"எங்களால்தான் முடியாது, கைதிகளாவது..."- புத்தகத் திருவிழாவில் நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 6வது புத்தகத் திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலும் நடைபெறும் புத்தகத்திருவிழாவைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டையில் செயல்படும் விழிச்சவால் உடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தாங்களும் புத்தகத் திருவிழாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தங்களின் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்

உடனே தலைமையாசிரியர் வடிவேலன் சக ஆசிரியர்களோடு சேர்ந்து விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேரைப் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர். அப்போது, இதர பள்ளிகளில் வந்திருந்த மாணவர்கள் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கைதட்டி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தக அரங்கிற்குள் சென்றவர்கள் புத்தகங்களைத் தொட்டுப்பார்த்து மகிழ்ந்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தங்களது பிள்ளைகள் போலக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டியதோடு அவர்களுக்கு வழிகாட்டினர்.

இதற்கிடையே, புத்தகத் திருவிழாவில் புதுக்கோட்டைச் சிறையில் உள்ள கைதிகளுக்கு அனுப்பும் வகையில் 'கூண்டுக்குள் வானம்' என்ற பெயரில் புத்தகங்கள் சேகரிப்பு பெட்டகம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில், தன்னார்வமாகப் பலரும் புத்தகங்களை வாங்கிப் போட்டுச் செல்கின்றனர்.

அந்த வகையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தாங்கள் தினசரி சேகரித்து வைத்திருந்த ரூ.4000 பணத்திற்குப் புத்தகங்களை வாங்கி அதனைச் சிறை கைதிகளுக்குத் தானமாக வழங்கி, அந்தப் பெட்டியில் போட வைத்து நெகிழ வைத்திருக்கின்றனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் பேசியபோது, "எங்களுக்கு இந்தப் புத்தகத்துல உள்ள எழுத்துகளை எல்லாம் படிக்க முடியாது. பிரெய்லி முறையிலதான் படிக்கிறோம்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்

புத்தகத்தைப் படிக்க முடியாது. ஆனா, அதோட வாசனையை எங்களால நுகர முடியும். புத்தகத்தைத் தொட்டுப் பார்க்கும் போது, மனசுக்கு நிறைவா இருந்துச்சு. சிறையில் உள்ள கைதிகளுக்கு அதை தானம் கொடுக்கிறதா கேள்விப்பட்டு எங்களோட சேமிப்புப் பணத்தை வச்சி அவங்களுக்கு எங்களால முடிஞ்ச புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கோம். எங்களாலதான் புத்தகத்தை வாசிக்க முடியாது. கைதிகளாவது புத்தகத்தை படிச்சு நேர்மையாக வாழணும். எங்களுக்குப் புத்தகத்தை வாசிக்கத்தான் முடியாது. ஆனா, கேட்க முடியும், யாராவது தன்னார்வமாக வந்து வாசித்துக் காட்டினால், எங்களாலும் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்" என்கிறார் நெகிழ்ச்சியுடன். 



from Latest news https://ift.tt/vhKO3pD

Post a Comment

0 Comments