Doctor Vikatan: பொதுவாகவே சைவ உணவுகளும் வீகன் உணவுகளும் ஆரோக்கியமானவை என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கையில் வீகன் உணவுகளைச் சாப்பிட்டதால் சமீபத்தில் ஒரு பெண் உயிரிழந்த செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது? வீகன் உணவுகள் ஆபத்தானவை என அர்த்தமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
சமீப வருடங்களில் வீகன் உணவுகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. பொதுவாகவே சைவ உணவுகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுகிற வேளையில், இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது சைவம் மற்றும் வீகன் உணவுகள் குறித்த பயம் எழுவது இயல்பானதே.
இந்தச் செய்தியைப் பொறுத்தவரை பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட்டதாலோ , வீகன் உணவுப்பழக்கத்தாலோ அந்தப் பெண் இறந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணமே அவரது உணவில் இல்லாமல் போன ஊட்டச்சத்துகள்தான். தவிர மிகக் குறைவான கலோரிகள் மற்றும் சரிவிகித உணவாக உட்கொள்ளாததுதான் மரணத்துக்கான காரணமாக இருக்கும்.
சைவமோ, அசைவமோ சரிவிகித உணவு என்பதுதான் சரியானது, ஆரோக்கியமானது. அப்படி இல்லாதபட்சத்தில் நிச்சயம் ஊட்டச்சத்துக் குறைபாடு வரும். அதன் விளைவாக உடல்நல பாதிப்புகளும் வரலாம். நம்முடைய உணவில் கார்போஹைட்ரேட், காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து, குறைந்த அளவு ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். சைவம், அசைவம், வீகன் என எந்தமாதிரியான உணவுப்பழக்கத்திலும் இவை சரியான அளவில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
உயிரிழந்த இன்ஃப்ளுயென்சர் பல வருடங்களாக வெறும் காய்கறிகள், பழங்கள், சூரியகாந்தி விதைகளைச் சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்த உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடு, கலோரி குறைபாடு நிச்சயம் இருக்கும். முழுக்க முழுக்க வீகன் உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவோருக்கு, பிரதானமாக ஏற்படுவது வைட்டமின் பி 12 குறைபாடு. இது பெரும்பாலும் அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடியது.
எனவே வீகன் மற்றும் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையோடு வைட்டமின் பி 12 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கூடவே கால்சியம், வைட்டமின் டி குறைபாடுகளும் வராமலிருக்க பருப்பு, சுண்டல், சூப், சுத்திகரிக்கப்படாத தானியங்கள் போன்றவை இருக்கும்படி உணவுகளைத் திட்டமிட்டு எடுத்துக்கொண்டால் பிரச்னைகள் வராது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news https://ift.tt/WUnCyO7
0 Comments