`உலகத்தின் ஒரே கரன்சி' என்கிற அடைமொழியோடு அனைத்து முதலீட்டாளர்களையும் தன் பக்கம் ஈர்த்த கிரிப்டோ கரன்சியின் இன்றைய நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். இதன் விலை, கடந்த சில மாதங்களாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருவதுதான் அதற்குக் காரணம்.
கிரிப்டோ கரன்சி, முதலீட்டாளர்களின் முதலீட்டு போர்ட் ஃபோலியோவில் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில், ``கிரிப்டோ கரன்சிகளில் முதன்மை காயினான பிட்காயின் உட்பட அனைத்து முதலீடுகளையும் முதலீட்டாளர்கள் விற்று வருவதாகவும், விரைவில் குறிப்பிட்ட அளவிலான கிரிப்டோ கரன்சிகள் முற்றிலுமாக விற்கப்படும்" என கிரிப்டோ கரன்சி குறித்து `ஜே.பி மார்கன்' அண்மையில் ஷாக்கிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜே.பி மார்கன் நிறுவனத்தின் வியூக வல்லுநரான நிகோலாஸ், ``மக்களுக்கு கிரிப்டோ கரன்சிகளின் மீதான ஆர்வம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இப்படியே நீடித்தால் பல காயின்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர் சரிவில் பிட்காயின் விலை...
பொதுவாக, கிரிப்டோ கரன்சிகளின் ஏற்ற, இறக்கம் அதிக அளவில் இருப்பதால், பங்குச் சந்தையுடன் ஒப்பிடும்போது இதில் இருக்கும் முதலீட்டு அபாயம் இன்னும் அதிகம். அந்த அபாயத்தை அலட்சியமாக நினைத்து, `ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டுற மாதிரி' என கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தவர்கள் பலரும் இன்று தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய நிலையில், ஒரு பிட்காயினின் விலை ரூ.21,44,351 (28.08.2023 நிலவரப்படி...). கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் பிட்காயின் அதன் உச்சபட்ச விலையைத் தொட்டது. அப்போது ஒரு பிட்காயின் விலை ரூ.56,96,689. அதற்குப் பிறகு மிகப் பெரிய சரிவை சந்தித்த பிட்காயின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் தொடர் சரிவில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது.
கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்...
கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும், விலை ஏறுமா எனப் பல கேள்விகளுடன் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.ஓ.ஓ அர்ஜுன் விஜயிடம் கேட்டோம்.
``எந்தக் காலநிலையிலும் ஏற்ற, இறக்கம் அதிகம் இருக்கும் அசெட் கிளாஸ்தான் கிரிப்டோ கரன்சி. கடந்த 2022-ம் ஆண்டின் நவம்பரில் 16,000 டாலரில் இருந்த பிட்காயின், மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டிப்பாகி 32,000 டாலர் மதிப்புக்கு வந்தது. தற்போது மீண்டும் இறக்கம் கண்டுள்ளது.
கிரிப்டோவைப் பொறுத்தவரை, நாம் கரடிச் சந்தையில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளியே வரவில்லை. அதனால் அதிக அளவில் ஏற்ற, இறக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். குறுகிய காலத்தில் கிரிப்டோ சந்தையைக் கணிப்பது கடினம்.
இந்த ஏற்ற, இறக்கத்துக்கு முக்கிய காரணமாக இருப்பவை, அதிக வட்டி விகிதம் மற்றும் சீனாவின் மாறுபடும் பொருளாதாரச் சூழ்நிலை. சில மாதங்களுக்கு முன்பு வரை வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. லாபம் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி போன்ற ரிஸ்க் அதிகமுள்ள முதலீடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
பண வீக்கத்தின் காரணத்தால் அதிகரித்த வட்டி விகிதத்தின் மூலம், தற்போது முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கிரிப்டோ மார்க்கெட்டைப் பொறுத்தவரை, அது பிட்காயினைச் சுற்றியே சுழலும். பிட்காயின் ஏற்றம் கண்டால் மற்றவையும் ஏறும். பிட்காயின் இறங்கினால் மற்ற காயின்களின் விலையிலும் சரிவு இருக்கும்.
பிட்காயின் ஹால்விங் ஈவென்ட் (Bitcoin Halving event) வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, சந்தை வலுவானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் அதிக ஆபத்துள்ள சொத்துகள் என்பதால், எப்போது வேண்டுமானாலும் இழப்பை சந்திக்க நேரிடும். அதனால் இந்த வகை முதலீடுகளில் தங்களது மொத்த போர்ட்ஃபோலியோவில் 2% - 3% பணத்தை முதலீடு செய்தாலே போதும்" என்றவரிடம், கிரிப்டோ மார்க்கெட்டில் மோசடிகள் அதிகம் நடக்கிறதே! என்று கேட்டோம்.
கிரிப்டோ மோசடிகள்!
``கிரிப்டோ சந்தையில் மோசடிகள் அதிகம் நடக்கின்றன. கடந்த காலங்களில் இதுகுறித்த செய்திகளை மீடியாக்களில் நாம் எல்லோருமே பார்த்திருப்போம். இதைத் தவிர்க்க வேண்டுமெனில், தரகர்கள் மூலம் வாங்காமல், நேரடியாக வாங்குவதே சரி. எதில் பணம் போடுகிறோம், ஏன் போடுகிறோம், இது லாபகரமாக இருக்குமா என்கிற ஆராய்ச்சியில் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் இறங்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை ஒன்றில் போடுவதற்கு முன்பு அதுகுறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். தெரியாத புதிய காயின்களில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு, பரிச்சயமான டாப் 10 காயின்களில் முதலீடு செய்வது நல்லது" என்றார்.
கிரிப்டோ கரன்சியில் பணம் போட நினைப்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது!
from Latest news https://ift.tt/fpGqoBb
0 Comments