"இளையராஜா என் அப்பாதான், இருந்தாலும் கதாபாத்திரத்துக்கு அவர் பெயர் வெச்சா கேஸ் போடுவார்!"- மிஷ்கின்

ஜி.வி.பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரின் அடுத்த ரிலீஸ் `திட்டம் இரண்டு' திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `அடியே' திரைப்படம்.

இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் கெளரி கிஷன், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றுன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, இயக்குநர்கள் வசந்த பாலன், சிம்பு தேவன், மிஷ்கின், ஏ.எல் விஜய், கார்த்திக் சுப்புராஜ், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று ஜி.வி.பிரகாஷுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அகியோர் படக்குழுவினரைப் பாராட்டி விடைபெற்றனர். அடுத்ததாக வந்து பேசிய இயக்குநர் ஏ.எல் விஜய், "கான்செப்ட் ரொம்பவே புதுமையா இருக்கு. 'லவ் டுடே' எப்படி ஒரு சென்சேஷனை உருவாக்கிச்சோ அது மாதிரி 'அடியே' திரைப்படமும் அமையும். ஜி.வி-ய எப்பவும் 'நண்பா'ன்னுதான் கூப்பிடுவேன்" எனப் பேசினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "கிறிஸ்டோபர் நோலன் படத்துல லவ் & ரொமான்ஸ் இருந்தா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கு 'அடியே' படத்தோட டிரெய்லர். ஜி.வி பிரகாஷோட 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என முடித்துக் கொண்டார்.

இயக்குநர்கள் விஜய், கார்த்திக் சுப்புராஜ்

இதனையடுத்து மேடையேறிய இயக்குநர் சிம்பு தேவன், "மல்டிவெர்ஸ் அப்படிங்கிற கான்செப்ட்லாம் 'அவென்ஜர்ஸ்'ல பார்த்தது. இப்போ தமிழ்ல அது மாதிரி ஒரு படம் உருவாகியிருக்கு. ஜி.வி ஒரே நேரத்துல ரெட்டைக் குதிரை மாதிரி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பயணிச்சிட்டிருக்காரு" எனக் கூறினார்.

அடுத்ததாக வந்து பேசிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன், "ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ணுற படத்துக்கு மியூசிக் போட ஜி.வி பிரகாஷ்கிட்ட பேசியிருந்தேன். அது நடக்கவேயில்ல. இப்போ திரும்ப 6 வருஷத்துக்கு முன்னாடி அவர நடிக்க வைக்கிறதுக்குக் கேட்டேன். அதுவும் நடக்கல. மியூசிக்ல இருந்த அவரோட முதிர்ச்சியை நடிப்பிலும் கொண்டு வராரு" எனப் பேசினார்.

இவரைத் தொடர்ந்து மேடையேறிய இயக்குநர் மிஷ்கின், "சினிமால ஒரு நபரை நகைச்சுவைக்காக விமர்சிக்க முழு உரிமை கொடுக்கணும். இன்னைக்கு காலைல என் படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி எழுதிட்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்துக்கு 'இளையராஜா'ன்னு பெயர் வெச்சேன். என் அப்பாதான் அவரு, இருந்தாலும் பெயர் வச்சதுக்கு அவரே என் மேல கேஸ் போடுவார்" என கிண்டலாகப் பேசியவர், விஷாலுடனான பிரச்னை குறித்தும் பேசினார்.

"விஷால் துரோகத்த மறக்கமாட்டேன்னு சொல்றான். அவன் என் இதயத்துக்கு ரொம்ப நெருக்கமானவன். சண்ட போடாம எப்படி வாழ்க்கை இருக்கும். அவன்கூட படம் பண்ணலைன்னாலும் அவனோட படம் ஹிட்டாகணும். உடனே எல்லோருக்கும் விஷாலுக்கு ஐஸ் வைக்கிறான்னு எழுதுவாங்க. ஆனா, அவன்கூட இனிமேல் படமே பண்ணமாட்டேன்" எனப் பேசினார்.

mysskin

அடுத்ததாக வந்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "உலக சினிமா வரலாற்றுலயே முதன் முறையா நான் கெளதம் மேனனாக நடிச்சிருக்கேன். நான் அவராகப் பண்ணியிருக்கேன்னு கெளதம் மேனனுக்கே தெரியாது. படத்துல கெளதம் மேனன் வாய்ஸுக்கு மிமிக்ரி கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்தான். 'அடியே' ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்துட்டே 'வாத்தி' படத்தோட பாடல் ரெக்கார்டிங் வேலைகளைப் பண்ணினார் ஜி.வி!" எனக் கூறி விடைபெற்றார்.

இறுதியாக வந்து பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, "இந்தப் படத்துல யுவன் ஒரு பாட்டு பாடியிருக்காரு. நான் தேசிய விருது வாங்கினப்போ எனக்கு நேர்ல கிஃப்ட் பண்ணினார்" எனப் பேசி விழாவை முடித்து வைத்தார்.



from Latest news https://ift.tt/Wn7Zj1z

Post a Comment

0 Comments