Doctor Vikatan: தூக்கமின்மைக்கு அமுக்கரா மாத்திரை... தினமும் எடுப்பது சரியானதா?

Doctor Vikatan: நான் பல நாள்களாக தினமும் அமுக்கரா மருந்து எடுத்து வருகிறேன். அதனால் எனக்கு இரவில் நல்ல தூக்கம் வருகிறது. இதை எந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரிலும் நான் எடுக்கவில்லை. இணையதளத்தில் கட்டுரைகளைப் பார்த்து நானாகவே பின்பற்றி வருகிறேன். தினமும் அமுக்கரா எனப்படும் அஷ்வகந்தா மருந்து எடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

அமுக்கரா மாத்திரை அல்லது சூரணம் மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கும் அற்புதமான சித்த மருந்து. மருந்து என்று வரும்போது, அதுவும் நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் இருப்பின் சுயமாக எடுக்காமல், ஒரு மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவர், தேவைப்படும் மருந்திற்கான நாள் கணக்கு, மருந்தின் அளவு போன்றவற்றை முறைப்படுத்திக் கொடுப்பார். சித்த மருந்துகள் போன்ற இயற்கை மருந்துகளாக இருப்பினும் நீண்ட நாள் என்று வரும் போது, மருத்துவரின் மேற்பார்வை முக்கியம்.

அஞ்சறைப் பெட்டி பொருள்களை வைத்தோ, மூலிகைகளை வைத்தோ, பாரம்பர்யமாக நாம் பின்பற்றும் எளிய மருந்துகளை பற்றி அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் நாள்கணக்காக மருந்துகளின் தேவை இருப்பின் மருத்துவர் ஆலோசனையோடு மருந்துகளை எடுப்பதே சிறந்தது. மூளையின் நரம்புகளைப் பாதுகாக்கும் அமுக்கராவின் ஆற்றல் குறித்து ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப்போடும் ஆற்றலும் அமுக்கராவிற்கு உண்டு.

சீமை அமுக்கரா

இதிலிருக்கும் ‘விதனலாய்டு’ எனும் வேதிப்பொருளுக்கு மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மையும் இருக்கிறது. அமுக்கரா அற்புதமான மருந்து என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்கள் உடலில் தேவைக்கேற்ப, குறிகுணத்தின் தன்மைக்கு ஏற்ப சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது சிறப்பு!

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/ZPCfnjK

Post a Comment

0 Comments