WAGNER: புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட `வாக்னர்’ குழு தலைவர் விமான விபத்தில் பலி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, ரஷ்யாவில் புதினுக்கு எதிராக செயல்பட்டதன் மூலம் உலகின் கவனத்துக்கு வந்தது `வாக்னர்’ என்ற தனியார் ராணுவக் குழு. உக்ரைன் போரில் பணியாற்றிய ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலருக்கும் வாக்னர் குழுவுக்கும் ஏற்பட்ட பகை கடந்த ஜூன் மாதத்தில் கிளர்ச்சியாக வெடித்தது. பின்னர் இந்த விவகாரம் இரு தரப்பிலும் பேசி சுமூகமாக முடித்துக்கொள்ளப்பட்டது.

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின்

இந்நிலையில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் உள்ளிட்ட 9 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில், இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் ஒருவர் என ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

வாக்னர் குழுவும் யெவ்ஜெனி ப்ரிகோஜினும்... யார் இவர்?!

வாக்னர் குழு ஒரு தனியார் ராணுவ குழு. கூலிப்படை என்றும் அழைக்கலாம். டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தக் குழுவை உருவாக்கினர். வாக்னர் குழு உக்ரைன் போரில் பெரும் பங்கு வகித்தது. இக்குழுவில் கடந்த ஜூன் மாதத்தில் 50,000க்கும் மேலான வீரர்கள் இருந்தார்கள் என்பது தகவல். தொடக்கத்தில் ரகசிய குழுவாக இருந்தபோது, வாக்னர் குழுவில் 5000 வீரர்கள் மட்டுமே இருந்தனராம். 2015க்கு பின்னர் இந்த குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் களம் இறக்கப்பட்டது.

வாக்னர்: யெவ்ஜெனி ப்ரிகோஜின் - புதின்

அதாவது, உலகில் உள்நாட்டு போர் நடக்கும் இடங்களில் இவர்கள் கூலிப்படையாக செயல்படுவார்கள். யார் நிதி அளிக்கிறார்களோ அவர்களுக்கான போரிடுவார்கள். ஈவு இரக்கமற்ற இவர்களின் போர் முறை, கொடூரமானது என்கிறார்கள். மேலும், பாலியல் வன்கொடுமை, மாஸ் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் புதினும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் சில குற்ற சம்பவங்களுக்காக சிறை சென்ற யெவ்ஜெனி ப்ரிகோஜின் பின்னர் ஹோட்டல் தொழிலில் ஆர்வம் காட்டினார். பின்னாள்களில் 'புதினின் செல்ல சமையல்காரர்' என்ற பெயரையும் பெற்றார். இந்த வார்னர் குழு, புதினின் சொந்த தனியார் ராணுவம் என்றும், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கி அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் சொல்லாப்படுகிறது.

சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள் காரணமாக, ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாமல் போகும் சட்ட விரோத நடவடிக்கைகளை இந்த வாக்னர் குழு மூலம் புதின் செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரிலும் கூட ரஷ்யா ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை வாக்னர் ஆயுதக் குழுவினர் விளாடிமிர் புதினுக்காக செய்துள்ளது.

இக்குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். மேலும் ஆயுதங்கள் இன்றியும் தனித்து போரிடும் திறனும் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைமென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும் இந்த குழுவினர், `கொடூர கொலைக்காரர்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர். புதினுக்கு நெருக்கமான இருந்த வாக்னர் குழு, உக்ரைன் போரின் போது, பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.

அப்போது தான் ரஷ்ய ராணுவத்துக்கும், வாக்னர் குழுவுக்கும் மோதல் வெடித்தது. இதில் தான் ரஷ்யாவை கைபற்றுவோம் என வாக்னர் குழு சபதம் எடுத்தது. பின்னர் ரஷ்ய அதிபர் புதின், ``வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல். கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்" என எச்சரித்தார். பின்னர் வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து பின்வாங்கியது.

இந்த நிலையில் தான் தற்போது வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



from Latest news https://ift.tt/Y4rubiq

Post a Comment

0 Comments