தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ், 2019-ம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நடுவில் கொரோனா தொற்று பிரச்னையால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கொரோனா பிரச்னை காரணமாக, மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையில், உலகளவில் மடிக்கணினி விலை அதிகரித்தது. விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
2021-ல் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, சில மாதங்களிலேயே கொரோனா பரவலின் தக்கம் குறைந்தது. எனவே, விலையில்லா மடிக்கணினிகளை அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டது. ஆனால், மடிக்கணினிகளை வழங்குவதற்கான அறிகுறி எதுவும் அரசிடம் தென்படவில்லை.
இதற்கிடையில், மடிக்கணினிக்கு பதிலாக கையடக்க கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்ற தகவல் வெளியானது. ஆனாலும், ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு கைவிடவில்லை. கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும்’ என்று தமிழக அரசின் தரப்பில் சொல்லப்பட்டது.
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், விலையில்லா மடிக்கணினி பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மடிக்கணினி திட்டத்தை அரசு கைவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. டேப்லெட் குறித்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.
அது சர்ச்சையானது. மாணவர்களுக்கு மடிக்கணினிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதற்கிடையில், 2017 -18 முதல் 2019- 20 வரையிலான காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 55,000 மடிக்கணினிகளை தகுதியான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.
உடனே, ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்துசெய்யப்பட மாட்டாது.. கடந்த ஆட்சியில் வழங்கப்படாத மடிக்கணினிகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூறினார். அதன் பிறகு, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க அரசு தொடங்கியதா, அப்படி தொடங்கியிருந்தால் அது எந்தளவுக்கு இருக்கிறது என்பது பற்றிய செய்திகள் இல்லை.
தற்போது, மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தி.மு.க கொண்டாடிவருகிறது. தி.மு.க-வின் அணிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 234 இடங்களில் கருணாநிதிக்கு முழு உருவ சிலைகள் வைப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதே நேரம், தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கவும் முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த சாதனைப் பட்டியலில் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினிகள் திட்டம் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. மேலும், ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தானே என்று ஸ்டாலின் அரசு மெத்தனம் காட்டுகிறதோ என்று எழுந்திருக்கும் விமர்சனம் அரசின் காதுகளை எட்டியதா என்று தெரியவில்லை. `மாணவர்களின் வளர்ச்சியில், உயர் கல்வியில் மடிக்கணினி பெருமளவில் உதவியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே அதில் எந்த அரசியல் கூடாது’ என்பதே கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் ஒரே குரலாக இருக்கிறது.
from Latest news https://ift.tt/5bMY93h
0 Comments