சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளுக்கு மே மாதம் இறுதித் தேர்வு முடிந்த நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் உயர் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய மாணவி மிருதுளா, "சென்னைப் பல்கலைக்கழத்துக்கு உட்பட்டு சுமார் 130 கல்லூரிகள் இயங்கிக்கொண்டு வருகிறது. இந்தக் கல்லூரிகளில் மே மாதம் இறுதியாண்டு பருவத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது குறித்து நாங்கள் விசாரித்தபோது விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், சட்டக் கல்லூரிகளில் வரும் 20-ம் தேதியோடு சேர்க்கை முடிவடைகிறது.
இதனால் சட்ட மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களால் சட்டக் கல்லூரியில் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதைப்போல் உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கும் சிக்கலும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை 250 மடங்கு உயர்த்தியிருப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ரூ.100-ஆக இருந்த கல்விக் கட்டணம் ரூ.25,000 உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னறிவிப்பின்றி கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை எளிய மாணவர்களை வஞ்சிக்கக்கூடிய செயலாக இருக்கிறது. கடந்த மே மாதம் 5-ம் தேதி அடிப்படை வசதி செய்து தரக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் எந்தக் காரணம் கொண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தபோது பல்கலைக்கழக துணைவேந்தரும் பதிவாளரும் கல்விக் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். ஆனால், இப்பொழுது எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மாணவர்கள் செய்யும் துரோகம்" என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளரை மாணவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மாணவர்களிடம் பேசிய பதிவாளர் ஏழுமலை, "உடனடியாக விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்படும். ஆசிரியர்களை ஒருங்கிணைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களைக் களைந்து விரைவில் அந்தப் பணிகளை முடித்துவிடுவோம். 20-ம் தேதிக்குள் அந்தப் பணிகளை முடிக்க முடியவில்லையெனில் அதற்கு முன்னதாகவே சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூலம் கடிதம் அனுப்பி விண்ணப்பிக்கக்கூடிய தேதியை தள்ளிவைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று மாணவர்களுக்கு உறுதியளித்தார். அதன் பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்
from Latest news https://ift.tt/GgET82C
0 Comments