கோவையில் குதூகலம்.. 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி! #StartupTN

ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பரவலாக்கவும்,  ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உலகளாவியச் சந்தைகளை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தோடும், கோவை கொடிசியா வளாகத்தில் 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா 2023' ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று கோலாகலமாக ஆரம்பித்தது.

ஆகஸ்ட் 20-ம் தேதி நாளையுடன் நிறைவடையும் இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவைக் காணொளி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கொடிசியா வளாகம்

இதில் 450-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டுள்ளன. இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வில் ஆழி செந்தில்நாதன், சுரேஷ் சம்பந்தம், சி.கே.குமரவேல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக ஆளுமைகளின் உரைகளும் அவர்களுடனான கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன.

மேலும், இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டார்அப் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. இதில் முதலீட்டாளர்களின் சந்திப்புகளும், தொழில்முனைவு வல்லுநர்கள், வழிகாட்டுநர்கள் ஆகியோர் உடனான கலந்துரையாடுவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிகழ்வைக் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பெருநகரங்களைத் தாண்டி மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022-23 நிதியாண்டு மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், நடப்பு நிதியாண்டில் சேலம், ஓசூர், தஞ்சாவூர் போன்ற இரண்டாம்கட்ட நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்கள்  நிறுவப்படவுள்ளன" என்றார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூரி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

ஸ்டார்ட்-அப் கால்சென்டர்!

இன்றைய ஸ்டார்ட்-அப் திருவிழா நிகழ்வில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கால் சென்டர் ஒன்றையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த.மோ.அன்பரன் ஆரம்பித்திருக்கிறார்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த கால்சென்டருக்கான டோல் ப்ரீ எண் '155343'. இந்த எண்ணுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

இந்த கால் சென்டர் அனைத்து வேளை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு திருவிழா குறித்து பேசியபோது, "முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும்" என தெரிவித்தார்.

சிவராஜா ராமநாதன், சி.இ.ஓ, டான்சிம்

அனைத்துக்கும் முத்தாய்ப்பாக 'TANSEED 5.0' என்று சொல்லப்படுகிற, நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான கடனில்லா தொகை ரூ.3.5 கோடி நிதியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அமைச்சர் த.மோ.அன்பரன் வழங்கினார்.

இந்த நிதியானது பிசினஸ் ஆரம்பிப்பதற்கு உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 23 நிறுவனங்களின் நடவடிக்கைகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் கண்காணித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும்.

StartupTN

இந்நிகழ்ச்சியை பார்வையிட மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள், கொடிசியா வளாகத்தில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள முன்பதிவு நிலையத்துக்கு வந்து, தங்களின் விவரங்களை பதிவு செய்து உள்நுழைவுக்கான பாஸை வாங்கிக்கொள்ளலாம் என்று விழாக் குழுவினர் தெரிவித்தனர்.



from Latest news https://ift.tt/QbcSGR7

Post a Comment

0 Comments