“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க... அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?”
“ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் ஐந்து ஷரத்துகளைத் திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதில் 356-வது பிரிவு மட்டும்தான் மாநில உரிமைகளைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் பிரிவைப் பயன்படுத்தித்தானே அ.தி.மு.க அரசை கலைக்க வேண்டுமென்று, இன்றைய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்திலிருந்து சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேறி, ஆளுநரிடம் சென்றார்... அன்றைக்கு மாநில உரிமை பாதிக்கப்படவில்லையா... 1991-ல் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது. தி.மு.க-வுக்கு அப்போது மாநில உரிமை பறிபோகவில்லையா... இப்போது பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த தேர்தல் ஆணையம் முயன்றால் மாநில உரிமை பாதிக்கப்படும் என்கிறார்களே... இது என்ன நியாயம்?”
“ஒரே சமயத்தில் எல்லாத் தேர்தல்களையும் நடத்தினாலும், தனித்தனியாக நடத்தினாலும் பணம் மிச்சமாகாது என்கிறதே தி.மு.க?”
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தை 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதை வாங்க 9,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஒரு முறை வாங்கினால் 3 முறை மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்திவிடலாம். தனித்தனியாக நடத்தினால் செலவு கூடத்தானே செய்யும்... இதைக் கொண்டு வருகிற இடத்தில் தி.மு.க இல்லை என்பதுதான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் அரசாக இருந்திருந்தாலோ அல்லது பா.ஜ.க கூட்டணியில் அவர்கள் இருந்திருந்தாலோ முதல் ஆளாக ஆதரித்திருப்பார்கள். ஐயோ நாட்டின் பொருளாதாரத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று கொடிபிடித்துக்கொண்டு பேசியிருப்பார்கள். இன்றைக்கு இவர்களுக்கு ஆகாதவர்கள் மத்தியில் இருப்பதால், குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்.”
`` `தேர்தல் ஆணையத்தையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்யத் துடிக்கிறது’ என்ற விமர்சனத்தையும் தி.மு.க வைக்கிறதே?”
`` `தேர்தலை நாங்கள் நடத்துவோம்’ என மத்திய அரசு சொல்லவில்லை. தேர்தல் ஆணையம்தான் வழக்கம்போல நடத்தப்போகிறது. ஆனால், சட்டத் திருத்தம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. மத்திய அரசு தங்கள் முன்மொழிதலை தேர்தல் ஆணையத்திடம் கேட்கும். ஆனால், மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும்.”
“காமராஜர் அரங்கத்தோடு முடிந்திருக்கவேண்டிய சனாதன விவகாரத்தை, உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-தானே வளர்த்துக்கொண்டிருக்கிறது?”
“அரங்கத்தோடு முடிந்திருக்க வேண்டுமா, இல்லையா என்பதை எதிர்க்கட்சிகள்தான் முடிவுசெய்ய வேண்டும். `எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்?’ என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின்தானே கேட்டார்... தைரியம் இருந்தால் உதயநிதி பேசியதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அவர் படித்துவிட்டுத்தானே சென்றார்! `எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டேன்... என்னுடைய கருத்து இல்லை’ என்று சொல்ல வேண்டும். தவற்றைச் செய்துவிட்டார்கள் என்று தெரிந்ததால், தப்பிக்க வழி தெரியாமல் திணறுகிறார்கள். அதனால் துணைக்கு அ.தி.மு.க வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.”
“தேசிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்த பிறகும்கூட அமைச்சர் உதயநிதி பின்வாங்கவில்லையே! அ.தி.மு.க-தானே எதையும் உறுதியாகச் சொல்லாமல் நழுவுகிறது?”
“சனாதனத்தை ஒழிப்போம் என்று மீண்டும் உதயநிதி எங்கே சொன்னார்... `நான் சொன்ன அர்த்தம் அது இல்லை, இது இல்லை’ என்றுதான் பூசி முழுகுகிறார். நாங்கள் எந்த ஆதிக்கத்தையும் ஆதரிக்கவில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். இவர்கள் மக்கள் பிரச்னைகளை விட்டுவிட்டு இதன் பின்னால் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?”
“திராவிடம் என்கிற வார்த்தையே சனாதனம் கொடுத்தது என்கிறாரே எல்.முருகன்?”
“திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இல்லை. தமிழ்ச்சொல்லும் இல்லை. வடக்கே இருப்பவர்கள், தென்னிந்தியாவில் வாழ்கிற பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்தான் திராவிடம். ராகுல் திராவிட் பிராமணர். அவருக்கு அவரது பெயருக்குப் பின்னால் எப்படி திராவிட் என்று வந்தது... எனவே, எல்.முருகன் அவருக்குக் கிடைத்த தரவுகள் எதையாவது வைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால், இங்கிருக்கும் திராவிட அமைப்புகள் ஆதிக்கத்துக்கு எதிரான பெயராக அதை சூட்டிக்கொண்டார்கள். அதன் வழித்தொடர்ச்சியாக வந்தவர்கள் என்பதற்காக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் `திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.”
“சரி பா.ம.க-வோடு உரசல், அண்ணாமலையோடு சலசலப்பு... தேர்தல் களத்தில் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுவீர்கள்?”
“கருத்து மாறுபாடு வரத்தான் செய்யும். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு கேட்க மாட்டேன் என்று பிரசாரத்துக்கே செல்லாதவர் வேல்முருகன். காங்கிரஸ் கட்சி இனப்படுகொலைக்குத் துணைபோனது. காங்கிரஸ் கட்சியுடன் நாடாளுமன்றத்தின் முன்பு நின்று 2021-ல் பேட்டி கொடுத்தவர் வைகோ. கொடி ஏற்றுவது ஜனநாயக உரிமை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடி ஏற்றினால் அடித்து விரட்டுகிறது காவல்துறை. இவையெல்லாம்தான் முரண்பாடு. ஆனால் தி.மு.க என்ன தவறு செய்தாலும் சரணாகதி அடைந்து கிடக்க வேண்டுமென்று அதன் கூட்டணிக் கட்சிகள் நினைக்கின்றன. எங்கள் கூட்டணியில் அவரவர் கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல உரிமை இருக்கிறது.”
“தி.மு.க-வும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 கோடியை எட்டிவிட்டதாகச் சொல்கிறார்களே! நாடாளுமன்றத்தில் அவர்கள்தானே 3-வது பெரிய கட்சி?”
“எங்களுடைய உறுப்பினர் சேர்க்கை மிகத் துல்லியமாக நடைபெற்று, அதற்கான ஆவணங்களை வைத்திருக்கிறோம். எம்ஜிஆர் மாளிகையில் இருக்கிறது. தி.மு.க அப்படித் துல்லியமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தியதா... எங்களில் பாதிதான் அவர்கள். போன தேர்தலில் வாக்கு வித்தியாசம் 3%-தான். வரும் தேர்தலில் அதுவும் மாறும்.”
“தமிழ்நாட்டில் நீங்கள்தான் பெரிய கட்சி என்கிறீர்கள்... ஆனால் சிறிய கட்சிகள்கூட பா.ஜ.க-வோடுதான் பேசுகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வது?”
“இது தவறான புரிதல். யார், யாரோடு நட்போடு இருக்க வேண்டுமென்று நாங்கள் சொல்ல முடியாது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்களோடு மிக இணக்கமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி என்பதை பா.ஜ.க தலைவர்களே சொல்லுகிறார்கள்.”
“அப்பா தொழிலை மகன் செய்ய வேண்டுமென்பது குலத்தொழில், அதனால் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ஏற்க முடியாது என தி.மு.க எதிர்க்கிறதே?”
“அப்பா செய்யும் தொழிலை மகனும் செய்ய வேண்டும், அதற்கு சலுகை கொடுப்போம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி செய்ய முடியாது என்பது என் கருத்து. ஒருவேளை அப்படி ஒரு திட்டம் வரும் என்றால் அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/JWSfrVB
0 Comments