கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்.
‘‘ ‘இந்தியப் பொருளாதாரத்தை 10-ம் இடத்திலிருந்து 5-க்கு கொண்டுவந்திருக்கிறோம். அதை 3-வது இடத்துக்குக் கொண்டுவந்துவிடுவோம்’ என்கிறார்கள். 2014-ம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியா 2011-ம் ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்திருக்கிறது. 3-வது இடத்திலிருந்த பொருளாதாரத்தை 10-ம் இடத்துக்குத் தள்ளி மீண்டும் ஐந்தாவது இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு இப்படிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கடன், கடந்த 60 ஆண்டுகளில் 50 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஒன்பது வருட ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் இந்தக் கடன் தொகை 150 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த கடனையெல்லாம் நாம்தான் அடைக்க வேண்டும். நாட்டின் கடனை இந்த அளவுக்கு உயர்த்திவிட்டு, பொருளாதார வளர்ச்சி என்று தம்பட்டம் அடிப்பது மக்களை ஏமாற்றும் வேலை. 2015-2016-ம் ஆண்டில் 1.32 லட்சமாக இருந்த தனிநபர் வருமானம், 2021-2022-ம் ஆண்டில் 65 ஆயிரம் ரூபாயாகக் குறைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. ரிசர்வ் வங்கியின் சேமிப்பு இருப்புத் தொகையை இரண்டுக்கும் மேற்பட்ட முறை பெற்றிருக்கிறது இந்த அரசு. ‘இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு 1.5 மடங்கு லாபம், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உயர்த்தப்படும்’ என்றெல்லாம் அவர்கள் வெறுமனே பேசுவார்கள். ஆனால், இந்த ஆட்சியில்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மொத்தமும் நாசமாக்கிவைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அம்பானி, அதானியின் பொருளாதாரத்தை உயர்த்தியிருப்பதாக வேண்டுமானால் மோடி பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!’’
கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.
‘‘உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். இதே கருத்தைத்தான் உலக நிதி ஆணையம் தொடங்கி, பல பெரும் பொருளாதார நிபுணர்களும் சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடருக்குப் பிறகு பெரும் வல்லரசு நாடுகளும் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆனால், இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கூடிய விரைவிலேயே 3-வது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பிருப்பதாக, பெரும் பொருளாதார நிபுணர்களே கருத்து தெரிவிக்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதி, விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. கடற்படை, விமானப்படை தரத்தில் முன்னேறியிருக்கிறோம். போர்க்கப்பலை நாமே தயாரிக்கிறோம். கைப்பேசிகளை இறக்குமதி செய்துகொண்டிருந்த காலமெல்லாம் போய், 95,000 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தொழில்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்து 35 சதவிகித மக்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். 77-ஆக இருந்த நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 148 ஆகியிருக்கிறது. நாட்டிலுள்ள பல துறைமுகங்களின் தூரம் அதிகரிக்கப்பட்டதுடன், துறைமுகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 1.25 கோடியிலிருந்து 6.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்படி, ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க அரசின் வரலாற்றுச் சாதனையைச் சொல்லிக்கொண்டே போகலாம்!’’
from Latest news https://ift.tt/jKn0Ozc
0 Comments