ராகுல் காந்தி மீண்டும் எம்.பி-யாகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர், தனது தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டிற்குச் செல்ல, முதன்முறையாக ஊட்டிக்கு நேற்று வருகைத் தந்திருந்தார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்த ராகுல், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வந்தார். வரும் வழியில் வரவேற்க காத்திருந்த மக்களைச் சந்திக்க காரிலிருந்து இறங்கி, அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
ஊட்டி அருகிலுள்ள எல்லநள்ளி பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவைச் சந்தித்து, கலந்துரையாடினார். பின்னர் அவருடன் அங்கேயே மதிய உணவையும் சாப்பிட்டார். அங்கிருந்து ஊட்டிக்குக் கிளம்பிய ராகுல், சேரிங்கிராஸ் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, ஊட்டி அருகிலுள்ள முத்தநாடு தோடர் பழங்குடி கிராமத்திற்குச் சென்றார்.
ஒட்டுமொத்த தோடர் பழங்குடிகளின் குலதெய்வமான மூன்பா கோயிலுக்குச் சென்றார். அந்த மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தோடரின மக்கள் பழங்காலத்தில் இயற்கை முறையில் தீ மூட்டும் முறைகளை செய்து காண்பித்தனர். காய்ந்த குச்சிகளைக் கொண்டு தீ மூட்டும் முறையை ராகுல் காந்தியும் ஆர்வத்துடன் முயற்சித்துப் பார்த்தார். தோடர் இளைஞர்கள் தங்கள் உடல் வலிமையை நிரூபிக்கும் முறையான இளவட்டக்கல்லை ராகுல் முன்னிலையில் தூக்கிக் காண்பித்தனர்.
அந்த மக்களின் அடையாளங்களி0ல் ஒன்றாக விளங்கிவரும் பாரம்பர்ய உடையான பூத்துக்குளியை அணிந்து அவர்களுடன் கைகோத்து பாரம்பர்ய நடனமாடி மகிழ்ந்தார். அங்கிருந்த பழங்குடி குழந்தையைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தமிட்டு விட்டு ' ஐ லவ் டிரைபள் பீப்பிள்' எனச் சொல்லி, வயநாடு நோக்கிப் புறப்பட்டார். ராகுல் காந்தி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில சாலைகளில் சில மணி நேரம் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.
from Latest news https://ift.tt/q81WgQL
0 Comments