மருமகளின் ஆடம்பரம், தேய்ந்துகொண்டிருக்கும் மகனின் வாழ்க்கை, தீர்வு என்ன?! #PennDiary128

எங்கள் மகனுக்கு தூரத்தில் உறவில் பெண் பார்த்து திருமணம் முடித்துவைத்தோம். ஆரம்பம் முதலே மருமகள் ஆடம்பரத்தில் ஆசைகொண்டிருந்தார். ‘நானும் உன் மாமனாரும் மிடில் க்ளாஸ் குடும்பமாகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தோம். அவரது கடும் உழைப்பாலும், நான் சிக்கனமாகக் குடும்பம் நடத்தியதாலும் இன்று ஒரு ஹோட்டல் நமக்குச் சொந்தமாக இருக்கிறது. நீ ஆடம்பரங்களை குறைத்துக்கொள்’ என்று ஆரம்பத்திலேயே மருமகளிடம் கூறினேன். ஆனால் அப்படி சொன்னதாலேயே அவர் என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்.

money

நாங்கள் ஒரு ஹோட்டல் வைத்து நடத்திவருகிறோம். அதில் நன்றாகவே வருமானம் வந்தது. என் கணவரும் மகனும் அதில் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், என் மருமகள் எங்கள் வரவுக்கான வாழ்க்கை வாழாமல், எங்கள் தகுதிக்கும் அதிகமான வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருக்கிறார். கார் வாங்கியபோது, 25 லட்சம் ரூபாய் கார்தான் வாங்க வேண்டும் என்றார். ஆடை, ஆபரணங்கள் என வாங்கிக் குவித்தார். அடிக்கடி வெளியூருக்கு டூர் செல்வது, வருடம் ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா என்றெல்லாம் யோசிக்காமல் செலவு செய்தார். இவையெல்லாம் என் மகனுக்கு மூச்சு முட்ட வைக்கும் செலவுகள்தான் என்றாலும், சமாளித்து வந்தான்.

இந்நிலையில், நாங்கள் ஏற்கெனவே ஒரு வசதியான வீட்டில் வசித்து வரும் நிலையில், அதைவிட பெரிதாக, நவீன, ஆடம்பர வசதிகளுடன் ஒரு வீடு கட்ட வேண்டும் என்றார் மருமகள். ‘இப்போது தொழிலில் கிடைக்கும் லாபத்தில் இது சாத்தியமில்லை. பொறுத்திருந்து செய்யலாம்’ என்றோம் மகனிடம். ஆனால், அவனை உடனடியாக வீட்டு வேலையை ஆரம்பிக்க வைத்தார் மருமகள். அந்நேரம் எதிர்பாராத விதமாக எங்கள் ஹோட்டல் தொழில் நஷ்டமடைய, இன்னொரு புறம் வீடு மகன் கைவசம் இருந்த காசை எல்லாம் எடுத்துக்கொள்ள, ஒரு கட்டத்தில் அந்த வீட்டையே விற்க வேண்டிய நிலை. அதுவும் எங்கள் அவசர தேவைக்காக மதிப்பைவிட குறைவான விலைக்கு. இப்போது ஹோட்டல் தொழிலும் முன்போல் இல்லை.

தங்கம்

இப்போது மகனும், மருமகளும் முன்பிருந்த வீட்டிலேயே வசிக்கின்றனர். மருமகளின் ஆடம்பரம் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவதால், அந்தச் சண்டையில் எங்கள் மருமகள் சம்பந்தமே இல்லாமல் என்னையும் என் கணவரையும் ஏசுகிறார். அதனால் நாங்கள் இப்போது அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவருகிறோம்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், தொழில் முன்போல் இல்லாத கவலை எல்லாம் என் மகனை போட்டு அழுத்துகிறது. அவன் சம்பாதித்த பணத்தை சேமிப்பில் வைத்திருந்தால், இந்தச் சூழலில் அந்த சேமிப்பு அவனுக்குப் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பாதுகாப்புத் தந்திருக்கும். ஆனால், என் மருமகளின் ஆடம்பரத்தால் கையில் காசே இல்லாமல் இப்போது இப்படி தேய்ந்துபோய் நிற்கிறான். ஆனால், இன்றும் என் மருமகள் வரவுக்குள் செலவழிக்கும் பாடம் கற்கவில்லை. பேரக் குழந்தைகளையும் ஆடம்பரமாகவே வளர்க்கிறார்.

Depressed Man

புதிய பழக்கமாக, பணமில்லாத சூழல்களில் எல்லாம் கடன் வாங்க என் மகனைப் பழக்கப்படுத்தி வருகிறார். இன்றைய பொழுதை கொண்டாட வேண்டும் அவ்வளவுதான்... நாளை பற்றி கவலை இல்லை என்பதே என் மருமகளின் மனநிலையாக இருக்கிறது.

எப்படி திருத்துவது?



from Latest news https://ift.tt/URxPfaH

Post a Comment

0 Comments