இந்தியாவில் 11.4 % பேருக்கு நீரிழிவு நோய்; இதேநிலை தொடர்ந்தால்... எச்சரிக்கும் மருத்துவர்!

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் (Madras Diabetes Research foundation) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் (Indian Council of Medical Research) இணைந்து நடத்தப்பட்டதாக, இந்தியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diabetes

இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு நோய்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 31 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோய்களின் எண்ணிக்கை குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கோவாவில் (26.4%) அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் கேரளா மற்றும் புதுச்சேரி (25%) உள்ளன.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 11.4 சதவிகிதம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15.3 சதவிகிதம் பேர் விரைவில் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளனர். அதேபோல், 35.5 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. 28.6 சதவிகிதம் பேர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நோய் எண்ணிக்கைகளுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகள் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமாக இருந்தாலும், நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் சமமாகவே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகள் குறித்தும், மக்கள் என்ன மாதிரியான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், இந்த ஆய்வறிக்கையின் முக்கிய ஆராய்ச்சியாளரும் நீரிழிவு சிறப்பு மருத்துவருமான அஞ்சனாவிடம் கேட்டோம்...

டாக்டர் அஞ்சனா

``இந்த ஆய்வு முடிவுகள், நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையைவிட நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுடன் நிறைய பேர் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. நீரிழிவு நோய்க்கு முந்தையநிலை அதிகமாக உள்ள மாநிலங்களில் இன்னும் சில வருடங்களில் அதிக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கூடிவிடும்‌.

நீரிழிவு நோயில் தொடங்கி ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற அனைத்து பிரச்னைகளும் நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படக்கூடியவை. நம் வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், மன அழுத்தம் என அனைத்துமே காரணமாக அமையலாம். கோவிட் 19 தொற்றின் தாக்கம்கூட இந்த எண்ணிக்கை உயர்வுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

இது போன்ற நோய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருக்க, நாம் சில வாழ்வியல் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவின் உணவுப்பழக்கம் 70 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டால் நிரம்பியுள்ளது. இதை உடனடியாக பெரிதும் குறைக்க முடியாது. ஆனால், 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டு புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவற்றையும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த வாழ்வியல் மாற்றங்களைக் குடும்பமாக அனைவரும் கடைப்பிடித்து குழந்தைகளுக்கும் அதைப் பழக்க வேண்டும்.

உடற்பயிற்சி

தற்போதுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களால் நாம் ஒரு தலைமுறையையே ஆரோக்கியமற்று உருவாக்கி வருகிறோம். இந்த நிலை மாறி, குழந்தைப் பருவம் முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பழக்கப்படுத்த வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் முந்தைய நிலையில் இருக்காது. போதிய பரிசோதனைகளால் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். எனவே, குறிப்பிட்ட கால அளவில் உடல் பரிசோதனை செய்துகொள்வது நோய் பாதிப்பைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க உதவும்" என்கிறார் டாக்டர் அஞ்சனா.



from Latest news https://ift.tt/5hDUQXn

Post a Comment

0 Comments