கோயம்புத்தூர் மாவட்டம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான கருவேப்பிலை விதை, பெரும்பாலும் உற்பத்திப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பையாக அல்லது உரமாக அவை நிலத்திலேயே தங்கிவிடுகின்றன. இதை மதிப்புக்கூட்டல் செய்யலாம். இந்த விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி ஹைட்ரோஸொல் ஆல் பர்பஸ் க்ளீனர் (Hydrosol All Purpose Cleaner) எனும் புராடக்டை உருவாக்கலாம். வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பலவிதமான இடங்களில் கதவு, கைப்பிடிகள், தரைகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அடிக்கடிப் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களைச் சுத்தம் செய்ய, இந்தக் க்ளீனரை உபயோகிக்கலாம்.
கருவேப்பிலை எண்ணெய்யையும் தண்ணீரையும் தேவையான அளவு சேர்த்தால் ஹைட்ரோஸொல் எனும் கலவை கிடைக்கும். இந்த ஹைட்ரோஸொல்லானது மிகுந்த செறிவுடையது என்பதால், 6 சதவிகித அளவுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வினிகர், வாசனைக்கான எண்ணெய் (ரோஸ், பெப்பர்மின்ட், ஜாஸ்மின் போன்றவை) ஆகியவற்றைச் சேர்த்து ஆல் பர்பஸ் க்ளீனரைத் தயாரிக்கலாம்.
ஹைட்ரோஸொல் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களையும் தடுக்கும். பொருள்களின் மேற்பரப்புகளில் துர்நாற்றத்தைக் குறைக்க வினிகர் உதவும். வாசனை எண்ணெய் இனிய மணத்தைக் கொடுக்கும். இவை மட்டுமின்றி, ஹைட்ரோஸொல்லானது இயற்கையான கலவை என்பதால் குழந்தைகள், செல்லப்பிராணிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காது. இதற்கான தொழிற்சாலையை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கலாம்.
கோவை மாவட்டத்தில் சுமார் 3,400 ஏக்கர் பரப்பளவில் கருவேப்பிலை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 700 கிலோ வீதம் ஆண்டொன்றுக்குச் சுமார் 24,000 டன் அளவுக்குக் கருவேப்பிலை விதை கிடைக்கிறது. இதிலிருந்து தோராயமாக 20 டன் அளவுக்கு எடுத்துக்கொண்டு ஹைட்ரோஸொல் ஆல் பர்பஸ் க்ளீனர் தயாரிக்கலாம்.
ஒரு கிலோ கருவேப்பிலை விதையிலிருந்து 150 கிராம் ஹைட்ரோஸொல் கிடைக்கும் எனில் 20 டன் விதையிலிருந்து 3 டன் அளவுக்கு பெறலாம். 250 மில்லி லிட்டர் ஹைட்ரோஸொல் ஆல் பர்பஸ் க்ளீனர் தயாரிக்க 15 கிராம் ஹைட்ரோஸொல் தேவைப்படும் எனில், 3 டன்னிலிருந்து 2 லட்சம் பாட்டில்கள் தயாரிக்கலாம். ஒன்றின் விலையை 500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பை அடையலாம்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
(MSME - Micro, Small and Medium Enterprises) :
கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் காய்ந்த இலைகளைப் பயன்படுத்தி, மக்கும் பைகளைத் தயாரிக்கலாம். பெருநகரங்களில் தாவர இலைகளை உயிரியல் கழிவாகவே கருதி, அவற்றை அப்புறப்படுத்தும் விதமாக எரித்துவிடுகிறார்கள். மிகக் குறைவாகவே அவை உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இனி, இலைகளை எரித்துக் காற்றை மாசுபடுத்துவதற்குப் பதிலாக, இலைகளை மதிப்புக்கூட்டி லாபம் பார்க்கலாம். காகிதம் தயாரிக்கத் தேவைப்படும் செல்லுலோஸ், இலைகளிலும் இருப்பதால், இலைகளைக் கூழாக்கி மக்கும் பைகளை வெவ்வேறு வடிவங்களில் தேவையான அளவுகளில் உருவாக்கலாம்.
நகர்ப்புறங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், நடைபாதைகள் போன்றவற்றிலிருந்து இலைகளைச் சேகரிக்க வேண்டும். பின்னர், அந்த இலைகளைத் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்து, உலர்த்திய பின்னர் துகள்காக மாற்றி, பின்னர் மைக்ரோகிரிஸ்டலைன் செல்லுலோஸ் (Microcrystalline cellulose) சேர்த்து, கூழாக்க வேண்டும். இந்தக் கூழை பேப்பராக மாற்றும் வகையில் தேவையான அளவுக்கு ஏற்றவாறு ஒரு பிளேட்டின்மீது ஊற்ற வேண்டும். அது காய்ந்தவுடன் இலை பேப்பர் தயார். இதனைப் பைகளைத் தயாரிக்கும் இயந்திரத்தில் செலுத்தி, தேவையான அளவுகளில் வடிவமைத்துக்கொள்ளலாம்.
வழக்கமான காகிதக் கூழ்களிலிருந்து உருவாக்கப்படும் பைகளானது 270 நாள்களுக்குப் பின்னரே மக்கும். ஆனால், இலைகளால் தயாரிக்கும் காகிதம் 30 நாள்களுக்குள் மக்கிவிடும். மேலும் பேப்பரில் சல்பர் (Sulphur), குளோரின் (Chlorine) போன்ற ரசாயனங்கள் இருக்கின்றன. மாறாக, இலைகளில் உருவாக்கப்படும் பேப்பரில் அத்தகைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த புராடக்ட் என விளம்பரப்படுத்தி, இதற்கான தொழிற்சாலையை கோவை மாவட்டத்தில் நிறுவலாம்.
உக்ரைனில் உள்ள ரீ-லீஃப் டெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம் (Releaf Technology Research and Production Enterprise) இலைகளிலிருந்து பேப்பர் தயாரிப்பதில் வெற்றி கண்டதோடு, அவற்றைச் சந்தையில் லாபகரமாக விற்பனையும் செய்துவருகிறது. 2022-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் மாதம் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு பேப்பர் பேக்குகளைத் தயாரிக்கிறது. இதேபோல, கோவை மாவட்டத்திலும் தாவர இலைகளிலிருந்து பேப்பரை உருவாக்கி, அவற்றுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குப் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.
(இன்னும் காண்போம்...)
from Latest news https://ift.tt/EGyHUPY
0 Comments