டில் தூங்குவது இரண்டில் எது சரியானது? இந்த விஷயத்தை நான் எப்படி அணுக வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
முழுமையான இருட்டில் தூங்கும்போது, தூக்கத்தின் தரம் நன்றாக இருக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. இருளில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். அந்த ஹார்மோன்தான், நம் தூக்கத்துக்கு காரணம். விளக்கு வெளிச்சம் இருக்கும்போது இந்த ஹார்மோன் உற்பத்தி தடைப்படும்.
வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்களைப் போலவே, வெளிச்சம் இருந்தால்தான் தூக்கம் வரும் என்பவர்களும் இருக்கிறார்கள். வெளிச்சமான சூழலில் தூங்குவோருக்கு உடல் எடை அதிகரிப்பது, ரத்தச் சர்க்கரை அளவு கூடுவது, இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், வளர்சிதை மாற்றம் சீராக இல்லாதது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன.
தூக்கம் சரியாக இல்லாவிட்டால் அதன் விளைவாக நிறைய பிரச்னைகள் வரும். நல்ல தூக்கம் வேண்டுவோருக்கு, இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு காபி, டீ குடிக்கக்கூடாது, சத்தமில்லாத சூழலில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்படுவது போல, தூங்கும் அறையையும் இருட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இருட்டான சூழலில் தூங்கும்போது கண்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். சிறு குழந்தைகள் இருட்டைக் கண்டு பயப்படுவார்கள் என்பதால் இரவில் நைட் லேம்ப் போட்டுவிட்டு அவர்களைத் தூங்கப் பழக்குவோம்.
உங்கள் விஷயத்தில் இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பும் நேரரெதிராக இருப்பதால், வெளிச்சம் வேண்டாம் என சொல்லும் குழந்தையின் கண்களில் 'ஐ மாஸ்க்' மாட்டிவிட்டுத் தூங்கப் பழக்கலாம்.
நைட் ஷிஃப்ட் முடித்துவிட்டு பகலில் தூங்குவோருக்கும், அவர்களது அறையின் திரைச்சீலைகள் வெளிச்சம் ஊடுருவாதபடி டார்க் நிறத்தில் இருக்கும்படியும், ஐ மாஸ்க் பயன்படுத்தும்படியும் அறிவுறுத்துவோம். அப்போதுதான் அவர்களுக்கு மெலட்டோனின் ஹார்மோன் சீராகச் சுரக்கும். அதுதான் அவர்களது ஆழ்ந்த உறக்கத்துக்கும் உதவும். இந்தப் பழக்கம் உடனடியாக தூக்கத்தை வரவழைக்க மட்டுமன்றி, அந்தத் தூக்கம் தொந்தரவின்றி சீராக இருக்கவும் உதவும். எனவே உங்கள் குழந்தைக்கு ஐ மாஸ்க் பயன்படுத்துவதையோ, டார்க் நிற திரைச்சீலை பயன்படுத்துவதையோ முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news https://ift.tt/k6mZXLi
0 Comments