`விவசாய வேல முடிச்சுட்டுதான் நடிக்க வருவேன்' நடித்தது ஒரே படம்; தேசிய விருது; யார் இந்த நல்லாண்டி?

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் கடைசி விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தாவுக்காக தேசிய விருதில் 'Special Mention' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாத்தா நம்மிடையே இல்லையென்றாலும் எங்கிருந்தோ இச்சம்பவத்திற்கு மகிழ்வார்.

உசிலம்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமம். அங்குதான் நல்லாண்டி தாத்தா கடைசி மூச்சு வரை வாழ்ந்திருக்கிறார். `எவ்ளோ பெரிய வேலையா இருந்தாலும் விவசாயத்துக்குதான் முக்கிய இடம்' என விவசாயத்தில் ஆழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர், நல்லாண்டி தாத்தா. விவசாயத்தில் கிடைக்கப்பெறும் குறைவான ஊதியத்திலும். ஐந்து பிள்ளைகள், பேரன், பேத்தி என மகிழ்வுடன் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமின்றி தாத்தாவுக்கு ஆடு,மாடு,கோழிகள் மீது அலாதி பிரியம். அவரின் இயல்வு வாழ்க்கையின் திரைவெளிச்சம்தான் 'கடைசி விவசாயி'. உண்மையான விவசாயின் கதையை படமாக்க நினைத்த மணிகண்டனின் தேடலில் கிடைத்தவர்தான் நல்லாண்டி தாத்தா .

"அவரை தெரையில பார்த்தப்போ கண்ணீர் வந்துருச்சு. எங்கப்பா எப்படி இருந்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ, அதை அப்படியே படம் புடிச்சிருக்காங்க. படத்துல வர்றமாரி அவருண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாரு. வேற எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாரு. வெவசாயம் செய்யுறது, ஊர் மந்தையில உக்காந்து மனுஷ மக்களைக் கவனிக்கிறது, வூட்டுக்கு வந்து ஒறங்குறது இதுதான் அவரோட தினசரி வேலை. விடியுறதுக்கு முன்னால வயலுக்குப் போயிடுவாரு, மறுபடி எட்டு மணிக்கு வந்து இன்னைக்கு என்னென்ன வேலை செய்யணும், யாரு யாரு கூட வரணும்னு சொல்லுவாரு. அதோட நாங்களும் போயி வேலை பார்ப்போம்.

கடைசி விவசாயி

அங்கேயே வேலை பார்த்து சாப்ட்டுப்புட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவோம். அதனாலதான் ஊருல யாருக்காவது பஞ்சாயத்துல கொழப்பம்னா அப்பாகிட்டே வந்து கேப்பாக. யாருக்கும் சாதக பாதகமில்லாமல் சரியான தீர்வைச் சொல்லிடுவாரு. மத்தவங்க என்ன நினைப்பாகளோன்னு நேர்மை தவற மாட்டாரு. சினிமாவுல நடிக்கக் கூப்புடுறாகன்னு வந்து சொன்னப்போ முதல்ல ஒத்துக்கல. அப்புறம் வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டாரு. நெதமும் சூட்டிங்குக்குப் போவாரு, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து வீட்டுல கொடுப்பாரு. பேரன், பேத்திகளோட வெளையாடுவாரு. இப்படி ஓடியாடி இளவட்டம் மாதிரி இருந்தவரு, நோய் நொடின்னு படுத்ததில்லை. திடீர்னு எங்களை விட்டுப் போவாருன்னு நெனைக்கல. இந்தப் படம் வரும்போது அவர் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு’’ என தாத்தா குறித்து அவரது மகள் மொக்கத்தா நம்மிடையே கூறியிருந்தார்.

நல்லாண்டி தாத்தா குறித்து பேரன்,பேத்தி" சூட்டிங்கு போனீங்களே எப்படி இருந்துச்சுன்னு சீயான்கிட்டே கேட்டால், ‘அங்கிட்டு நடங்க, இங்கிட்டு வாங்க, வயல்ல இறங்கி வேலை செய்யுங்க, அப்படியே அங்க ஒக்காருங்கன்னு மணிகண்டன் தம்பி சொல்லுவாரு. இது நாம நெதமும் செய்யுறதுதானேன்னு செஞ்சு காட்டுவேன். ஏதாவது கேள்வி கேட்பாரு, நான் பதில் சொல்லுவேன், அவ்வளவுதான், போயிட்டு நாளைக்கு வாங்கன்னு அனுப்பிடுவாங்க’ன்னு சொல்லுவாரு. நாங்க சின்ன வயசுலேருந்து பாக்குறோம். ஒருநாகூட அவரு சும்மா இருந்தது இல்லை. இன்னைக்கு வேற வேலைக்கு நாங்க போனாலும் அவரைப் பார்த்துப் பார்த்து அவ்வளவு வெவசாய வேலைகளும் எங்களுக்குத் தெரியும்.

கடைசி விவசாயி

அவரோட வாழ்க்கையவே ஒரு சினிமாவா எடுக்கிற வாய்ப்பு எந்த விவசாயிக்குக் கிடைக்கும்? இதுவே எங்களுக்குப் பெருமையா இருக்கு. அவர் நடிச்ச படத்தை சீயான் இருந்து பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு. அதிலும் சீயான் ஜெயில்ல கைரேகை வச்சுட்டு அந்தக் கறையை அழிக்கப் பார்ப்பாரு. அழியாது. அந்தக் கைரேகைக்குப் பின்னால ஒரு வரலாறு இருக்கு. அந்த வேதனை எங்க பகுதி மக்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீனைப் பார்த்து எங்களுக்கு அழுகை வந்திடுச்சு. டைரக்டர் மணிகண்டன் எங்க சீயானை ஒரு வரலாறா மாத்திட்டாரு. அதை மறக்கமாட்டோம்" எனக் கூறியிருந்தார்கள்.



from Latest news https://ift.tt/6viS1FM

Post a Comment

0 Comments