இங்கிலாந்தின் மித வேகப் பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் நடப்பு ஆஷஸ் தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஸ்டூவர்ட் பிராடின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. குறித்த காலத்தைவிட, மூன்று மாதங்களுக்கு முன்பாகவே குறைப்பிரசவத்தில் மிகச்சிறிய உருவத்தோடு பிறந்த இவர், சிறுவயதிலேயே நுரையீரல் வளர்ச்சியின்மை, ஆஸ்துமா என பல்வேறு வியாதிகளால் அவதிப் பட்டார். எனினும் கிரிக்கெட் மீது தான் கொண்ட காதலின் காரணத்தால் அவர் மூலையில் முடங்காமல் தன்னுடைய கனவான கிரிக்கெட்டை நோக்கி ஓடினார். கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஆர்வத்தின் முன்பு குறைபாடுகள் எவற்றாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவை ஏற்படுத்திய எந்தத் தடையையும் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
2006 ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானாலும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளின் மீதுதான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால்தான் ஒரு கட்டத்தில் தனது டெஸ்ட் கரியரை நீட்டித்துக் கொள்வதற்காக லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ஆடுவதையே தவிர்த்துக் கொண்டார். இத்தனைக்கும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளிலுமே அவர் ஓரளவுக்கு நன்றாகத்தான் ஆடியிருந்தார். பௌலிங் மட்டுமில்லை. பேட்டிங்கிலுமே சில போட்டிகளில் அசத்தியிருப்பார். ஆனாலுமே
லிமிட்டெட் ஓவர் போட்டிகளை பொறுத்தவரை அவருக்கான அடையாளமாக இருந்தது 2007 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்சர்கள்தான். ப்ராட் அதன்பிறகு எவ்வளவோ நல்ல ஆட்டங்களை ஆடியிருந்த போதும் துடைக்க முடியாத கறையாக அந்த 6 சிக்சர் என்கிற அடையாளம் அவர் மீது ஒட்டிக் கொண்டிருந்தது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு பிராடிற்கு யுவராஜ் சொன்ன செய்தியையும் இங்கே கொஞ்சம் பார்க்க வேண்டும். 'கவலைப்படாதீர்கள். இந்த மனநிலை எப்படியிருக்கும் என எனக்குப் புரிகிறது. நீங்கள் இங்கிலாந்தின் எதிர்காலமாக மாறி பெரிய சாதனைகளைச் செய்யப் போகிறீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.' என்றார். தோல்விகள் கண்டு நாம் ஒடுங்கிவிடக் கூடாது என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ஸ்டூவர்ட் பிராட் தான்.
யுவராஜிடம் அறிவுரைப் பெற்ற அதே ஆண்டில்தான் பிராட் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் தனக்கென தனியான பெருமித அடையாளங்களை ப்ராட் கட்டியெழுப்பிக் கொண்டார். 2007 இல் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில்தான் ப்ராட் தனது டெஸ்ட் கரியரை ஆரம்பித்திருந்தார். 2023 ஆஷஸோடு விடைபெறுகிறார், எனில் 16 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஆடியிருக்கிறார். இதெல்லாம் அசாத்தியமானது. உலகளவிலேயே ஒரு சில வேக/மித வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் இந்த சாதனையைச் செய்திருப்பார்கள். இமயமலையை முதுகில் சுமப்பது போன்ற வலிதான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இத்தனை ஆண்டுகள் பந்துவீசுவது. அதை வெற்றிகரமாக செய்திருப்பதே ப்ராடின் மிகப்பெரிய அடையாளம்தான். ஆனால், அதைக்கடந்தும் இந்த 16 ஆண்டுகளில் ப்ராட் எக்கச்சக்க சாதனைகளை செய்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பௌலர் ஸ்டூவர்ட் பிராட்தான். இந்த ஐந்து பௌலர்களில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகியோர் ஸ்பின்னர்கள்தான். ஆக, 600 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் பிராட்தான்.
எனில், முதல் இடத்தில் இருப்பவர் யார்? சந்தேகமேயின்றி பிராடின் சக வீரர் ஆண்டர்சன்தான். அவர் 690 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பிராட் 602 வீழ்த்தியிருக்கிறார். பிராடின் கரியரை பற்றிப் பேசுகையில், ஆண்டர்சனுடனான அவருடனான நட்பையும் கூட்டணியையும் பற்றி பேசாமல் நகரவே முடியாது.
ஓய்வை அறிவித்த பிறகு ஆஷஸில் பிராட் கடைசியாய் பேட்டிங் ஆட களமிறங்கும் போதே ஆண்டர்சனுடன்தான் வந்திருந்தார். தற்காப்பு கவசங்கள் அத்தனையையும் அணிந்து கொண்டு பெவிலியனில் இருந்து இருவரும் இறங்கி வந்தபோது நீண்ட காலமாக வெற்றிகரமாக பல மிஷன்களை முடித்துக்கொடுத்த போர் வீரர்களை போன்றுதான் தோன்றியது.
எந்த ஒரு குழு விளையாட்டாக இருந்தாலும் அதற்குக் கூட்டு முயற்சி (டீம் ஸ்பிரிட்) மற்றும் பொறாமை அற்ற நட்பு இருத்தல் வேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் ஆண்டர்சன் மற்றும் பிராட். ஆஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே இருவரும் கூட்டாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1001 விக்கெட்களை வீழ்த்தியிருக்கின்றனர். இவர்களின் சாதனையை பிராட் மற்றும் ஆண்டர்சன் கூட்டாக முறியடித்தனர். தங்களுடைய நட்பைப் பற்றி ஆண்டர்சன் கூறுகையில்
"நாங்கள் இருவரும் வெகு நாட்களாக ஒன்றாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இது எங்களின் கூட்டு உழைப்பை வெளிப்படுத்துகிறது. அறிந்தோ அறியாமலோ நாங்கள் எங்களின் தரத்தினை உயர்த்துவதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு எங்களை முன்னுக்குத் தள்ளிக்கொண்டே இருக்கிறோம். இதை நாங்கள் மகிழ்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறோம்."
ஆனால், இந்த நட்பிலுமே பிராட் சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆண்டர்சன் பிராடை விட சீனியர் வீரர். பிராடுக்கு முன்பாகவே அந்த இங்கிலாந்து பந்துவீச்சுப் படையை முன் நின்று வழிநடத்தும் தலைமையிடத்துக்கு நகர்ந்திருந்தார் ஆண்டர்சன். இதனாலயே 'Shadow of Anderson' என பிராடை அழைக்க ஆரம்பித்தனர். ஆண்டர்சனின் நிழலாக அவரின் பாதச்சுவடுகள் பதிந்திருக்கும் தடத்தின் வழியாக தனது ஓட்டத்தை தொடர்பவராகத்தான் பிராட் பார்க்கப்பட்டார். ஆனால், அதில் முற்றிலும் உண்மை இல்லை. ஆஷஸையே எடுத்துக் கொள்வோமே. அது இங்கிலாந்து வீரர்கள் உயிரைக் கொடுத்து ஆடும் உக்கிரமான களம்.
இங்கே ஆண்டர்சனை விட பிராட்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
நடப்பு ஆஷஸ் தொடரில்தான் ஆஷஸில் மட்டும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை பிராட் செய்திருந்தார். ஒட்டுமொத்தமாக ஆஷஸ் வரலாற்றில் மெக்ராத் மற்றும் வார்னேவுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவர் பிராட்தான்.
நிழலாக மட்டுமே வாழ்ந்தவர் இப்படியான சாதனைகளை செய்ய முடியுமா?
பிராடின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எப்போதும் அயர்ந்திடாத விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத அவரது குணாதிசயம்தான். 2020 இல் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பிராடை லெவனில் எடுக்காமல் பென்ச்சில் உட்கார வைத்துவிடுவார்கள். தொடர்ச்சியாக 51 போட்டிகளை எந்த பிரேக்கும் இல்லாமல் சொந்த மைதானங்களில் ஆடியவருக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. 'கடந்த இரண்டு வருடங்ளில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் இப்போது இப்படி ஒரு முடிவு. இது எனக்கு பெருங்கோபத்தையும் குழப்பத்தையும் கொடுத்திருக்கிறது.' என அந்த டெஸ்ட் போட்டி நடந்துக் கொண்டிருந்த போதே தனது அதிருப்தியை மொத்தமாக கொட்டித் தீர்த்திருந்தார் பிராட். பிராட் இல்லாத அந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றும் போனது. அடுத்த இரண்டு போட்டிகளில் பிராடுக்கு லெவனில் இடம் கிடைத்தது.
காத்திருந்த வேங்கையாக வேட்டைக்குத் தயாரான பிராட் அந்த இரண்டு போட்டிகளில் மட்டும் 16 விக்கெட்டுகளை வீழ்த்திக் காட்டினார். அந்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்தும் வென்றது. இதுதான் பிராட். இதுதான் அவரின் உத்வேகம்.
இப்போது சொல்லுங்கள் அந்த 6 சிக்சர்கள் வழங்கிய நிகழ்வை மட்டுமே அவரின் அடையாளமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். அவர் வீழ்ந்த கதை மட்டும்தான் அது. விழுந்த இடத்திலிருந்து எழுந்து உச்சத்தை நோக்கி பீறிட்டு பாய்ந்து அவர் சாதித்தவை ஏராளம். அந்த சாதனைகள்தான் அவரின் அடையாளமாக இருக்க வேண்டும். அவரை ஒரு நிழலால அல்ல இங்கிலாந்து கிரிக்கெட்டின் பிரதான வெளிச்சமாக மட்டுமே நினைவுகூர வேண்டும்!
வாழ்த்துகள் பிராட்!
from Latest news https://ift.tt/KftPQHF
0 Comments