காரணம் இல்லாமல் அஞ்ஞானிகள் ஞானிகளை வெறுக்கிறார்கள். 'இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை' என்று விவிலியத்தில் ஒரு வாக்கியம் உண்டு. அதற்கு நம் தேசத்தில் உதித்த மகான்களின் வாழ்க்கையே சரியான உதாரணம். கஜானன் மகராஜ் காலத்தில் வாழ்ந்தவர் ஞானேஸ்வர். 'சகலமும் பிரம்மமே' என்று தியானித்து எளிமையான வாழ்வை மேற்கொண்ட ஞானேஸ்வரை வெறுக்கவும் அவர் ஊரில் சிலர் இருந்தார்கள்.
ஒருநாள் பிரம்மம் பற்றி ஞானேஸ்வர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
"இந்த உலகத்தில் அனைத்தும் அந்த இறைவனே. உயிரோடு இருக்கும் அனைத்தும் அந்த இறைவனின் வடிவமே" என்றார். அதைக் கேட்ட மக்கள் உடனே ஆட்சேபித்தனர். ஒரு குறும்புக்காரர், "ஐயா... ஒரு நிமிடம்" என்று சொல்லி அங்கிருந்து ஓடிச் சென்று ஒரு எருமை மாட்டைப் பிடித்துக்கொண்டு வந்தான். சேற்றில் புரண்டு அழுக்காக இருந்த அந்த எருமை மாடு திமிரியது.
அதைப் பிடித்துக் கொண்டு வந்த அந்த மனிதன்,
"ஐயா ஞானவானே... உயிருள்ள அனைத்துக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்றால் இந்த அழுக்கான சேற்றில் புரண்டு வந்திருக்கும் எருமைகுள்ளும் இறைவன் இருக்கிறானா என்ன? பதில் சொல்லுங்கள்" என்று கேட்டுச் சிரித்தான்.
ஞானேஸ்வரை சரியாகக் கேள்வி கேட்டு மடக்கிவிட்டான் என்று அவன் நண்பர்களும் சிரித்தனர். ஊர் மக்கள் ஞானேஸ்வரருக்கு நேர்ந்த அவமானம் குறித்து வருந்தினர். ஆனால் முரடர்களிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கினர்.
ஞானேஸ்வர் புன்னகை செய்தார். "இது என்ன கேள்வி, இந்த மாட்டுக்குள்ளும் இறைவன் ஆன்மாவாக இருக்கிறார்" என்றார்.
"இந்தக் கதை எல்லாம் வேண்டாம். இறைவன் இந்த மாட்டுக்குள் இருக்கிறான் என்பதை நாங்கள் உணர வேண்டும். இல்லை நீங்கள் சொல்வதெல்லாம் பொய் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அடம்பிடித்தனர்.
ஞானேஸ்வர் ஒரு கணம் மனதில் இறைவனைத் துதித்தார். பின்பு அந்த எருமை மாட்டின் மீது தன் கையை வைத்தார். அடுத்த கணம் அந்த மாடு பேசத் தொடங்கியது. வெறும் பேச்சல்ல. வேத கோஷம். அது வேதம் ஓதும் ஒலி அந்த ஊரையே அதிர வைத்தது. நான்கு வேதங்களையும் அட்சர சுத்தமாக எருமை மாடு ஓதியது. இதைக் கேட்ட முரடர்கள் மிரண்டு ஓடினர். எங்கு ஓடினாலும் மாடு சொல்லும் வேதத்தின் ஒலி தங்களைத் தாக்குவதாக உணர்ந்தனர். வேறுவழியின்றி ஞானேஸ்வரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். ஞானேஸ்வர் அவர்களை மன்னித்து அருள்புரிந்தார். அடுத்த கணம் எருமை மாடு மீண்டும் தன் குரலில் கத்திவிட்டு அங்கிருந்து ஓடியது.
ஞானேஸ்வருக்கு மட்டுமல்ல கஜானன் மகராஜுக்கும் இப்படிப் பல இக்கட்டுகள் நிகழ்ந்துள்ளன. கஜானன் மகராஜ் யாருக்கும் தீங்கு செய்யாதவர். சாப்பாடு கூட பந்தியில் அமர்ந்து சாப்பிடாமல் மக்கள் வீணாக்கும் உணவை எடுத்து உண்பவர். நன்மையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்தவர். அப்படிப் பட்டவருக்கும் அந்த ஊரில் எதிரிகள் இருந்தனர்.
ஒருநாள் பாஸ்கராவும் அவர் நண்பர்களும் கஜானன் மகராஜுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாட்டீல் சகோதரர்கள் அங்கே சில கரும்புகளோடு வந்தனர். கட்டுமஸ்தான அவர்கள் வரும் வேகத்திலேயே அவர்கள் சண்டைக்குத்தான் வருகிறார்கள் என்று தெரிந்தது. பாட்டீல் சகோதரர்களில் ஒருவர் பணிவாகப் பேசுவதுபோல், "ஐயா, நீங்கள் பெரிய மகான் என்று இந்த ஊரே சொல்கிறது. அதை நாங்கள் சோதித்துப் பார்த்து இந்த உலகுக்குச் சொல்ல விரும்புகிறோம்" என்றான்.
அதைக்கேட்ட பாஸ்கரா, "அவர் மகான் என்பதை நீங்கள் ஏன் சோதிக்க வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கஜானன், 'அவர்கள் ஆசைப்படுகிறார்கள். செய்யட்டுமே..." என்றார்.
எப்படிப்பட்ட சோதனையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டார் பாஸ்கரா.
"ஐயா இந்தக் கரும்புகொண்டு உங்களை அடிக்கப் போகிறோம். நீங்கள் ஞானி என்பதால் அந்த வலியைத் தாங்கிக்கொள்வீர்கள் என்பதை நம்புகிறோம்" என்றனர்.
அதைக்கேட்ட பாஸ்கரா துடித்துப்போனார்.
"என்ன... சத்குருவை அடிப்பதா... கூடாது" என்று சொல்லித் திமிரினார். உடனே பாட்டீல் சகோதரர்களோடு வந்தவர்கள் அவரைப்பிடித்துக்கொண்டனர். உடனே சுற்றி நின்றவர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிப்போயினர்.
"அடிவாங்கப்போகும் அவரே பேசாமல் இருக்கிறார். நீ ஏன் துடிக்கிறாய்... இங்கே நின்று கண்ணாரப் பார். இல்லை இங்கிருந்து ஓடிப்போ" என்று சொல்லிவிட்டு சத்குருவை அடிக்கத் தொடங்கினார்.
பாஸ்கராவுக்குக் கண்ணீர் பெருகியது. "சத்குருவை விட்டுவிடுங்கள். நாங்கள் இந்த ஊரைவிட்டே போய்விடுகிறோம்" என்று கதறினார். ஆனால் அடிக்க அடிக்க கஜானன் புன்னகை செய்துகொண்டே இருந்தார். வலுவான கரும்புகள் இரண்டாகப் பிளந்தன. ஆனாலும் விடாமல் அடித்தார்கள். தொடர்ந்து சில நிமிடங்கள் அடித்ததில் அடித்தவன் களைப்படைந்தான்.
அவனை அன்போடு பார்த்த சத்குரு,
"பாவம் நீ களைப்படைந்துவிட்டாய். நான் வேண்டுமானால் உனக்கு இந்தக் கரும்புகளில் இருந்து சாறு பிழிந்து கொடுக்கவா?" என்று கேட்டார்.
அப்போதுதான் அவர்கள் சத்குருவின் மேனியைப் பார்த்தார்கள். அதில் சிறு தூசி விழுந்த சுவடுகூட இல்லை. வலி என்பதே அவர் முகத்திலும் இல்லை. சிறு அச்சம் அவர்களுக்குள் படர்ந்தது.
கஜானன் கீழே கிடந்த கரும்புகளைப் பொறுக்கினார். கைகொள்ளும் அளவுக்குக் கரும்புகளை எடுத்து அவற்றைப் பிழியத் தொடங்கினார். ஓர் இயந்திரம் பிழிவதுபோல் கரும்புகள் பிழியப்பட்டு சாறு பெருகிப் பாய்ந்தது. பாஸ்கரா ஓடிவந்து அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் பிடித்தார். அந்தக் காட்சியைக் கண்டவர்கள் சிலைபோல் நின்றனர்.
பாட்டீல் சகோதரர்கள் தாம் பெரும் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தனர். வலி வேதனைகளைக் கடந்தவரும் மனிதர்களால் சாதிக்க முடியாத பெரும் செயலைச் செய்பவருமாகத் திகழ்ந்த சத்குருவை சோதித்து அவரைத் துன்புறுத்திவிட்டோமே என்று பதறினர். அவர் கால்களில் விழுந்து கதறினர்.
மனிதர்களை மன்னிப்பதும் அவர்களுக்கு அருள் வழங்குவதும் தானே மகான்களின் பண்பு. கஜானன் மகராஜ் அவர்களை மன்னித்து அருள்செய்தார். கஜானனின் புகழ் உலகெங்கும் பரவியது.
from Latest news https://ift.tt/kTjqy0f
0 Comments