``எல்லாரும் காசு கட்ட வேண்டும்'' செக் வைக்கும் எலான் மஸ்க்... சாதிப்பாரா? சரிவைச் சந்திப்பாரா?

பொழுதுபோக்கைத் தாண்டி அரசியல், சினிமா, விவாதம் என உலகம் முழுவதும் நம்பகத்தன்மையான அறிவிப்புகளை பெரும்பாலும் ட்விட்டரில் பார்க்க முடியும். இதனால் அனைத்து விதமான மக்களும் ட்விட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களைச் செய்தார். 

எலான் மஸ்க்

பணிநீக்கம், ப்ளூ டிக் முதல் ட்விட்டரின் பெயரை X என மாற்றியது வரை எலான் செய்த மாற்றங்கள் பலவும் விவாதத்துக்கு உள்ளாக்கியது.

எலான் மீது என்னதான் கற்கள் வீசப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அந்தக் கற்களை அடுக்கி அதன் மீது உட்கார்ந்துகொண்டு எலான் ஆளுமை செய்யத் தவறியதில்லை. அந்த வகையில் உலகின் பணக்காரர் பட்டியலில் இருந்து சரிந்தாலும், மீண்டும் அந்த இடத்தை அடையும் விஷயம் அவருக்குப் பிடிபட்டு இருக்கிறது.

சமயங்களில் பல எதிர்ப்புகளைக் கிளம்பினாலும் தனது முடிவில் எலான் தீர்க்கமாக இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகுவின் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். 

அதில் அனைத்துப் பயனர்களுக்கும் ஷாக் அளிக்கும் வகையில், 100% சப்ஸ்கிரிப்ஷன் கொண்ட சமூக வலைதளமாக X தளம் விரைவில் மாற உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய மஸ்க், ``அனைத்துப் பயனர்களுக்கும் சிறிய மாதாந்தரக் கட்டணத்தை வசூலிப்பது குறித்து பரிசீலிக்க உள்ளேன். இணையதளத்தில் பெருகிவரும் பாட்களின் (bots) பரந்த படைகளை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருக்கும்.

twitter

தற்போதைய எக்ஸ் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு இருக்கும் செலவைவிடக் குறைந்த விலை அனைத்து பயனர்களிடமிருந்தும் வசூலிக்கப்படும். அது சிறிய தொகையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், எவ்வளவு தொகை வசூலிக்கப்படும் என்று இதுவரை அறிவிக்கப்பட வில்லை. வரும் காலங்களில் பணம் செலுத்தினால்தான் அனைவருமே X தளத்தை உபயோகிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம். 

ஒரு புறம் `சிறிய கல், பெரிய லாபம்' என அனைத்து பயனர்களிடமிருந்து பணம் பெறலாம் என்ற யுக்தி ஹிட் அடிக்கிறதோ இல்லையோ, பயனர்கள் வேறு சமூக தளங்களுக்குச் சிறகடிக்கும் நிலையும் ஏற்படலாம். 

பொறுத்திருந்து பார்ப்போம்!



from Latest news https://ift.tt/q3XKBd7

Post a Comment

0 Comments