கனவு -107 | திருச்சி | `வெற்றிலை மவுத்வாஷ் டு சீஸி பிரெட்...’ | வளமும் வாய்ப்பும்

வீட்டு சுபநிகழ்வுகளில் தாம்பூலத் தட்டில்வைத்து வழங்கப்படுவதோடு, இளையோர் முதல் வயதானோர் வரை மென்று சுவைக்கும் பாரம்பர்யமான பொருளாகவும் விளங்குகிறது வெற்றிலை. இதற்கு வேறு சில பெயர்களும், ரகங்களும், அவற்றுக்குத் தனி குணங்களும் பயன்களும் உண்டு. கற்பூரக்கொடி, கள்ளர்கொடி, பச்சைக்கொடி, அந்தியூர் கொடி, கணியூர் கொடி போன்றவை வெற்றிலையின் வெவ்வேறு ரகங்கள். அதேபோல நாகவல்லி, வெந்தன், திரையல் போன்ற மாற்றுப் பெயர்களிலும் வெற்றிலையைக் குறிப்பிடுகிறோம்.

இப்படி பல ரகங்களாக விளையும் வெற்றிலை குறித்துப் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், வெற்றிலையில் உள்ள சவிக்கால் (Chavicol) எனும் சேர்மம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது என்பதுதான். வெற்றிலையில் உள்ள ஆண்டி-இன்ஃபலமெட்ரி (Anti inflammatory) தன்மையானது பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவைத் தடுக்கவும் செய்கிறது. வாய் மற்றும் பல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய, ஓரல் ஹெல்த்துக்கு (Oral Health) தேவையான சேர்மங்கள் அடங்கியுள்ளதால் இதைப் பயன்படுத்தி பெட்டல் லீப் மவுத் வாஷ் தயாரிக்கலாம். பெட்டல் லீப் மவுத் வாஷைத் தயாரிப்பது எளிதானது. உற்பத்தி செலவும் குறைவு. மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மவுத் வாஷ் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 2.2 டன் வீதம், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 900 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. மொத்த விளைச்சலிலிருந்து ஒரு டன் அளவுக்கு எடுத்துக்கொண்டு பெட்டல் லீப் மவுத்வாஷ் தயாரிக்கலாம். தண்ணீர் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ வெற்றிலையிலிருந்து சுமார் 40 லிட்டர் வீதம், ஒரு டன் வெற்றிலையிலிருந்து ஏறக்குறைய 40,000 லிட்டர் வெற்றிலைச்சாறு எடுக்கலாம். 500 மிலி கொண்ட பெட்டல் லீப் மவுத்வாஷ் தயாரிக்க, 100 மிலி வெற்றிலைச் சாறு தேவைப்படும். எனில், நாற்பதாயிரம் லிட்டரிலிருந்து 4 லட்சம் மவுத் வாஷ் உருவாக்கலாம். ஒன்றின் விலையை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.

கோதுமை, மைதா போன்ற பொருள்களை முதன்மையானதாகக் கொண்டே பெரும்பாலும் சீஸி பிரெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கோதுமை மற்றும் மைதாவில் குளூட்டன் (Gluten) என்ற புரதம் உள்ளது. தொடர்ச்சியாக இந்த வகைப் பொருள்களில் தயாரிக்கப்படும் பரோட்டா (Parotta) போன்ற உணவுகளை உண்ணும்போது செரிமானப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் கோதுமை மற்றும் மைதாவிலுள்ள குளூட்டன் புரதத்தைச் செரிக்க வைக்கவும் அதை ஆற்றலாக மாற்றவும் அதிக நேரம் தேவை என்பதுதான். எனவேதான், கோதுமையில் அதிகளவில் கார்போஹைட்ரேட் இருந்தபோதும் அது குளூட்டனுடன் கலந்திருப்பதால், உணவை ஆற்றலாக மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய மரவள்ளிக்கிழங்கு உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் குளூட்டன் என்கிற புரதம் இல்லை. கோதுமையைவிட 10 சதவிகிதம் அதிக கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ள இது, எளிதில் செரிமானம் அடைவதோடு, எளிதில் ஆற்றலாகவும் மாறும். மேலும் மரவள்ளிக்கிழங்குடன் பாலாடைக்கட்டி (Cheese) சேர்த்துப் பயன்படுத்தலாம். இதனால் உடலுக்குத் தேவையான கொழுப்பும் பாலாடைக் கட்டியிலிருந்து கிடைத்துவிடும். ஆகவே, மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் பாலாடைக்கட்டி சேர்த்து கஸாவா சீஸி பிரெட்டைத் தயாரித்து, அதற்கான தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் அமைக்கலாம்.

நாம் உட்கொள்ளும் உணவுகள் ரத்தத்தில் குளுக்கோஸ் எனும் சர்க்கரையின் அளவை எவ்வளவு வேகமாக கூட்டவோ குறைக்கவோ செய்யும் என்பதை அளவிடும் குறியீடே கிளைசிமிக் இன்டெக்ஸ். கிளைசிமிக் இன்டெக்ஸ் 0 டு 100 எனும் அளவில் அளக்கப்படுகிறது. மரவள்ளியில் உள்ள கார்போஹைட்ரேட்டும் பாலாடைக்கட்டியில் உள்ள கொழுப்பும் சேர்ந்து `கிளைசிமிக் இன்டெக்ஸ்' (Glycemic index) குறைத்துவிடும் என்பதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் இந்தப் புராடக்டை விரும்பி வாங்குவார்கள்.

மரவள்ளிக்கிழங்கின் தோலை உரித்து, நன்றாக உலரவைத்த பின்னர் அரைத்து மாவாக மாற்றிக்கொண்டு, அதிலிருந்து, கஸாவா சீஸி பிரெட் உருவாக்கலாம். இதை உண்ணுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவி புரிகிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கின்றன. அதனைப் பயன்படுத்திக்கொண்டு, உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கஸாவா சீஸி பிரெட்டை ஏற்றுமதி செய்து, லாபம் ஈட்டலாம்.

திருச்சி மாவட்டத்தின் சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 15 டன் வீதம் ஆண்டொன்றுக்கு தோராயமாக 2,00,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து 1 சதவிகிதத்தைக் கைப்பற்றி, கஸாவா சீஸி பிரெட் தயாரிக்கலாம். ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கிலிருந்து கால் கிலோ மரவள்ளி மாவு வீதம், ஏறக்குறைய 2,000 டன்னிலிருந்து சுமார் 500 டன் மாவு கிடைக்கும். ஒரு கிலோ மாவிலிருந்து 700 கிராம் சீஸி பிரெட் வீதம், 500 டன் மாவிலிருந்து தோராயமாக 350 டன் பிரெட் தயாரிக்கலாம். சந்தையில் 600 கிராம் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலையை 350 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, ஆண்டொன்றுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பை பெறலாம்!

(இன்னும் காண்போம்...)



from Latest news https://ift.tt/udISPjV

Post a Comment

0 Comments