``உங்க வீட்டுல கொண்டுபோய் கொடுங்கண்ணே..!” - தக்காளி மாலை போட வந்த இளைஞரிடம் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். 7-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு வந்தவர், மங்களாபுரம் பகுதியில் ஆரம்பித்து அரசமரம் வழியாக காமராஜர் சாலை வந்தடைந்தார். அப்போது, அம்புலி ஆற்றுப் பாலத்தின் அருகே நடைப்பயணம் வந்தபோது, கூட்டத்தை கலைத்து அண்ணாமலை அருகே வந்த பா.ஜ.க-வைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் மெக்கா மதீனா புகைப்படத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டவர் அவரை ஆரத்தழுவி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, ஆலங்குடியில் 515 என்ற எண்கொண்ட அம்பாசிட்டர் கார் மூலம் ஆதரவற்றோர்களின் உடலை காரில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்துவரும் கணேசனின் வீட்டுக்குச் சென்றவர், அவருக்கு சால்வை அணிவித்து, அவரை வியந்து பாராட்டினார். வருங்காலங்களில் அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்வதாகக் கூறி கணேசனை நெகிழ வைத்திருக்கிறார். தொடர்ந்து, தொண்டர் ஒருவர் அண்ணாமலைக்கு தக்காளி மாலை அணிவிக்க முயன்றார். அதை வேண்டாம் என்று புன்சிரிப்போடு மறுத்தவர், அவருக்கு நன்றி கூறி, ``உங்க வீட்டுல கொண்டுபோய் மனைவிக்கிட்ட கொடுங்கண்ணே” என்று அந்த மாலையை அவர் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.

தொடர்ந்து, ஆலங்குடியில் பிரத்யேக வாகனத்தில் நின்று பேசும்போது, ``ஆலங்குடியில் தி.மு.க-வினரின் அராஜகத்தால் இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் தந்தையை இழந்து நிற்கின்றனர். தி.மு.க-வின் ஆட்சி என்பது தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதுதான். சிறுவர்களின் தாய் இறக்கும்போது, தி.மு.க-வினரின் அராஜகம் பற்றி தெளிவாக எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். இதில், உண்மையான நீதி கிடைக்கவில்லை. தி.மு.க-வைப் பொறுத்தவரை கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்பதுதான் முகவரி, அடையாளம். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ மெய்யநாதன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், துறை எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. பின்னோக்கித்தான் சென்றிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியாவில் தமிழகம் 21-வது இடம். அமைச்சரின் துறை கடைசி வரிசையில் இருக்கிறது. இதுதான் அமைச்சரின் சாதனை.

மற்றோர் அமைச்சர் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர், அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. சிறையில் இருக்க வேண்டியவருக்கு, சிறைத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கின்றனர். இங்குள்ள அமைச்சர்கள் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஏற்கெனவே புதுக்கோட்டைக்கு இருந்த நாடாளுமன்றத் தொகுதியை மீட்டுக் கொண்டுவர வேண்டும். மோடி பிரதமராக வந்த பிறகு இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் முற்றிலுமாக அமைதி திரும்பியிருக்கிறது. வடகிழக்குப் பகுதியில் 60,000 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு. யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் கட்டிக்கொடுத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்" என்றார்.



from Latest news https://ift.tt/3H8umXE

Post a Comment

0 Comments