பா.ஜ.க தலைமையிலான அரசால் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை (NEP) நீக்கக் காங்கிரஸ் தலைமையின் கீழ் உள்ள கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்குப் பதிலாக, தரமான கல்வியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் புதிய மாநிலக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “கர்நாடக அரசு சமீபத்தில் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. 2021-ம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் கூட அதைச் செயல்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை. மேலும், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்திருக்கின்றன.
இதற்கு நேர்மாறாக, கர்நாடகாவின் முந்தைய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கையை அவசரமாக அமல்படுத்தியது. கர்நாடக கல்வி முறை நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கிறது. அதனால்தான் பெங்களூரு இன்றும் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக இருக்கிறது. நமது கல்வி முறையால், மாநிலத்தைச் சேர்ந்த பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல பதவியில் இருக்கிறார்கள்.
எனவே, தேசியக் கல்விக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, மாநிலக் கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வருவோம் எனத் தேர்தலில் நாங்கள் உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், பல்கலைக்கழக வேந்தர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது,"தேசிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் தேவைப்பட்டன. அதனால்தான் உடனே அதை ரத்து செய்ய இயலவில்லை.
கல்வி என்பது மாநில பாடம் என்பதால், புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் வரை பழைய கல்வி முறையே தொடரும். அதே வேளையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வகுக்கக் குழு அமைக்கப்படும். மாநில அரசுகளை நம்பாததின் விளைவாகத்தான் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. ஒரு மாநிலத்துக்கான கல்விக் கொள்கையை மத்திய அரசால் திணிக்க முடியாது. அதையும் மீறித் திணிக்கப்படுகிறது என்றால் அது ஒரு சதி என்பதை விளங்க முடிகிறது.
பன்முக கலாசாரம், பன்மைத்துவ சமூகம் உள்ள இந்தியா போன்ற நாட்டில் ஒரே மாதிரியான கல்வி முறையை ஏற்படுத்த முடியாது. பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குப் பட்டியல் சாதி துணைத் திட்டம் (SCSP) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் (TSP) கீழ் மடிக்கணினிகளை விநியோகிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மடிக்கணினிகள் வழங்க எஸ்.சி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி திட்டங்களின் கீழ் ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்ய சமூக நலத்துறை முதன்மைச் செயலருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
from Latest news https://ift.tt/uQ4VlGW
0 Comments