`காவலர் பயிற்சியில் மலர்ந்த காதல்' தமிழ் முறைப்படி திருமணம்; விழுப்புரத்தில் நடந்த மணவிழா!

விழுப்புரம், முத்தியால் நகர் பகுதியை சேர்ந்த வேலுமணி - பரமேஸ்வரி தம்பதி, பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்டர் (எ) அஜித்குமாருக்கு அந்நாட்டை சேர்ந்த கேன்சா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த காதலர்கள், தங்களது பெற்றோர்களிடம் பேசி சம்மதம் பெற்றுள்ளனர். தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பியவர்கள், அண்மையில் விழுப்புரம் வந்து, திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

பிரான்ஸ் மங்கையை மணந்த இந்திய வம்சாவழி இளைஞர்

அதன்படி, விழுப்புரம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை சுப முகூர்த்தத்தில் அந்தக் காதலர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம், விழுப்புரம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, புது மாப்பிள்ளை விக்டர் (எ) அஜித்குமாரிடம் பேசினோம். "நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே பிரான்ஸ்தான். பள்ளி படிப்பை பிரான்ஸில் முடித்த நான், இளங்கலைப் படிப்பை லண்டனில் பயின்றேன். இப்போது பிரான்ஸ் நாட்டில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய அப்பாவிற்கு பூர்வீகம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் தான். ஆனால், விழுப்புரத்தில் தான் வசித்து வந்தார். சென்னையில் சில வரும் தங்கி வேலை செய்து வந்தார். 

விக்டர் (என) அஜித்குமார் - கேன்சா

என்னுடைய அம்மா, புதுவையை சேர்ந்தவர். அப்பா, அம்மாவை திருமணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து, 1991ல் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். என் உடன்பிறந்தோர் உட்பட நானும் பிரான்ஸ் நாட்டில் பிறந்திருந்தாலும், வளர்க்கப்பட்டது தமிழ் கலாச்சார முறைப்படிதான். அதேபோல், வருடத்திற்கு மூன்று முறையாவது குடும்பத்துடன் விழுப்புரம் வந்து செல்வோம். நான், தீபாவளி போன்ற முக்கிய நாட்களின் போது வருடத்திற்கு ஒருமுறை விழுப்புரத்திற்கு அப்பாவுடம் வருவேன். தமிழ் கலாச்சாரம் எங்களுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. நான் கேன்சாவை பார்த்தது, 4 வருடம் முன்பாக காவல்துறை பயிற்சியின் போதுதான். எங்களுடைய அணியில் தன்னார்வலராக அவர்கள் பணியாற்றிய போது, பார்த்து பேசி, காதலாக மாறியது. இப்போது பல் மருத்துவராக இருக்கிறார். 

சுமார் 2 வருடம் முன்பு, நாங்கள் காதலிக்கும் விஷயத்தை அவரவர் வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டோம். ஆரம்பத்தில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். தமிழ் கலாச்சாரத்தின்படி, சொந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலோடுதான், விழுப்புரத்தில் திருமணத்தை நடத்தினோம். கேன்சாவிற்கும் அதில் விருப்பம்தான். நம் தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணத்தை கண்டு, 'மிகவும் அழகாக இருந்தது. புதுமையாக இருந்தது' என்றார் கேன்சா. அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கும் திருமணம் நடைபெற்ற விதம் மிகவும் பிடித்துவிட்டது.

பிரான்ஸ் மங்கையை மணந்த இந்திய வம்சாவழி இளைஞர்

நானும், கேன்சாவும் பிரான்ஸில் அரசு பணியில் இருக்கிறோம். தமிழ்கத்திற்கே திரும்பி வருவது பற்றி எதிர்காலத்தில் முடிவு செய்வோம். எங்கள் குழந்தைகளை 100% தமிழ் முறைப்படிதான் வளர்ப்போம்" என்றார் முகத்தில் புன்னகை மலர..!



from Latest news https://ift.tt/gvUNR7c

Post a Comment

0 Comments