``டூர் போகலாம் என மக்களை அழைக்கிறார்கள்; எடப்பாடிக்கு பயம் வந்துவிட்டது!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நீட் தேர்வு விவகாரத்தில் திமுக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. நீட் வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு. மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது. அதனாலயே அவர் திமுக மீது பழி போடுகிறார். அ.தி.மு.கவினர் பொதுமக்களை திருப்பரங்குன்றம், அழகர் மலைக்கு எல்லாம் போகலாம் என்று ஊர், ஊராக சென்று அழைத்து வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் செல்வதற்கு தயராக இல்லை. அதனால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தியே அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். திமுக-வினர் யாரும் அ.தி.மு.க மாநாட்டிற்கு செல்லப் போவது கிடையாது.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கண்டிப்பாக தமிழக அரசு மாற்றும். அதன்பின்பு நீட் விலக்கு பெறப்படும். காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். முதல்கட்டமாக 10 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் நிலைப்பாடு. சேலம் மத்திய சிறையில் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடித்துள்ளதாக வந்தது தவறான தகவல். அது போன்று எதுவும் நடக்கவில்லை. சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் இருப்பதால், அதற்கு வாய்ப்பு கிடையாது. சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்" என்றார்.



from Latest news https://ift.tt/FlafBu9

Post a Comment

0 Comments