தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு சார்பில், நேற்று (25.08.2023) விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அக்குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில், 5 குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இருமுறை பயண உத்தேச பட்டியல் மாற்றி அறிவிக்கப்பட்ட போதிலும், சில இடங்களில் திடீர் ஆய்வுகளை நடத்தியது அந்தக் குழு. நேற்று காலையிலேயே விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை அந்தக் குழு ஆய்வு செய்தது.
அப்போது, மூக்கை மூடும்படியான நிலையிலிருந்த பொது கழிப்பிடம், பேருந்து நிலையத்தில் இருந்த உடைந்த சிமெண்ட் கட்டைகள், பயணிகள் அமர்வதற்கு போதிய வசதியின்மை, விபத்துக்குள்ளான வாகனங்கள் பேருந்து நிலையத்தில் உள்ளே நிறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்டவற்றைப் பார்த்த குழுத்தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன்... "முதலமைச்சருக்கு அருகே மூன்றாவது நாற்காலியில் அமரக்கூடிய முக்கியமான அமைச்சர் உள்ள இந்த மாவட்டத்தின் பேருந்து நிலையமே சரி இல்லாமல் இருக்கிறதே. இவற்றை உடனடியாக சரி செய்யுங்கள்" என்று விழுப்புரம் நகராட்சி ஆணையரிடம் கடிந்து கொண்டிருக்கிறார்.
மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில், உணவுப் பொருட்களை கண்ணாடி பெட்டியில் வைக்காதது பற்றியெல்லாம் ஆய்வு செய்து கேள்வி எழுப்பி, உடனே மாற்றும்படி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சுற்றுச்சுவர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், வீடூர் அணையில் தூர்வாருதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விரைந்தது. அப்போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தக்கூறிய வேல்முருகன், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டோல்கேட் அதிகாரிகளிடம், "30 விநாடிகளுக்கு மேல் வண்டி நிற்கக்கூடாது. வெள்ளி, ஞாயிறு இரவுகளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நிற்க வைக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். இந்திக்காரர்களுக்கு வேலை, உள்ளூர் காரர்களுக்கு இல்லையா..?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியதோடு, விவசாயிகள், பத்திரிகையாளர்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும். ஆம்புலன்ஸூக்கு தனிவழி எங்கே? எனவும் கேட்டு கடுமை காட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து வீடூர் அணை, கூட்டேரிப்பட்டு மேம்பாலம், திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டவர்கள்... விக்கிரவாண்டி, அரசினர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மதிய உணவின் தரம் குறித்த ஆய்வு செய்துவிட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான உறுதிமொழிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 222 உறுதிமொழிகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.
அப்போது சுங்கச்சாவடி குறித்து பேச்சு எழுந்தபோது ஆத்திரமடைந்த வேல்முருகன், "ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களே கொதித்துப் போயிருக்கிறார்கள். அவரவர் வரி செலுத்தி லட்சம், கோடி ரூபாய் போட்டு வண்டி வாங்கினால், இவர்கள் டோல்கேட்டில் வசூலித்துக் கொண்டே இருப்பார்கள். அதைப் பற்றி ஏன்? என கேட்பவர்களை உள்ளூர் குண்டர்களை வைத்து அடிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். எந்த விதத்தில் இது நியாயம்.
அரசுப் பணிக்கான பாஸூடன் தானே செல்கிறோம். என் கான்வாயில் வந்த வண்டிக்கே டோல்கேட் நிர்வாகத்திடம் இருந்து மெசேஜ் வருகிறது. நீங்களே பேசி இதற்கான தீர்வு கொண்டு வர வேண்டும். இல்லையெனில், எங்கள் குழு சென்னையில் கூடி வேறுவிதமான நடவடிக்கையை எடுப்போம். இதை சும்மா விடமாட்டோம். இது அரசு நிகழ்ச்சி என்பதால் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி வாயிலாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறேன். இல்லையென்றால்..." என்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆவேசப்பட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "இந்த விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 222 உறுதிமொழிகளில், இன்றைய ஆய்வோடு நிறைவேற்றப்பட்டவை 110. படித்து பதிவு செய்யப்பட்டவை 12. நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவை 100. 'ஆக்ஷன் டேகன் ரிப்போர்ட்' என்று சொல்லக்கூடிய வகையில், 10 உறுதி மொழிகளில் 7 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டமையால், 8 உறுதிமொழிகள் அந்த மாவட்ட கோப்புகளின் இடம் பெற்றுள்ளது. தற்போது அவை விழுப்புரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, அதில் 4 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆய்வு செய்தபோது சுத்தமாக இருந்தது.
அங்கு ஏதேனும் குறைகள் இருப்பதாக எங்கள் கவனத்திற்கு வந்துவிட போகிறது என்பதற்காகவே, அந்த விடுதியில் இரவோடு இரவாக அனைத்து அறைகளிலும் புதியதாக மின்விசிறிகள், விளக்குகள், கொசுவலைகள் போடப்பட்டிருக்கிறது. சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது, மாணவ செல்வங்களுக்கு புதிதாக பாய்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குழு, ஆய்வுக்கு சென்ற இடங்களில் எங்கெல்லாம் என்னென்ன குறைகள் இருந்ததோ, அதில் எதையெல்லாம் உடனடியாக சரி செய்ய முடியுமோ, அதையெல்லாம் உடனடியாக செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு உத்தரவிட்டது. அது அத்தனையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை பொறுத்தவரையில், என்னுடன் வந்த வாகனம், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு சென்ற அண்ணா நகர் மற்றும் நாமக்கல் எம்.எல்.ஏ-க்களின் வாகனங்களுக்கு கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என குழு எச்சரித்துள்ளது. எனவே, இப்பகுதி என்.எச் ஏ.ஐ-யின் ரீஜினல் பொது மேலாளர் மற்றும் திட்ட இயக்குநரை நேரில் வர வைத்துள்ளோம். அவர்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்றார்.
from Latest news https://ift.tt/LFdot8n
0 Comments