சொந்த தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் கடன் வாங்கி இறால் பண்ணை வைக்கும் ஹீரோ (ஆதி), நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் மாட்டுகிறார். 'கடனை கட்டு; இல்லைனா உன் தங்கச்சியைக் கட்டிக்கொடு' எனக் கடன் கொடுத்தவர் கேட்க, பணம் சம்பாதிக்க வழக்கம்போல சென்னைக்குப் புறப்பட்டு வருகிறார் ஆதி. சென்னையில் மாடர்ன் திருடனாக இருக்கும் தனது நண்பர் யோகி பாபுவுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் பாட்னராகினார். சில பல திருட்டுகளை சக்சஸாக முடித்த பின்னர் வில்லன் ஜான் விஜய்யிடம் இருந்து ஒரு அசைன்மென்ட் வருகிறது. விஞ்ஞானியாக இருக்கும் ஆர்.பாண்டியராஜனின் லேப்பில் இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சிப் ஒன்றைத் திருடுவதற்காகச் செல்கிறது இந்தக் கூட்டணி.
அங்கு நடந்த களேபரத்தில் தவறுதலாக யோகி பாபுவுக்கு ஊசி ஒன்று போடப்படுகிறது. ஊசி போட்ட பின் ஹன்சிகாவாக மாறுகிறார், யோகி பாபு. மீண்டும் அவர் யோகி பாபுவாக மாறினாரா, ஆதிக்குத் தேவைப்பட்ட பணம் கிடைத்ததா எனப் பல கேள்விகளுக்கான விடையே மீதிக்கதை. (என்னங்க மொத்த கதையையும் மொத பாராவிலேயே சொல்லிட்டீங்கனு கேட்காதீங்க. அவங்க டிரெய்லரிலேயே இதைச் சொல்லிட்டாங்க...)
நாயகன் ஶ்ரீதராக ஆதி. பல படங்களில் இறுக்கமான கதாபாத்திரங்களாகவே நடித்த ஆதிக்கு, இங்கு ஜாலி கேலி செய்யும் வேலை. ஆனால், 'மரகத நாணயம்' படத்தின் சாயல் இதில் கொஞ்சம் தெரிந்ததாலும் இவரின் கதாபாத்திரம் மற்ற கேரக்டர்களை விடக் கொஞ்சம் வீக்காக இருந்ததாலும், இது ஆதிக்கான படமாக இல்லாமல் போகிறது. கல்யாணாக யோகிபாபு. முதல் பாதி முழுக்கவே வந்தாலும் சிரிப்பை ஓரிரு இடங்களில் மட்டுமே வர வைக்கிறார். மற்றபடி, அதே பழைய டெம்ப்ளேட் காமெடிகள்தான்.
படத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஹன்சிகாதான். இரண்டாம் பாதியில் யோகி பாபுவுக்குப் பதில் வரும் ஹன்சிகா, அவரது வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். உள்ளுக்குள் ஆணாகவும் வெளியில் பெண்ணாகவும் என அவரின் வித்தியாசமான உடல்மொழி கவனிக்க வைக்கிறது. குறிப்பாக, ஹன்சிகாவுக்கு டப்பிங் கொடுத்திருக்கும் சவிதாவிற்கு அப்ளாஸ் கொடுக்க வேண்டும். ஹன்சிகாவின் பாதி வேலையை அவர் டப்பிங்கிலே செய்துவிட்டார். படம் முடிந்த பின்னர், 'யோகி பாபு சீக்கிரமாகவே ஹன்சிகாவாக மாறியிருக்கலாம்' எனத் தோன்ற வைக்கும் அளவிற்கு இருக்கிறது ஹன்சிகாவின் நடிப்பு.
படத்தில் இந்தக் கதாபாத்திரங்கள் போக, மூடர்கூட கேங்காக வரும் ரோபோ சங்கர், 'பழைய ஜோக்' தங்கதுரை, 'டெம்பிள் மங்கீஸ்' அகஸ்டின், வில்லனாக வரும் ஜான் விஜய், விஞ்ஞானியாக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக வரும் பல்லக் லல்வானி, யோகி பாபுவின் காதலியாக வரும் 'மைனா' நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா என சுந்தர்.சி படப் பாணியில் பலரையும் லாரியில் ஏற்றிக் கூட்டி வந்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர் அண்ட் கேங் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் நம்மைச் சோதிக்கிறார்கள்; ஜான் விஜய்யும் அவர் பங்கிற்கு அவரின் டெம்ப்ளேட் பாணியில் வசனம் பேசிக் கடுப்பாக்குகிறார். பிரதான நடிகையாக ஹன்சிகா இருந்ததால் பல்லக் லல்வானி படத்திலிருந்ததே தெரியாமல் போகிறது. ரவி மரியாவுக்கு அவர் ஏற்கெனவே நடித்த 'தேசிங்கு ராஜா', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படங்களைப் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும், ஓரளவுக்குச் சமாளித்திருக்கிறார். முனிஷ்காந்த்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் ஹிட் ஆல்பமான 'ராட்டி' பாடலை இந்தப் படத்தில் வைக்க வேண்டும் என்கிற ஐடியா நன்றாக இருந்தாலும், அதை இயக்குநர் மனோஜ் தாமோதரன் சரியான இடத்தில் வைத்திருக்கலாம். அதே போல் இயக்குநர், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அதிகமாக உழைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாகக் கடைசி 20 நிமிடங்கள் நகைச்சுவை கலாட்டா. இதைப் படம் முழுக்கவே செய்திருக்கலாமே! அதிலும் வசனங்களில் கூடுதல் கவனமாக இருந்திருக்கலாம். குறிப்பாக, 'பொண்ணுங்க தம் அடிப்பாங்க; தண்ணி அடிப்பாங்க. கோவம் வந்தா புருஷனைப் போட்டு அடிப்பாங்க. கேட்டா ஃபெமினிசம்னு சொல்லுவாங்க' எனப் பெண்ணியத்தைப் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் வரும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அதேபோல், படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அடிப்படையான லாஜிக் மிஸ்டேக்குகளை மட்டுமாவது தவிர்த்திருக்கலாம். குறிப்பாக, அவ்வளவு பெரிய வில்லன், வேலையை முடிப்பதற்கு முன்னரே 50 லட்சம் பணத்தை மொத்தமாகக் கொடுத்துவிடுவாரா என்ன? பணத்தை மையமாக வைத்துத்தான் கதை நகர்வதால், அவர் ஏன் மொத்தமாகப் பணத்தைக் கொடுத்தார் என்பதற்கான தெளிவான காரணத்தையாவது படத்தில் சொல்லியிருக்கலாம். படத்தை இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களுக்குள் சுருக்கிய எடிட்டர் பிரதீப் E. ராகவ்விற்கு நன்றிகள் பல!
குறைகளே கூட்டுச் சேர்ந்து கும்மியடிப்பதால் இந்த பாட்னரோடு நம்மால் பாட்னர்ஷிப் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது.
from Latest news https://ift.tt/xq21zy8
0 Comments