”இந்தியாவை முன்னிறுத்த முடியாத மல்யுத்த வீரர்கள்; இது பாஜக-வுக்கு அவமானம்" - மஹுவா மொய்த்ரா காட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்திருப்பது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், மல்யுத்த போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பலரும் பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படும் வரை வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

ஆனால், மல்யுத்த வீரர்களை பா.ஜ.க அரசு கைது செய்ய முயன்றபோது அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதலுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கான தேர்தலை 45 நாள்களில் நடத்த மே மாதம் 30-ம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் மல்யுத்த வீரர்கள் போராட்டம், வழக்குகள் காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. ஆனாலும், மல்யுத்த சம்மேளனத் தேர்தல் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். உலக மல்யுத்த கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்ட அவகாசத்துக்குள் இந்திய மல்யுத்த நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தாத காரணத்தால், உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. அதனால், இந்தியா சார்பில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு, இந்திய தேசியக் கோடி, தேசிய கீதம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மஹுவா மொய்த்ரா

இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் நமது தேசிய கொடியின் கீழ் விளையாட முடியாது. ஒரு பாலியல் வேட்டையாளர் எம்.பி. விளையாட்டை தனது காலுக்கு கீழே போட்டு மிதிக்க அனுமதித்ததுக்காக, இது பா.ஜ.க-வுக்கும், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கும் அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.



from Latest news https://ift.tt/C8DJldf

Post a Comment

0 Comments