தமிழகத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்துக்கு சுப நிகழ்ச்சிக்கோ, துக்க நிகழ்ச்சிக்கோ செல்லும்போது இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லவே முடியாது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் குழாய் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல் உங்களை அங்கேயே அழைத்து செல்லும்.
அந்தளவுக்கு கிராம மக்களின சுக துக்கங்களில் ஒலிபெருக்கி அமைப்பாளர்களுக்கு முக்கிய இடமுண்டு. நகரங்களில் கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும், கிராமங்களில் இன்னும் ஒலித்துத்துக் கொண்டுதான் உள்ளது.
எதையும் கொண்டாட்டமாக பார்க்கும் மதுரைக்காரர்கள் இதற்கும் ஒரு போட்டி வைத்து ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் மறைந்த பிரபலப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூம்புக் குழாய்களில் பழைய முறைப்படி ரிக்கார்டு மூலம் பாடல் ஒலிபரப்பும் இந்தாண்டுக்கான போட்டி சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் அதிகமான ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் பழைய முறைப்படி கிராமபோன் ரிகார்டு பிளேயர் மூலம் டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.
யார் ஒலிபரப்பும் பாடல் அதிக சத்தத்துடனும், துல்லியமாகவும் ஒலிக்கிறதோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மூன்று சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வென்ற ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வரும் 22-ஆம் தேதி நடக்கும் விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி மூலம் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒலிபெருக்கி அமைப்பாளர்கள், "நலிவடைந்து வரும் இந்தத் தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாக இப்போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு டி.எம்.எஸ்-சின் நூற்றாண்டு விழா என்பதால் வெகுவிமர்சையாக போட்டியை நடத்தி வருகிறோம்" என்றனர்.
from Latest news https://ift.tt/0t8E3Sq
0 Comments