கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா அரசு சார்பாக மும்பை உட்பட மாநிலத்தின் முக்கிய இடங்களில் ஜம்போ சிகிச்சை முகாம்கள் அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் இதில் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையை செயற்கையாக அதிகரித்து காட்டி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு இந்த ஜம்போ சிகிச்சை மையம் அமைக்க இந்தத் துறையில் அனுபவம் இல்லாத சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக ஜம்போ சிகிச்சை மையம் நடத்திய சஞ்சய் ராவத்திற்கு மிகவும் நெருக்கமான சுஜித் பட்கர் மற்றும் டாக்டர் கிஷோர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
மாநில அரசும் இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமித்தது. இந்த நிலையில் புதிய திருப்பமாக கொரோனா ஊழல் தொடர்பாக முன்னாள் மேயர் கிஷோரி பட்னேகர் மற்றும் சிவசேனா (உத்தவ்) தலைவர்கள்மீது ஊழல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை பதிவுசெய்திருக்கின்றனர். மும்பை மாநகராட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட சுஜித், போலி பில்களைக் கொடுத்து ரூ.31.84 கோடி அளவுக்கு மாநகராட்சியிடமிருந்து வாங்கியிருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ஜம்போ சிகிச்சை மைய ஒப்பந்தம் வாங்குவதற்கு சில நாள்களுக்கு முன்புதான் சுஜித் லைஃப்லைன் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தை ரூ.12,500 செலவு செய்து பதிவுசெய்ததாக அமலாக்கப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
அதோடு ஜம்போ சிகிச்சை மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் டாக்டர்களின் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி, மாநகராட்சியிடம் போலி பில் தாக்கல் செய்து பணத்தை வாங்கி இருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்திருக்கிறது. சுஜித் செய்யும் போலி பில்களுக்கு டாக்டர் கிஷோ ஒப்புதல் கொடுத்து அவரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
from Latest news https://ift.tt/diV3UoL
0 Comments