இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாகக் கூடிய நிலைமையும் வந்துவிட்டது.
நமது சந்ததிகளுக்குப் பாரம்பரிய விளையாட்டுகளைக் கூட கணினியில் விளையாடிப் பழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அதே சமயம் சைபர் குற்றங்களும் ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வீடியோ கால் முதல் டெபிட் கார்டின் 16 டிஜிட் நம்பர் வரை சைபர் குற்றங்கள் பல விதமாக மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதைக் குறைப்பதும் தடுப்பதும் அரசுகளின் தலையாய கடமையாகும்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சைபர் குற்றங்களைக் குறைக்க இந்திய அரசாங்கம் பல முன்னெடுப்புகள் வருகிறது. தவறான வழிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 52 லட்சம் சிம் கார்டுகள் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளன. 67,000 சிம் கார்டு டீலர்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்காகப் பல்வேறு விதிமுறைகளையும் அவர் கூறியுள்ளார். “முன்பெல்லாம் மக்கள் சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கினர். இதற்காக சிம் கார்டுகளை மொத்தமாக வாங்குவதற்கான பிரத்யேக விதிமுறைகள் இருந்தன. இப்போது அதனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மோசடி அழைப்புகளை நிறுத்த உதவும்” என்று அமைச்சர் கூறினார்.
ஒரு தனிநபரின் அடையாளங்களைப் பயன்படுத்தி ஒன்பது சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்க இயலும். இவ்வாறு வாங்கப்பட்ட சிம் கார்டுகள், சரியான தனிநபர் விவரங்கள் மற்றும் கை ரேகை போன்ற உடல் அடையாளங்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஆக்டிவ் ஆகும். கைரேகைக்கு மாற்றாக ஆதாரின் கருவிழி மற்றும் முக வடிவமைப்பு ரீதியான பயோமெட்ரிக் முறைகளையும் பயன்படுத்தலாம்.
விற்பனை செயல்முறைக்கான சீர்திருத்தத்தின் கீழ், விற்பனையாளர் சேவை வழங்குநருடன் ஒப்பந்தத்தில் ஈடுபடவேண்டும். மேலும் விற்பனையாளர் ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டால், தொலைத்தொடர்பு நிறுவனத்துடனான அவரின் தொடர்பு மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டு தடைப்பட்டியலில் சேர்க்கப்படும். இது மட்டுமல்லாது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தற்போதுள்ள அனைத்து விற்பனையாளர்களும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் 12 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் விற்பனையாளர்களை அடையாளம் காணவும், தடைப்பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது. தனிநபர் விவரங்களுக்கான சீர்திருத்தங்களின் கீழ், ஆதாரைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, புதிய சிம்களைப் பெறும் நபரின் விற்பனையாளரிடம் அளித்துள்ள ஆதாரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இதற்கு முன் அவர் எத்தனை சிம் கார்டுகளை வாங்கியுள்ளார் என்பது தொடர்பான விவரங்களை எளிதில் பெற இயலும்.
இந்த விதிகளை மீறியதற்காகத் தடை செய்யப்படும் சிம் எண்கள் அடுத்த 90 நாள்களுக்குள் புதிய வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படும். பழைய தனிநபர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் அவருக்குத் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்படும். இதற்காகத் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட சிம் எண்களை ப்ளாக் செய்வதற்காக `சஞ்சார் சாத்தி (Sanchar Saathi)' எனும் இணையதளம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.
இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 52 லட்சம் சிம் கார்டுகளும், 67,000 டீலர்களும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
புதிது புதிதாக சைபர் குற்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்து வரும் குற்றவாளிகளுக்கு இது பெரும் அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Latest news https://ift.tt/3IxG9aU
0 Comments