`கற்றல் ஒருபோதும் மனதைக் களைப்படையச் செய்வதில்லை.’ - ஓவியர் லியோனார்டோ டா வின்சி.
கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்று ஏதும் இருக்கிறதா... நிச்சயம் இல்லை. எந்த வயதிலும், எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையெல்லாம் துன்பப்பட்டுவிட்டு, ஒருகட்டத்தில் புதிதாக எதையாவது கற்க முயன்று, அதில் ஆழமாக இறங்குபவர்களில் சிலர் வெற்றி என்கிற பழத்தை எட்டிப் பறித்துவிடுகிறார்கள். வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம், சற்று தாமதமாகவேணும் அவர்களுக்குப் புரிந்துபோகிறது. அந்த வகை மனிதர்களில் ஒருவர், சீனாவைச் சேர்ந்த 57 வயது பெண்மணி வாங் லியுயென் (Wang Liuyun).
பீஜிங்... நார்த் தேர்டு ரிங் ரோடு. அங்கிருக்கும் ஓர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார் வாங். பெருக்குவது, டாய்லெட்டைக் கிளீன் செய்வது, மாப் போட்டுத் தரையைச் சுத்தமாகத் துடைப்பது என ஓயாத வேலை. வேலை முடிந்ததும் குப்பைகளையும் கழிவுகளையும் ஒரு பையில் சேகரித்து, தன் சிறு ஸ்கூட்டரில் எடுத்துக்கொண்டு போய் குப்பைக் கிடங்கில் போடுகிறார். இரவில் தன் சிறு வாடகை வீட்டுக்குத் திரும்புகிறார். தரையில் அமர்ந்து, பிரஷ்ஷையும் பெயின்ட்டையும் எடுத்துக்கொண்டு, தன் மனதில் தோன்றும் சித்திரங்களையெல்லாம் வரைய ஆரம்பித்துவிடுகிறார்.
காலம் முழுக்கக் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் நடக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கு வாய்த்துவிடுகிறது. வாங் லியுயென்னுக்கு வாய்த்ததும் கல்லும் முள்ளும் நிறைந்த, மேடு பள்ளமான பாதைதான். 1966-ம் ஆண்டு, சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் இருக்கும் லௌடி (Loudi) என்கிற அழகான ஊரில் பிறந்தார் வாங். மிக ஏழ்மையான குடும்பம். ஐந்தாவது குழந்தை. மூன்று சகோதரிகள், ஓர் அண்ணன். ஏழ்மையைக்கூட சகித்துக்கொண்டார் வாங். ஆனால், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களின் கேலி அவரைப் பாடாகப்படுத்தியது.
வாங்கின் அப்பாவுக்கு கூன் விழுந்த முதுகு. அதைச் சொல்லிக்காட்டியே கிண்டல் செய்தார்கள் மாணவர்கள். ஓரளவுக்கு நன்றாகப் படிக்கும் மாணவி என்றாலும், இந்தப் பரிகாசத்தால் பள்ளிக்குப் போகவே அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கும் ஒரு முடிவு வந்தது. 17 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தியே ஆகவேண்டிய சூழல். காரணம், ஒன்றுமில்லை... ஃபீஸ் கட்ட பணம் இல்லை.
`நீங்கள் ரிலாக்ஸாக இருக்கக் கற்றுக்கொண்டு பதிலுக்காகக் காத்திருந்தால், உங்கள் மனம் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துவிடும்.’ - அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் எஸ். பரோஸ் (William S. Burroughs).
படிப்பு நின்றுபோய்விட்டது. அடுத்து என்ன செய்வது... வேறென்ன, ஏதாவது வேலை பார்க்கவேண்டியதுதான். நாலு காசாவது கிடைக்குமே! கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்தார் வாங். விவசாயம், மரக்கன்றுகள் நடுவது... என சின்னச் சின்ன வேலைகள். அவருக்கு 20 வயது நடந்துகொண்டிருந்தபோது அவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதற்கு மேல் தனியாக வசிக்க முடியாதே... எந்த ஊராக இருந்தாலும் தனிமையில் ஒரு பெண் இருப்பது ஊராரின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்... அதற்காகவே திருமணம் செய்துகொண்டார் வாங்.
திருமண வாழ்க்கை இத்தனை கசப்பாக இருக்கும் என்று வாங் நினைக்கவில்லை. வாய்த்த கணவர் அவ்வளவு முரட்டுத்தனமான மனிதராக இருந்தார். சதா திட்டு... அடி, உதை... போதாததற்கு வாங் உழைத்துச் சம்பாதித்த பணத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போனார் கணவர். துவண்டுபோனார் வாங். கொடுமையான இல்லற வாழ்க்கையிலும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். குழந்தைக்கு 7 வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கார் விபத்தில் அவர் கணவர் இறந்துபோனார். பிறகு, விற்பனைப் பிரதிநிதி, தையல் வேலை, தூய்மைப் பணி... என என்னென்னவோ வேலைகளைப் பார்த்தார் வாங். அவருக்கும் குழந்தைக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே!
கணவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின், ஜீஜியாங் (Zhejiang) மாகாணத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமத்துக்கு மகளுடன் குடிபெயர்ந்தார் வாங். அங்கு ஒரு மனிதரைச் சந்தித்தார். பேசினார். பழகினார். மிகவும் பிடித்துப்போனது. திருமணம் செய்துகொண்டார். ஜீஜியாங்கில் அமைந்த அந்தக் கிராமத்து வாழ்க்கை சில கதவுகளை அவருக்குத் திறந்துவிட்டது. இப்படியே காலம் முழுக்க சிறு சிறு வேலைகளை மட்டும் செய்துகொண்டிருப்பது உதவாது என்று தோன்றியது. அதோடு வேலை முடிந்து வந்து, வீட்டு வேலைகளை மட்டும் செய்துவிட்டு சும்மா இருப்பது அவருக்கே பிடிக்கவில்லை. பொழுதை விரட்டுவதற்கு அவர் தஞ்சமடைந்த இடம் உள்ளூர் நூலகம்.
கையில் கிடைத்ததையெல்லாம் படித்தார். சீன வரலாறு, ரஷ்ய இலக்கியங்கள்... என எதை எதையோ படித்தார். முக்கியமாக, சீனக் கவிஞர் டு ஃபூ (Du Fu) எழுதிய கவிதைகள் அவரை ஈர்த்தன. புத்தகங்களைப் புரட்டும்போது சில ஓவியங்களும் அவரைக் கவர்ந்தன. அதோடு ஜீஜியாங் அருங்காட்சியகத்துக்கு அவர் போயிருந்தபோது சில ஓவியங்களைப் பார்த்து மலைத்துப்போனார். ஓவியர்களில் இரண்டு பேரின் ஓவியங்கள் அவருடைய கண்முன் வந்து வந்து போயின. அவர்களில் ஒருவர், வாங் ஜிமெங் (Wang Ximeng). இன்னொருவர், ஹுவாங் காங்வாங் (Huang Gongwang). `அவர்களைப்போலவே நானும் ஓர் ஓவியரானால் எப்படியிருக்கும்... என்னால் ஆக முடியுமா... அது சாத்தியம்தானா?’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தார் வாங்.
`நான் எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதற்காக எப்போது பார்த்தாலும் எனக்குக் கற்றுக்கொடுப்பது என்பதை நான் விரும்பவில்லை.’ - முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஓவியத்தின் மீதான ஆர்வம் அவரை விடாமல் துரத்தியது. ஒருநாள் ஹுவாங் காங்வாங் தீட்டியிருந்த ஓவியம் ஒன்றைப் பார்த்தார். அதில் ஃபூச்சூன் மலையை (Fuchun Mountains) வரைந்திருந்தார் ஹுவாங். பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு. அந்த மலையும் ஜீஜியாங் மாகாணத்தில்தான் இருந்தது. உடனே கிளம்பிவிட்டார் வாங். ஆனால், நேரில் அந்த மலையைப் பார்த்தபோது, ஹுவாங்கின் ஓவியம் கவர்ந்ததைப்போல, அது அவரை ஈர்க்கவில்லை. பின்னாளில் ஒரு பேட்டியில் வாங் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... ``ஹுவாங் வரைந்திருந்தது அவருடைய கனவில் வந்த ஒரு காட்சி என நான் உணர்ந்த தருணம் அது.’’ ஓவியம், வாங்கை வசீகரிக்கக் காரணமும் இருந்தது. வாழ்க்கை யதார்த்தத்திலிருந்து தப்பிக்க ஓவியம் ஒரு கருவியாக, ஒரு வடிகாலாக அவருக்கு இருந்தது.
அது 2016-ம் ஆண்டு. கிழக்கு சீனாவில் இருக்கும் ஃபூஜியான் (Fujian) மாகாணத்தில் இருந்தது பழைமையான நகரமான ஷுவாங்க்ஷி (Shuangxi). அங்கே யாரோ இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பதாகக் கேள்விப்பட்டார் வாங். அப்போது அவருக்கு 50 வயது முடிந்திருந்தது. இந்த வயதில் வரையக் கற்றுக்கொள்ள முடியுமா என்றெல்லாம் யோசிக்கவேயில்லை வாங். கிளம்பிவிட்டார். இரண்டு முறை திருமணம் முடித்திருந்தாலும் மகிழ்ச்சி என்பது அவர் கையிலிருந்து நழுவிப்போகும் ஒரு பொருளாகவே அவருக்கு அன்றுவரை இருந்தது. ஓவியம்தான் இனி வாழ்க்கை என வாங் முடிவெடுத்திருந்தார்.
மார்ச் 2017. ஷுவாங்க்ஷிக்கு அவர் கிளம்பிப் போனபோது அவர் கையில் சொற்பப் பணமே இருந்தது (சில நூறு யுவான் கரன்சிகள்). அங்கே லின் ஜெங்லூ (Lin Zhenglu) என்ற ஓவியர் ஓர் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு இலவசமாக பெயின்ட், பிரஷ்கள், கேன்வாஸ் எல்லாம் கொடுக்கப்பட்டன. ``என்ன வரையலாம்?’’ என்று வாங் கேட்டபோது, ``உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை வரையுங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள். கோர்ஸில் சேர்ந்த நான்காவது நாள் ஓர் ஓவியத்தை வரைந்திருந்தார் வாங். ஒரு சிறு நகரத்தின் வசந்தகாலம்தான் தீம். அந்த ஓவியத்தில் வயல்வெளியில் பூக்கள் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன.
ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தார்கள். ஐந்தாவது, ஆறாவது தினங்களில் மேலும் இரண்டு ஓவியங்களை வரைந்திருந்தார் வாங். ``நிலப்பரப்பை அற்புதமாக வரைகிறீர்கள்’’ என்று ஓவியர் லின் ஊக்கப்படுத்தினாலும், வாங்கால் முழுதாக அதை நம்ப முடியவில்லை. இயற்கை ஒருவருக்கு வாரிக்கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. அது வாங் விஷயத்தில் நடந்தது. அந்த வாரம் மனநிறைவோடு ஊருக்குத் திரும்பினார்.
`மாற்றம் என்பது நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்கிறோமோ அதற்கான உண்மையான ரிசல்ட்.’ - அமெரிக்க எழுத்தாளர் லியோ பஸ்காக்லியா (Leo Buscaglia).
அவர் ஊருக்கு வந்த இரண்டே நாள்களில் லின்னிடமிருந்து கடிதம்... கூடவே கொஞ்சம் பணமும் வந்தது. `உங்களுடைய மூன்று ஓவியங்களும் விற்றுவிட்டன. அதற்கான தொகையை அனுப்பியிருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார் லின். 150 யுவான். சிறு தொகைதான். ஆனால், வரைவதில் பணமும் கிடைக்கும் என்பது வாங்குக்கு உற்சாகத்தைத் தந்தது. இன்னும் வரையலாமே என்ற ஆசை பிறந்தது.
அடுத்த வாரம் உள்ளூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கியில் ஒரு தொகையைக் கடனாக வாங்கினார். ஷுவாங்ஷிக்கு மூட்டை முடிச்சோடு கிளம்பிப்போனார். அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் மாத வாடகைக்கு ரூம் போட்டார். தங்கினார். அதிகாலையிலேயே லின்னின் ஓவிய நிலையத்துக்குச் சென்று அவர் பாட்டுக்கு வரைய ஆரம்பித்தார். பெயின்ட், பிரஷ்கள், கேன்வாஸ் எல்லாம் இலவசம் அல்லவா! ஒன்றைக் கண்டுகொண்டார் வாங். ஓவியங்களை வரையும்போது அவருக்குச் சோர்வே ஏற்படவில்லை.
மூன்றே மாதங்கள்... ஐம்பது ஓவியங்களை வரைந்திருந்தார் வாங். அவருடைய உற்சாகத்தையும் திறமையையும் பார்த்து தன் செலவிலேயே அவருடைய ஓவியங்களை வைக்க ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார் லின். அந்த மகிழ்ச்சி ரொம்ப காலம் நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில் ஹோட்டல் வாசலில் வந்து நின்றார் வாங்கின் கணவர். ``உடனே கிளம்பு நம்ம ஊருக்குப் போகலாம்’’ என்றார். வாங் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. ஊருக்கு வந்ததும்தான் அவருக்கு விஷயம் தெரிந்தது. வாங்கின் கணவரிடம் யாரோ, ``ரொம்ப நாளைக்கு உன் மனைவியை இப்பிடி தனியா விட்டுவெச்சேன்னா, அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போற ஐடியால இருக்கான்னு அர்த்தம். போய் கூட்டிட்டு வந்துடு. ஒரு பொம்பளை, அதுவும் ஐம்பது வயசுக்கு மேல ஓவியம் கத்துக்கறாளாம். கேட்கவே வேடிக்கையா இல்லை?’’ என்று பற்றவைத்திருந்தார்கள். நொந்துபோனார் வாங்.
ஒரு வாரத்துக்குப் பிறகு லின் அவரை போனில் அழைத்தார். ``உங்களோட எல்லா ஓவியங்களும் வித்துத் தீந்துடுச்சு’’ என்று சொன்னார். அதற்கான தொகையாக 20,000 யுவான் அனுப்பியிருந்தார். நிறைய பேர் அவருடைய ஓவியங்களைக் கேட்க, அதற்காகவே ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார் வாங். ஆர்டர்கள் வந்தன. அதற்குப் பணமும் வந்தது. புகழ்பெற்ற Shenzhen's Dafen என்கிற ஓவிய கிராமத்தில் ஒரு வருடம் தங்கி இன்னும் கற்றுக்கொண்டார் வாங். அவருடைய திறமையைப் பார்த்து, ஹெனான் மாகாணத்திலிருந்த ஒரு பள்ளியில் அவரை ஓவிய ஆசிரியராகச் சேர்த்துக்கொண்டார்கள். அதுவும் கொஞ்ச காலம்தான். திடீரென்று அடித்த கொரோனா அலை, அவர் வாழ்க்கையையும் சுழற்றிப்போட்டது. வேலை போனது. வேலை தேடி 2020-ம் ஆண்டு பீஜிங்குக்கு வந்தார் வாங். பீஜிங் அவருக்கு அடைக்கலம் தந்தது; பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது; அவரை ஏற்றுக்கொண்டது. அவருடைய கணவருக்கும் ஒரு செக்யூரிட்டி வேலை கிடைத்தது.
பகலில் ஒரு ஆபீஸில் தூய்மைப் பணி. காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை. இரவில் வீட்டுக்கு வந்ததும் பிரஷ்ஷைக் கையிலெடுத்துவிடுவார் வாங். அவர் தன் வாழ்க்கையை நொந்துகொள்ளவில்லை. எல்லாமே அவருக்குப் பாடம்தான். இரவில் வரையும் ஓவியங்களை இணையத்தில் விளம்பரப்படுத்தி, குறைந்த தொகைக்கு விற்கிறார். அவர் குறித்த ஒரு டாகுமென்டரி `Sina Weibo' என்ற சோஷியல் மீடியாவில் வெளியானது. அந்த டாகுமென்டரியை 75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள்.
வாங்கின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் ``50 வயது வரை நான் ஒரு சாதாரண, அடையாளமே இல்லாத பட்டிக்காட்டுப் பெண். இன்றைக்குப் பல லட்சம் பேருக்கு என்னைத் தெரியும். காரணம், 51 வயதில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள நான் ஆசைப்பட்டதுதான்.’’
from Latest news https://ift.tt/5nUyc3d
0 Comments