பிறக்கும்போதே குழந்தைக்கு மூச்சடைப்பு… மூளை பாதிப்பு ஏற்படுமா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 34

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

கேள்வி: டாக்டர், என்னுடைய பிரசவத்தின் போது, குழந்தை கர்ப்பப்பையிலேயே மலம் கழித்துவிட்டதாகவும், இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகவும் கூறி, எமெர்ஜென்சி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தை பிறந்தவுடன் அழவில்லை. செயற்கை சுவாசம் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றினர். குழந்தையை பிறந்தது முதல், NICU-இல் வென்டிலேட்டரில் வைத்துள்ளனர். குழந்தை பிறக்கும்போது தீவிர மூச்சடைப்புடன் பிறந்ததால், மூளைக்கு ஏற்பட்ட ஆக்ஸிஜன் குறைபாட்டால், மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பாதிப்பைக் குறைக்க, ‘தாழ்வெப்பநிலை சிகிச்சை’ தொடங்கியுள்ளதாக மருத்துவர் கூறினார். குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட மூளை பாதிப்பு சரியாகி விடுமா?

உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன் பிறக்கும்போது எவ்வாறு குழந்தைக்கு தீவிர மூச்சடைப்பு ஏற்படுகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்த்துவிடலாம்.

கர்ப்பப்பையில் இருக்கும்போது, குழந்தைக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் முதல், அனைத்து அத்தியாவசிய சத்துகளும், தாயிடமிருந்து, நஞ்சுக்கொடியைக் கடந்து, தொப்புள்கொடி வாயிலாக குழந்தையைச் சென்று சேர்கின்றன. ஆனால், பிரசவ நேரத்தில், இந்த ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால், குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளை முதல் அனைத்து உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். இதனை Perinatal Asphyxia (பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பு) என்போம். இதனால், ஒவ்வொரு வருடமும் 9 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றனர். இறந்து பிறக்கும் குழந்தைகளில் 45% காரணம், Perinatal Asphyxia ஆகும்.

மூச்சடைப்பு | Perinatal Asphyxia

பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பிற்கான காரணங்கள்:

தாயிலிருந்து சேயிற்கு தொப்புள்கொடி வாயிலாக நிகழும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால், சேய்க்கு மூச்சடைப்பு பாதிப்பு நிகழும். பின்வரும் காரணங்களில் இந்த பாதிப்பு நிகழும் அபாயம் அதிகமுள்ளது:

* தாய்க்கு தீவிர உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், நோய்த்தொற்று, நீரிழிவு நோய், இருதய மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள்

* நஞ்சுக் கொடி தகர்வு (abruption placenta)

* கர்ப்பப்பை கிழிவு (uterine rupture)

* தொப்புள்கொடி சரிவு (umbilical cord prolapse)

* தொப்புள்கொடி மீது நிகழும் அழுத்தம்

எனினும், இவ்வாறு அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகள் சரிவர மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அவர்களது பிரசவம் சிறந்த மருத்துவ கண்காணிப்பில் நிகழ்ந்தால், குழந்தைக்கு மூச்சடைப்பு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும்போது, கர்ப்பப்பையில் இருக்கும்போதே, குழந்தை மலம் கழித்து விடும். அதைப்போல், தொப்புள் கொடியின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு தொடரும்போது, குழந்தையின் இதயத் துடிப்பில் பாதிப்புகள் ஏற்படும்.

அதனை ஆரம்ப கட்டத்திலேயே, சேயின் இதயத் துடிப்பை கண்டறியும் கார்டியோடோகோகிராபி கருவி (Cardiotocography) மூலம் கண்டறிய முடியுமென்பதால், சிறந்த மருத்துவ கண்காணிப்பின் மூலம், குழந்தைக்கு ஏற்படும் மூச்சடைப்பு பாதிப்பு கண்டறியப்பட்டு, எமெர்ஜென்சி சிசேரியன் அல்லது புறத்தூண்டுதலைக் கொண்ட சுகப்பிரசவம் (Assisted vaginal delivery) செய்யப்பட்டு, பல லட்சக்கணக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தை

பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பினால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்:

பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பினால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல் உட்பட அனைத்து உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். மூளையில் நிகழும் ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்ட தடை காரணமாக, மூளையில் பாதிப்புகள் ஏற்படும்.

இதனை ‘Hypoxic Ischemic Encephalopathy’, சுருக்கமாக HIE என்றழைப்போம். இந்த HIE பாதிப்புகள் மூளையில் தீவிரமாக ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு அபாயம் முதல், வாழ்நாள் முழுதும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் வரை உள்ளது.

குழந்தை பிறந்த போது, உடனே அழவில்லையென்றால், அதற்கு பிறக்கும்போது மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை. பிறக்கும் அனைத்து குழந்தைக்கும் குழந்தை ஆரோக்கிய எண்ணான APGAR score-ஐ மருத்துவர் குறிப்பிடுவர். அந்த APGAR score குறைவாகவும், தொப்புள் கொடியில் ஏற்பட்ட ரத்த ஓட்ட தடையை தொப்புள்கொடி ரத்த வாயுப் பரிசோதனை (Cord Blood Gas analysis) மூலம் உறுதிப்படுத்திய பிறகும், பிறக்கும்போது குழந்தைக்கு மூச்சடைப்பு ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டறிவர். மிதமான மற்றும் தீவிர மூச்சடைப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு, பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சைகள் உடனடியாகத் தொடங்கப்படும். மூளை பாதிப்பினால் வலிப்பு ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கப்படும். இதய பாதிப்பினால் குழந்தையின் ரத்த ஓட்டம் குறைந்தால், இதய செயல்பாட்டை அதிகரிக்க மருந்துகள் கொடுக்கப்படும். சுவாசப் பிரச்னை தீவிரமாக இருந்தால், வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்படும்.

மரண அபாயம் மற்றும் மூளை பாதிப்பை வெகுவாகக குறைக்கும் ‘தாழ்வெப்பநிலை சிகிச்சை’:

குழந்தை பிறக்கும்போது நிகழ்ந்த HIE பாதிப்பினால், மூளையில் திசு அழிவு ஏற்பட்டிருக்கும். அதனை சுற்றியுள்ள திசுக்களில், ரத்த ஓட்டம் மீண்டும் தொடங்கும்போது, free radicals மூலம மேற்கொண்டு திசு அழிவு தொடரும். எனினும், இவ்வாறு தீவிர HIE பாதிப்புகள் ஏற்பட்டுள்ள குழந்தைகளில், பிறந்த 6 மணிநேரத்திற்குள், ‘தாழ்வெப்பநிலை சிகிச்சையை’ (Therapeutic Hypothermia) தொடங்கிவிட்டால், மூளை பாதிப்புகள் மேற்கொண்டு ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம்.

எனினும், இந்தச் சிகிசைமுறை, பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. உதாரணமாக, புதுச்சேரியில் ஜிப்மரை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், இந்தச் சிகிச்சை முறை இல்லை.

பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பினால் ஏற்படும் மரண அபாயம் மற்றும் மூளை பாதிப்பை வெகுவாகக் குறைக்கும் ‘தாழ்வெப்பநிலை சிகிச்சையை’ அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் அரசு நிறுவ வேண்டும்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

தற்போது, உங்கள் குழந்தைக்கு பிறக்கும்போது நிகழும் மூச்சடைப்பினால் எவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டன, மூளை பாதிப்பினை குறைத்திட கொடுக்கப்படும் தாழ்வெப்பநிலை சிகிச்சையின் தேவையையும் அறிந்திருப்பீர்கள். தீவிர சிகிச்சையில் உள்ள உங்கள் குழந்தைக்கு மருத்துவர் அளிக்கும் சிகிச்சைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திடுங்கள்.

மூளையில் ஏற்பட்டுள்ள தொடக்க பாதிப்புகளை குழந்தை பிறந்த 7- 10 நாள்களில் எடுக்கப்படும் MRI மூலமாகவும், 14 நாள்களுக்குப் பிறகு எடுக்கப்படும் MRI மூலமாக முழு பாதிப்பினை கண்டறிய முடியுமென்பதால், தேவைப்படும்பட்சத்தில் மூளைக்கு MRI எடுக்க உங்கள் மருத்துவர் அறிவுறுத்துவர். அதன் மூலம், எந்த அளவிற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதென கூற முடியும்.

பராமரிப்போம்…



from Latest news https://ift.tt/XjEA3Ru

Post a Comment

0 Comments