மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் தினமான நேற்று, ராஜீவ் காந்தியின் அரசியல் மிகக் கொடூரமான முறையில் முடிந்ததாக, அவரின் மனைவியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி கூறியிருக்கிறார். முன்னதாக, ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற 25-வது ராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருது வழங்கும் நிகழ்ச்சியில், சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், 2020-21 ஆம் ஆண்டுக்கான 25வது ராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருதை, ராஜஸ்தானிலுள்ள பெண்களுக்கான குடியிருப்பு நிறுவனமான பனஸ்தாலி வித்யாபீடத்துக்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் எம்.ஹமீத் அன்சாரி வழங்கினார்.
அதைத்தொடந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய சோனியா காந்தி, ``ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிந்தது. ஆனாலும் அவர், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே பல உச்சங்களைத் தொட்டார். நாட்டின் பன்முகத்தன்மையில் மிகவும் கவனம் செலுத்தினார். அதோடு, நாட்டுக்கு சேவை செய்யக் கிடைத்த நேரங்களிலெல்லாம் பல எண்ணற்ற சாதனைகளைச் செய்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர் போராடினார்.
இன்றைக்கு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என்றால், அதற்கு ராஜீவ் காந்தியின் கடின உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் தான் காரணம். மதம், இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்பதில் அவர் மிகவும் நம்பிக்கையுடையவர்" என்று கூறினார்.
1984-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைசெய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பதவியேற்ற அவரின் மகன் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/GVf24ik
0 Comments