மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தொடுத்த கேள்விக்கணைகளும் விழிபிதுங்கும் அரசுகளும்!

இன ரீதியான மோதல்கள் காரணமாக வன்முறை சம்பவங்களும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்த மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு, வன்முறை சம்பவங்களில் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமான வீடுகளும், கடைகளும், தேவாலயங்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

இரண்டு பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வைரலான பிறகுதான், மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி வாய்திறந்தார். சர்வதேச அளவிலும் இதற்கு கண்டனம் எழுந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்தப் பிரச்னையை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் பா.ஜ.க ஏற்கவில்லை. மாறாக, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாருங்கள் என்று எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர்கள் அழைத்தனர். ஆனால், குறுகிய நேர விவாதத்துக்கு மட்டுமே ஆளும் தரப்பு தயாராக இருந்தனர். ஆனால், அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, இந்தப் பிரச்னையை மட்டும் விவாதிக்க வேண்டும்.. அதில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி-க்களும் பங்கேற்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது.

நாடாளுமன்ற மக்களவை

அதே நேரத்தில், மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றியும் விவாதிப்போம் என்று பா.ஜ.க-வினர் கூறினார்கள். அதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தன. இப்படியான சூழலில்தான், ‘மணிப்பூரில் பழங்குடி பெண்கள் இருவருக்கு நேர்ந்திருப்பது, முன்னெப்போதும் நடைபெறாத கொடுமை. அதை, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களுடன் ஒப்பிட்டு  நியாயப்படுத்த வேண்டாம்’ என்று உச்ச நீதிமன்றம் காட்டமானக் கூறியிருக்கிறது.

மணிப்பூர் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜூலை 31-ம் தேதி இந்த வழக்கை விசாரித்தது. கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான பழங்குடி பெண்கள் இருவரும், தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தங்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். அவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

அப்போது, ‘மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளி ட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடை பெறுகிறது’ என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார். அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘எத்தனை கும்பல் வல்லுறவுக் குற்றங்கள் நடந்திருக்கின்றன.. அவை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளதா.. பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரம் எப்.ஐ. ஆர்.கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.. யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்..’ என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

மணிப்பூர் வன்முறை

மேலும், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், ‘மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னையைப் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். மணிப்பூர் சம்பவம் ஒரு நிர்பயா சம்பவம் போன்றது அல்ல. இந்த சம்பவம் நிகழ்ந்து 14  நாட்களுக்கு பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஆனது ஏன்.. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீஸார்தான் அழைத்துச் சென்று அந்த கும்பலிடம் விட்டிருக்கின்றனர். ஒரு வீடியோவோடு சம்பவம் முடிந்துவிடவில்லை. பல சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. பல பெண்கள் புகார் அளிக்கவில்லை. அவ்வாறு புகார் அளிக்கவில்லை என்றாலும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்’ என்றார்.

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் காட்டமாக எதிர்வினையாற்றிவந்த பா.ஜ.க தலைவர்கள், உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்படி கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.!



from Latest news https://ift.tt/47EZGuR

Post a Comment

0 Comments