ஜெயிலர் - சினிமா விமர்சனம்

ஓய்வுபெற்ற ஜெயிலர், காவல்துறை அதிகாரியான தன் மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிதீர்க்கும் படலத்தில் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொண்டார் என்பதே ‘டைகர் கா ஹுக்கும்.'

அமைதியான குடும்பத்தலைவனாக ரிட்டயர்டு வாழ்க்கை வாழும் முத்துவேல் பாண்டியனின் (ரஜினி) மகனான அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன் (வசந்த் ரவி), ஒரு சிலைக் கடத்தல் கும்பலைத் தேடியலைகிறார். திடீரென்று காணாமல்போகும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று காவல்துறையே சொல்கிறது. அதற்குப் பழிவாங்கப் புறப்படும் முத்துவேல் பாண்டியன், அவர் நண்பர்கள், வில்லன் வர்மா (விநாயகன்) ஆகியோரைச் சுற்றிச்சுழல்கிறது கதை.

ஜெயிலர் - சினிமா விமர்சனம்

சின்னச்சின்ன அசைவுகளில் இப்படிப்பட்ட மேஜிக்கைத் தன்னால்தான் நடத்த முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ரஜினி. ரிட்டயர்டு அதிகாரியாக குடும்பத்தினரால் நடத்தப்படும் நகைச்சுவைக்காட்சிகள், தன் மகனைக் காணாமல் கலங்கும் உருக்கமான தருணங்கள், முடிந்தவரை பிரச்னைகளைத் தவிர்க்க எடுக்கும் முயற்சிகள், ஒருகட்டத்தில் தன் உண்மைச் சொரூபத்தை விஸ்வரூபமாக்கிக் காட்டும் அதிரடி எனப் படம் முழுதும் ரஜினி ராஜ்ஜியம். மேக்கப், கிராபிக்ஸ், மார்பிங் என எல்லாம் சேர்ந்தும் சொதப்பும் அந்த பிளாஷ்பேக் காட்சி கதைக்கும் எந்த விதத்திலும் உதவவில்லை. மிரளவைக்கும் வில்லனாக அறிமுகமாகும் விநாயகன், போகப்போக டம்மியாக்கப்பட்டுவிட்டார். மோகன்லாலும் சிவராஜ்குமாரும் சில காட்சிகள் என்றாலும் தங்கள் ஸ்டார் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார்கள். ஒரேமாதிரியான முகபாவத்துடன் வசந்த் ரவி. ரம்யாகிருஷ்ணன், மிருணா ஆகியோருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. யோகிபாபு, சுனில், சுனில் ஷெட்டி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். இதைத்தாண்டி தமன்னா, விடிவி கணேஷ், மாரிமுத்து, ரெடின் கிங்ஸ்லி என்று இரண்டு தேசியக்கூட்டணிகளில் இருக்கும் கட்சிகளைவிட அதிகமான எண்ணிக்கையில் நடிகர் பட்டாளம்.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு பேன் இந்தியா படத்துக்கான தகவமைப்பை உருவாக்கியிருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மிகப்பெரும் பலம்.

ரஜினி ஸ்டைல், நெல்சனின் டார்க் ஹியூமர் என்ற காம்போ முதல்பாதியில் நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே ரசிக்கும் காட்சிகள் இருந்தாலும் எங்கெங்கோ கதை திசைமாறிப் பயணிக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ரஜினி - மோகன்லால் - சிவராஜ்குமார் மூவரையும் இணைத்த விதம் செம. ஆனால் வன்முறைக் காட்சிகள் ஓவர்டோஸ்.

ஜெயிலர் - சினிமா விமர்சனம்

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி தனக்கு சமூகவிரோதியால் நெருக்கடி வரும்போது காவல்துறையை நாடாமல் ஏன் பேன் இந்தியா கிரிமினல்களை நாடுகிறார், படம் முழுக்கச் சொல்லப்படும் ‘நேர்மை' என்பதற்கு என்னதான் அர்த்தம், அசிஸ்டென்ட் கமிஷனர் காணாமல் போனதைக் காவல்துறை கண்டுகொள்ளாதது ஏன், அட குடும்பத்தில்கூட ரஜினியைத் தாண்டி யாரையுமே வசந்த் ரவியின் மறைவு அவ்வளவாகப் பதற்றப்பட வைக்கவில்லையே - இதுபோல் இன்னும் லாஜிக் கேள்விகளை மூட்டைகட்டி தியேட்டர் வாசலில் வைத்துவிட்டுப்போனால் ஜெயிலரை ரசிக்கலாம்.



from Latest news https://ift.tt/k1J8OH9

Post a Comment

0 Comments