``திருநாவுக்கரசர் பதவிக்காக பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்!” - விஜயபாஸ்கர் காட்டம்

புதுக்கோட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின்பு விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், ``அ.தி.மு.க-வுக்கு மதுரை மாநாடு திருப்புமுனையாக அமையும். இந்த மாநாடு வெற்றி பெற இருப்பதை உளவுத்துறை மூலம் அறிந்த தமிழக அரசு பயத்தில் அதே தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை தவிர்த்து, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல நடந்துகொள்ள வேண்டும். திமுக நடத்தும் உண்ணாவிரதத்தை எல்லாம் தாண்டி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லா தடைகளையும் தாண்டி அ.தி.மு.க தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கிறார். விவாவதிப்பதற்கு நான் 24 மணிநேரமும் தயாராக இருக்கிறேன்.

நல்ல நாளில் தான் நல்ல நிகழ்ச்சி நடைபெறும். ஆன்மீகத்தில் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் வேண்டுமானால் அஷ்டமி, நவமியில் வைத்துக் கொள்ளட்டும். அ.தி.மு.க ஒரு கடல் அலை. சின்ன திரை கொண்டு கடல் அலையை தடுத்து நிறுத்த முடியாது. எல்லா தடைகளைத் தாண்டியும் மதுரைக்கு அ.தி.மு.க தொண்டர்கள் செல்வார்கள். புதுக்கோட்டை மன்னர் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள தனது அரண்மனையை ஆட்சியர் அலுவலகத்திற்காக ஒப்படைத்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு 2 ஏக்கர் அளிப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை.. மன்னர் குடும்பத்தினர் விரும்புகின்ற இடத்தினை அவர்களுக்கு அரசு வழங்க வேண்டும். அ.தி.மு.க எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடுமையின் போது, சாட்சியாக இருந்த திருநாவுக்கரசர் தற்போது பிறழ் சாட்சியாக பதவிக்காக மாறி இருப்பது கண்டனத்திற்குரியது. காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால், வரலாறு ஒரு போதும் மாறாது. யாரும் மாற்ற முடியாது" என்றார்.



from Latest news https://ift.tt/z4bEv7M

Post a Comment

0 Comments